குந்தி
கண்ணனது சொற்படி அருச்சுனன் ‘வஞ்சரீகம்’ எனும் அம்பினால் கன்னனைக் கொல்கிறான்.
கன்னன் குற்றுயிராய்த் துரியோதனன் போன்றோர் மிகுந்த வருத்தம் அடையும்படி வீழ்ந்துக்
கிடக்கின்றான்.இச்செய்தியை அசரீரியாலறிந்த குந்தி கதறிக்கொண்டு போர்க்களத்தை நோக்கி
ஓடி வருகின்றாள்.
குந்தி தன் உள்ளம் துன்பத்தால் உருகவும்,
கண்ணிர் பெருகவும், குழல் கற்றை சரிந்து விழவும் வருகின்றாள். வந்தவள் கோவெனக் கதறித்
தலையிலடித்து அழுகின்றாள். தான் கன்னனை ஈன்று அருளிள்ளாமல், பொற்பேழையில் விடுத்து,
கங்கையாற்றில் விட்ட செய்தியை அவள் கூறிப் புலம்புகின்றாள். மேலும் அவன்றன் வீரத்தன்மை
போன்றன கேட்டு மகிழ்ந்திருக்கும் நாளில் அவன் இறந்துபட்டதை எண்ணி உள்ளம் வெதும்பி அழுகின்றாள்.
மேலும், கன்னன் பாண்டவர் ஐவரையும், துரியோதனாதியர்
நூற்றுவரையும் தம்பியராக அடையும் பேறு பெற்றவன். இவர்கள் அவன் ஆணைப்படி ஒழுக வேண்டியவர்கள்.
உலகினை ஒரு குடைக்கீழ் ஆளும் நிலையினை எய்தியவன். இத்துணைச் சிறப்புகள் அவன் அடைந்திருந்தும்
விதியின் வலியினாலும் கடவுளர் மாயத்தினாலும் அழிவுற்றனவே என அரற்றுகின்றான். முன்னர்
கன்னன் குந்தியிடமிருந்து பெற்ற வேண்டுகோளின்படி அவள், அவனை எடுத்தணைத்துத் தன் மகனெனக்
கூறிக் கதறுகின்றாள்.
குந்தியின் நிலை மிகவும் வருத்தத்திற்குரிய
ஒன்றாகும். முதன் முதலாகத் தான் பெற்ற கன்னனை மகனென்று வெளியே கூற முடியவில்லை. பின்னர்ப்
பெற்ற பாண்டவருள் அருச்சுனனுக்குக் கன்னனால் இடர் வருவதனையும் கண்ணன் வாயிலாக அறிந்திருந்தாள்.
அருச்சுனனால் கன்னனுக்கு ஏதம் வருதலையும் அவள் அறிவாள். தனக்குப் பிறந்த மக்களே ஒருவருக்கொருவர்
பகையான தன்மை கண்டு உள்ளம் நோகின்றாள். இந்நிலையில் கன்னனின் இழப்பு அவளுக்குப் பெருந்துன்பத்தை
உண்டாக்குகின்றது.
கன்னன் அனைவருக்கும் மூத்தவனாகையால் ஐவரும்
நூற்றுவரும் தனக்குப் பணிவிடை செய்ய வாழ வேண்டியவன். கன்னன் தன் மகன் என்று குந்தியறிந்தும்,
அதனை வெளியிட முடியாத சூழலில் துன்பமுற்றாள். எல்லா நலன்களையும் எய்தியிருந்த கன்னன்
இழப்பிற்குக் குந்தி கூறும் காரணம் விதியின் வலிமையும் கடவுளர் மாயமுமேயாகும். இங்குக்
கடவுளர் மாயமென்பது குறிப்பாக்க் கண்ணனைச் சுட்டுகின்றதெனலாம். எனவே குந்தி தன் மகன்
கன்னன் இறப்பிற்கு மேற்குறித்த இரு காரணங்கைக் கூறிப் புலம்புகின்றாள். போர்க்களத்தில்
பெரு வீரனாகக் கன்னன் இறந்தாலும், அவனைப் பெற்ற தாய் அவன் இழப்பிற்காக ஏங்கியழுவது
நம்முள்ளத்தை உருக்குகின்றது.
பார்வை நூல்
1.
தமிழ்க் காப்பியங்களில்
அவலச்சுவை – முனைவர் அ.கோபிநாத், இந்திரா பதிப்பகம், திருச்சி -620 005.
Comments
Post a Comment