மூவேந்தர்
சங்க இலக்கியங்கள் குறுநில மன்னரை ‘மன்னர்’ என்றும், சேர, சோழ, பாண்டிய மரபில் வந்தோரை ‘வேந்தர்’ என்றும் குறிப்பிடுகின்றன. மூவேந்தரைச் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கும் மரபு தொல்காப்பியர் காலத்திற்கு
முன்பே மூவேந்தர் மரபு நிலைபெற்றுவிட்டதை, ”வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்ற தொல்காப்பிய நூற்பாவினாலும், அவர்களது அடையாள மாலையைக் குறிப்பிடும்போது,
”போந்தை வேம்பே ஆரெனவரூஉம்
மாபெருந்தானையர்
மலைந்தபூவும்” (தொல்.பொருள்.63:4-5)
என்று குறிப்பிடுவதாலும்
அறியமுடிகிறது. மேலும் தமிழ் இலக்கியங்கள்,
”மண்டிணித் தடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசு
முழங்கு தானை மூவருள்ளும்” (புறம்-35:3-4)
என்றும்,
”மலர்தலையுலகத்து மன்னுயிர் காக்கும்
முரவு
முழங்கு தானை மூவர்” (பெரும்
பாண்.32-33)
என்று குறிப்பிடுவதாலும்
சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களைப் பற்றிய செய்திகளை அறியமுடிகின்றது.
சேரர்
தமிழகத்தில் மேலைக் கடற்கரைப் பகுதியை ஆட்சிப்
புரிந்தவர்கள் சேரமன்னர்கள். வானவர், கோதை, சேரலர், ஆதன், குட்டுவன், குடவர், குடக்கோ,
கடுங்கோ, பொறையன், இரும்பொறை, வானவரம்பன், வில்லவன், கொங்கன், உதியன், மலையமான், கொல்லி
வெற்பன், பொருனையாற்றோன் என்று பழந்தமிழ் இலக்கியங்களும், நிகண்டுகளும் சேரரைச்
சுட்டுகின்றன. மூவேந்தருள் சேரரே தொன்மையுடையோராகவும், புலவர் பாடும் விழுமிய சிறப்பும்,
புகழும் உடையோராகவும் திகழ்ந்தனர். பண்டைய தமிழ் நூல்கள் சேரர்களின் வமிசமூலத்தைக்
குறிப்பிடவல்லை.
சேரநாட்டை ஆட்சிபுரிந்தவர்களில் ஒரு பிரிவினர்
உதியன் சேரலாதன் வழிவந்தவர். இவர்கள் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியை
ஆண்டவர்கள். மற்றொரு பிரிவினர் இரும்பொறை மரபில் வந்தவர். இவர்கள் தொண்டியைத் தலைநகராகக்
கொண்டு தாயாதிகளாகப் பிரிந்திருந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. இதனால்
சேர அரசர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதற்கான குறிப்பு ஏதும் இலக்கியங்களில் காண
முடியவில்லை.
சேர நாட்டில் அயிரை, கொல்லி, பாயல், நன்றா,
நேரி ஆகிய மலைகளும், ஆன்பொருனை, காஞ்சியாறு, குடவனாறு, காரியாறு பேரியாறு ஆகிய
ஆறுகளும் குறிப்பிடத்தக்கவை. கருவூர், தொண்டி, நறவு, மாந்தை, வஞ்சி ஆகிய நகர்கள்
சிறப்புற்றிருந்தன.
சோழர்
சோழர்கள் தமிழகத்தின் கிழக்குக் கரைப்பகுதியை
ஆண்டவர்கள். சோழ வேந்தரின் தோற்றத்தையும், பழமையையும் அறிய இயலவில்லை. சேரரும், பாண்டியரும்
முழு அதிகாரம் படைத்த வேந்தராக இருந்தனரென்றும், சோழர் கூட்டுக் குடும்பங்கள் பல சேர்ந்த
குடியாட்சி முறையைத் தொடக்கத்தில் கொண்டிருந்தனர் என்றும் கே.என்.சிவராஜப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
சோழர்கள் ஒன்பது தாயாதிகளாகப் பிரிந்து அடிக்கடி போரிட்டிக்கொண்டிருந்தனர். அண்ணன்
தம்பிகளுக்குள்ளும், தந்தைக்கும் மகனுக்கும் கூட போர் மூண்ட வண்ணமிருந்தது.
