பெண்ணின் பருவச்
சடங்கு
ஒரு பெண்ணின் முதல் பூப்பு நிலையே பருவம்
எய்தியதனைக் குறிக்கும். முதல் பூப்பினால் ஒரு பெண்ணின் உடல்நிலை தாய்மை எய்துதற்குரிய
பக்குவத்தினை அடைவதால் அதனை மணப்பருவமாகவும் கொண்டனர். ஒரு பெண் பருவம் உற்றதும் அவள்
பேதைப் பருவத்திலிருந்து நீங்கிப் பெதும்பைப் பருவத்தை அடைந்தாள் என்பதும், அப்பெதும்பைப்
பருவம் கன்னிமைப் பருவம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அஞ்சாது புறத்துப் போய் விளையாடும் ஒரு பெண்
பருவம் உற்ற நிலையில் எய்திய மாற்றத்தினையும், தீய சக்திக்கு ஆட்படாதவாறு, அப்பொழுது
அவளுக்குச் சில காப்புகள் செய்ததையும்,
”முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின
தலைமுடி
சான்ற தண்தழை யுடையை
அலமரல்
ஆயமொ டியாங்கணும் படாஅல்
மூப்புடை
முதுபதி தாக்கணங் குடைய
காப்பும்
பூண்டிசின் கடையும் போகலை
பேதை
அல்லை மேதையங் குறுமகள்
பெதும்பைப்
பருவத் தொதுங்கினை....” (அகம்:1-7)
என்ற அகநானூற்றுப்
பாடல் கொண்டு அறிய முடிகின்றது.
இலக்கியங்களில் பெண்ணின் பருவ நிலையினை வெளிப்படையாக
அன்றி, மறைமுகமாகக் கூறியதையும் அறியமுடிகின்றது. சிந்தாமணியில், பதுமை பருவம் எய்தியதனைத்
திருத்தக்கத்தேவர், ”கொம்பில் நங்கை பூத்தாள்” என்ற தொடர் மூலம் குறிப்பாகப் புலப்படுத்துவார்.
பெண் பூப்பெய்துதல் பெற்றோர்க்கு மகிழ்ச்சிதரும் செயலாதலால், அம்மகிழ்ச்சியைப் பலருமறியப்
பறையறைந்து அறிவித்து, செல்வத்திரளை எல்லார்க்கும் கொடையாக அளித்தமையைப் பதுமையார்
இலம்பகம் கொண்டு அறியமுடிகின்றது.
ஒரு பெண் பருவமடைந்தால் அவள் சில நாட்கள்
வரை தூய்மையற்றவளாகக் கருதப்படுவாள். அவளுக்கென்று தனியறை ஒதுக்கப்படும். அவள் எதனையும்
தொடக்கூடாதென்பதும், அவள் தொட்டப் பொருள்கள் தூய்மையற்ற (தீட்டுப்) பொருள்கள் என்பதும்,
அதனால் அம்மகளிர் ‘கலந்தொடா மகளிர்’ எனப் பெயர் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.
பெண் தனித்திருக்கப் பெற்ற பத்து நாட்களிலும்
சில சடங்குகள் நிகழ்த்தப் பெறும். பூப்படைந்த அன்று பெண்ணை மகளிர் சூழ்ந்து நீராட்டுவர்.
மஞ்சள் நீராட்டு
பருவம் அடைந்த பெண் பத்து நாள் வரை துய்மையற்றவளாக்
கருதப்பட்டு, பதினோராம் நாள் அவளைத் தூய்மைப்படுத்தற்பொருட்டுச் செய்யப் பெறும் சடங்கே
மஞ்சள் நீராட்டு விழாவாக அமைகின்றது, இதனைப் பூப்பு நீராட்டு விழாவாக அமைகின்றது. இதனைப்
பூப்பு நீராட்டு விழா எனவும் குறிப்பிடுவர். தலைக்கு நீர் ஊற்றுதலாகிய இச்சடங்கு ‘மஞ்சனம்
ஆட்டல்’ எனவும் ‘தலைப்புனல் மூழ்குதல்’ எனவும் காப்பியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது.
பூப்படைந்த பெண்ணிற்குப் பதினோராம் நாள்
தலைக்கு எண்ணெய் வைத்து நீராட்டுவர். பூப்படைந்தோரும், மகவு சான்றோரும் இது போன்ற தூய்மையற்ற
நாட்களில் நீராடுங்கால் குளம், ஆறு போன்ற நீர் நிலைக்குச் சென்று நீராடுவர். பெருங்கதையில்
வாசவத்தத்தையை நீராட்டற் பொருட்டு, மணப் பொருள்களோடு மங்கலப் பொருள்களும் எடுத்துச்
சென்று, நீர்த்துறையின் ஒரு புறத்து மணலில் முத்து, மணி, பொற்சுண்ணம், அரிசி, மலர்
முதலியன பரப்பி, வெள்ளி மணலிட்டு அதன்மேல் அவளை அமரவைத்து, சடங்காற்றும் மூதறிபெண்டிர்
வாசவதத்தைக்கு நீராட்டுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து, பின்னர்
திரைச் சீலைகளால் அமைக்கப்பட்ட படவீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு பொன்மணையில் கிழக்கு
நோக்கி அவளை இருத்தி இறைவனை வணங்கி அடி முதல் முடிவரை அறுகம்புல்லால் நெய்யேற்றி, ஆண்டு அணியத் தகுந்தவற்றையும் அணிவித்தனர். அப்பொழுது
வாசவதத்தை தலைப்புனல் மூழ்குதலின் தானமாக ஐந்நூறாயிரம் பசும் பொன்மாலைகளைத் தானே இரவலர்க்குப்
பின்னர் நீர்த்துறை படிந்து நீராடலானாள் எனக் குறிக்கப் பெறுகின்றது. இவற்றால் தலைப்புனல்
மூழ்குங்காலத்து இறைவழியாடு நிகழ்த்தி, நெய்யேற்றி, தானம் கொடுத்து, நீராட்டுச் சடங்கு
நிகழ்த்தியமை அறியமுடிகின்றது.
பூப்புச் சடங்கின் நோக்கம், திருமண வயதில் தன் வீட்டில் பெண் இருப்பதை உறவினர்களுக்கு
அறிவித்தலாகும்.
பார்வை நூல்
1.
ஐம்பெருங்காப்பியங்களில்
சடங்குகளும் நம்பிக்கைகளும் – இரா.இரகோத்தமன், குகன் பதிப்பகம், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
Comments
Post a Comment