வேளாளர்
வேளாளர் என்பவர் உழுதுண்பார், உழுவித்துண்பார் என இருபிரிவினராயிருந்தனர். இவருள்
உழுதுண்பார் உழுவித்துண்பாரினும் தாழ்தோராகக் கருதப்பட்டனர். உழுவித்துண்ணும் வேளாளர்
பிறரை ஏவி வேலைக் கொள்ளும் தன்மையர்.
வேளாளரே உயர் வகுப்பினராவர். அவர்களே நாட்டின்
உயர்குடிப் பெருமக்கள் அல்லது நிலக்கிழார் மரபினராயிருந்தனர். இவர்கள் வெள்ளாளர் என்றும்
காராளர் என்றும் அழைக்கப்பட்டனர்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தமிழக வேளிர்களில்
பெரும்பாலானவர்களும் வேளாளர் மரபைச் சேர்ந்தவர்கள். சிறிதளவே நிலமுடைய ஏழை வேளாளர்
குடியினர் ‘வீரகுடிவழவர்’ என்று அழைக்கப்பட்டனர். மற்ற வேளாளர்கள் செல்வக் குடியினர்
என்பது தெரியவருகிறது.
வடுக நாட்டை வென்ற வேளாள குடியினர் ‘வேளமர்’
என்று அழைக்கப் பெற்றனர். இன்றும் அங்குள்ள பெருநிலக்கிழார்கள் அனைவரும் பெரும்பாலும்
இவ் வேளமர் வகுப்பினர்தான்.
பிளைனி, தாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட
கங்கைத் தீரத்திலுள்ள வல்லமை வாய்ந்த ‘கங்கரிடே’ என்ற குடிமரபிலிருந்து தங்கள் குலமரபை
வரன்முறையாகக் கொண்டமையால் வேளாளருக்கும் கங்ககுலம், கங்கவமிசம் என்ற பெயர் உண்டு.
நச்சினார்க்கினியர் மேல்நிலை வேளாளர், கீழ்நிலை
வேளாளர் என்று இருப்பிரிவினரைக் குறிப்பிடுகின்றார். மேல் நிலை வேளாளருக்கு அரச குலங்களோடு
மண உரிமை உண்டு.
உயர் வேளாளர் உயரிய நிலைகளை வகித்தனர். அவர்கள்
மண்டலத் தலைவர், பிராந்தியத் தலைவர், மற்றும் தண்டத்தலைவர், ஆகிய பொறுப்புகளை வகித்தனர்.
அவர்கள் பிடவூர், அழுந்தூர் (சோழன் உருவப் பஃறேர் இளஞ்செட்சென்னி அழுந்தூர்க் குடும்பத்தில்
மணமுடித்தவன்), நாங்கூர் (சோழன் கரிகாலன் நாங்கூர்வேள் குடும்பத்தில் மணந்தான்), ஆலஞ்சேரி(ஆலஞ்சேரி
மயிந்தன் ஒரு பெருவள்ளல்), பெருஞ்சிக்கல், வல்லம், கிழார் முதலிய ஊரினர். இவ்வேளாளர்களுக்கு
அரச குடும்பத்தோடு ஏற்பட்ட மண உறவினால், மிக உயர்ந்த அரசப் பொறுப்புக்களை ஏற்றனர்.
அதனால், சமூக அமைப்பில் மிக உயரிய இடத்தையும், பொருளாதார அடிப்படையில் வியக்கத்தக்க
நிலையையும் அடைந்தனர்.
பார்வை நூல்
1. சங்கப் புற இலக்கியங்களில் சமூகச் சித்திரிப்புகள் – முனைவர் நா.பழனிவேலு, தமிழ் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, மனோன்மணி பதிப்பகம், 18, பி.டி.வி. காலனி, கிருட்டிணகிரி.
Comments
Post a Comment