உறையூர், வல்லம், குடந்தை, கருவூர், பெருந்துறை
முதலிய இடங்களில் சோழர் மரபினர் ஆண்டு வந்தனர். அவர்களுள் மண்ணாசை கொண்ட ஒருவன் மற்றவனை
வென்றடக்க முயற்சித்தனன். இதனால், பல காலங்களில் பல இடங்களில் போர்கள் நிகழ்ந்தன.
புகார், உறையூர், அழுந்தூர், ஆவூர், வெண்ணில்,
இடையாறு, குடந்தை, ஆகியவற்றைச் சோழநாட்டுப் பெருநகர்களாகப் பண்டைத் தமிழ் இலக்கியம்
சுட்டுகிறது. புகாரும், உறையூரும், அழுந்தூரும் தலைநகர்களாகத் திகழ்ந்திருக்கின்றன.
சோழர் கிள்ளி, சென்னி என இரு பிரிவினராகி உறந்தை, அழுந்தூர் என்னுமிடங்களில் ஆட்சி
புரிந்துள்ளனர். கிள்ளி, வளவன், செம்பியன், காவிரிநாடன், புன்னாடன் ஆகிய பெயர்கள்
சோழரைக் குறிப்பனவாகும்.
பாண்டியர்
சேர, சோழரைவிடத் தொன்மையான வரலாறுகளைப் பாண்டியர்களுக்குத்
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பது
பாண்டிய மன்னர் தென்மதுரையிலிருந்து ஆட்சிசெய்து முதற்சங்கத்தைத் தோற்றுவித்தனர் என்பதையும், வெண்தேர்ச் செழியன்
முதலாக முடத்திருமாறன் ஈறாக அய்ம்பத்தொன்பதின்மர் கபாடபுரத்திலிருந்து ஆட்சிசெய்த இரண்டாம்
சங்கத்தைத் தோற்றுவித்தனர் என்பத்தையும், முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி
ஈறாக நாற்பத்தொன்பதின்மர் உத்தர மதுரையில் ஆட்சிபுரிந்து கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தனர்
என்பதையும் இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. இவ் உரைநூல் குறிப்பிடும் செய்திகளை
முழுமையாக நம்பவியலாவிடினும் பாண்டிய மன்னர்களின் தொன்மையை அறியமுடிகின்றது. தென்மதுரை
கடல்கோளால் அழிவுற்றமையை அடியார்க்கு நல்லாரும், கா. அப்பாத்துரையும், ரா.இராகவைய்யங்காரும்
குறிப்பிடுகின்றனர்.
பாண்டியரையும் தமிழையும், தமிழையும் மதுரையையும்
தொடர்புப் படுத்திப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதிலிருந்து சேரருக்கும், சோழருக்கும்
இல்லாத தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கு மட்டுமே உண்டு என்பதை அறிய முடிகிறது. சேர,
சோழ, பாண்டிய வேந்தரின் தலைநகரங்களைவிட, மதுரையையும், கொற்கையையும் பழந்தமிழ் இலக்கியங்கள்
சிறப்பாகக் கூறுகின்றன. காயலும், தொண்டியும்
துறைமுகப் பட்டினங்களாகும்.
பாண்டியரைச் செழியன், வழுதி, மாறன், தென்னவன்,
பூழியன், பஞ்சவன் என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. பாண்டியரே மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்தவர்கள்.
கி.பி.17 ஆம் நூற்றாண்டில் தொடக்கம் வரை (1605) வரகுணராயன் குலசேகரன் ஆட்சியை நிலைநிறுத்தியவர்கள்.
கி.பி.300 -600 வரை களப்பிரர் ஆட்சியிலும், கி.பி.850-1250 வரை பிற்காலச்சோழர் ஆட்சியிலும்
செல்வாக்குக் குறைந்திருந்தனர். ஆனால் ஆட்சியுரிமையை மட்டும் இழக்கவில்லை. உலக வரலாற்றில்
இவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தப் பெருமை கொண்ட அரச மரபினரை காண்பது அரிது.
சங்க இலக்கியங்கள் வழி முப்பது சேர வேந்தர்கள்,
இருபத்து நான்கு சோழ வேந்தர்கள், இருபத்து நான்கு பாண்டிய வேந்தர்கள் ஆகியோர்களைப்
பற்றி அறிய முடிகிறது.
பார்வை நூல்
1.
சங்கப் புற
இலக்கியங்களில் சமூகச் சித்திரிப்புகள் – முனைவர் நா.பழனிவேலு, அரசுக் கலைக் கல்லூரி,
மனோன்மணீயம் பதிப்பகம், கிருட்டினகிரி-635 001.
Comments
Post a Comment