சிலப்பதிகாரத்தில்
ஆடை உடுத்தல்
மனித நாகரிகத்தின் சின்னமாக விளங்குவது ஆடை.
இது மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப உடற்பாதுகாப்பிற்கு
ஆடை அணிதல் இன்றியமையாததாகும். கலை உணர்வையும், பொழுதுபோக்கினையும் மனித மனம் விரும்பியதால்
அதற்குத் தகப் பஞ்சும், பட்டும், மயிராடையும் உருவாகின. தொழிலுக்கும், இனத்திற்கும்
ஏற்றவாறு நிறமும், உடுக்கும் உடையும் மாறுபடுவதுடன் மகளிருக்கும் மைந்தருக்கும் என
வேறு வேறு வகையான ஆடைகளும் தோற்றம் பெற்றன.
திருமண ஆடை
திருமண ஆடை பற்றிய செய்தியினைச் சிலம்பு சுட்டவில்லை. ஆனால் திருமணக் காட்சியில்,
‘கோடிக் கலிங்கம் உடுத்து’ (21:32) என்ற தொடரால் திருமணத்தில் கோடிக் கலிங்கம்
அணியப் பெற்றமைத் தெளிவுபடுகிறது. இவ்வாடை கண்ணகியின் திருமணத்தில் அமையாது, கிளைக்கதையில்
கற்புடைய மகள் ஒருத்தி அணிந்த செய்திக் குறிப்பால் உணர முடிகிறது.
துன்பத்தில்
ஆடை
கோவலனின் பிரிவுச் சூழலில் கண்ணகி மெல்லிய
ஆடை அணிந்தவளாகச் சுட்டப்படுகிறாள். ‘மென்துகில் அல்குல் மேகலை நீங்க’ (4:48)
என்பதால் துன்பக் காலத்தில் மேகலை அணியாமையும் புலப்படுகிறது. அசோகவனத்தில் சிறைப்பட்ட
சீதை, ‘ஆவி அம்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்” என்பதால் துன்பச் சூழலில்
பெண்கள் மென்மையான ஆடையினை அணிந்தமைப் பெறப்படுகிறது.
இரவு ஆடை
மகளிர் தங்களுடைய வசதிக்கேற்ப பல்வேறு ஆடைகளைப்
புனைந்துள்ளனர். புகார் நகரம் வளமிக்க நகரம். அந்நகரத்தில் மக்கள் இரவுக் காலத்தில்
தனிக்கோலம் கொண்டுள்ளனர். இதனை, ‘இரவிற்கு ஓர் கோலம் கொடி இடையார்தாம் கொள்ள’
(9:45) என்ற தொடர் சுட்டுகிறது. இவற்றால் சமுதாயத்தில் ஆடைகள் பெற்ற பாங்கினைக்
காண முடிகின்றது.
ஆடை இழத்தல்
ஆடை இழத்தல் என்பது காதல், சாதல் என்ற இரு
நிலைகளில் சுட்டப்படுகின்றது. இது மன நெகிழ்ச்சியையும் மனம் அழிதலையும் காட்டுவதோடு
நாணம் துறத்தலையும் வெளிப்படுத்தும். ஆய்ச்சியர் குரவை நப்பின்னையைத் ‘தையல் கலையும்
வளையும் இழந்தே கையில் ஒழிந்தாள் முகம்’ (1725) எனவும் கண்ணனை ‘அறுவை ஒழித்தான்’
(1723) எனவும் காட்டுவன ஆடை இழத்தல் எனும் நிகழ்ச்சிக்குச் சான்றாகின்றன.
வண்ண ஆடைகள்
சிலப்பதிகாரம் பல்வேறு வகையான வண்ண ஆடைகளை
இயம்பும். பூதங்கள் வெண்மையான ஆடையினை அணிந்துள்ளன.
”நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலராது
உடுத்த உடையினன்” 22:21-22
என அந்தணப்
பூதம் அணிந்த நுரை போன்ற வெண்மையான ஆடையினைச் சிலம்பு காட்டும். ஆடையில் பூக்கள் பொறித்தமையினை
‘நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீயி’ (6:88) என்றதனால், மாதவி தூய நிறமுடைய ஆடையை
அணிந்த செய்தியை அறியமுடிகிறது.
அந்தணப் பூதத்திற்கும், பொன்னிற ஆடையினை
வணிகப் பூதத்திற்கும், காளகம் (கருமை) சேர்ந்த வேளாண் பூதத்திற்கும் காட்டுவன ஆடையின்
சிறப்புடன் நால்வருணப் பாகுபாட்டினையும் ஆடையின் வழி வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாடைகள்
குறியீட்டுப் பொருளிலும், இளங்கோ பயன்படுத்தியுள்ளமை தெளிவுப்படுகிறது. அரத்த ஆடை மதுரை
அழிவுக்கு முன் கொண்ட அணியாக அமைகின்றது. கார் காலத்திற்குரிய ஆடையாக ‘அரத்தப் பூம்பட்டு’
(14:86) சிலப்பதிகாரத்தில் தரப்படுகிறது. இவ்வாறு காலத்திற்கேற்ப மக்கள் ஆடை அணிந்த
செய்தியினை ஊர்காண்காதை வெளிப்படுத்துகிறது.
பொற்கொல்லனை மெய்ப்பையுடனும், நீலநிற ஆடையுடன்
கள்வன் காட்டப்படுதலும், பருவத்திற்கு ஏற்ற ஆடை அணிந்த சமுதாயத்தில் அவரவர்கள் வினைக்கேற்ப
ஆடை அணிந்த நிலையினையும் இளங்கோவடிகள் சுட்டியுள்ளார்.
வணிக ஆடை
ஆடை வணிகத்தைச் சிலப்பதிகாரம் செம்மையுறக்
காட்டுகிறது. புகாரில்,
”பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
செய்யப்பட்ட
நுண்வினைக் காருகர் இருக்கை” (5:16-17)
அமைந்துள்ளது.
மதுரையில்,
”நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
பால்வகை
தெரியாப் பன்னூ நடுக்கத்து
நறுமடி
செறிந்த அறுவை வீதியும்” (14:205-207)
காணப்படுகின்றது.
ஆடையினை உருவாக்குகின்ற தொழிலாளர்கள் பல்கி இருந்தமையினைத்,
”துன்ன காரருந் தோலின் துன்னரும்
கிழியினும்
கிடையிலும் தொழில்பல பெருக்கி” (5:32-33)
இருந்த செய்தியினை
இளங்கோவடிகள் தந்துள்ளார்.
காப்பியத்தில் ஆடை உடுத்தல் என்பது தனிமனித,
சமுதாய பழக்கவழக்கங்களுக்கு மட்டுமின்றித் தனிமனிதனுக்கும் தொழிலுக்கும் இனத்திற்கும்
தக ஆடையுடன் அவரவர்கள் தன்மைக்கேற்ப வண்ணமூட்டப்
பெற்ற ஆடைகள் அணிந்தமையினையும் சிலப்பதிகாரத்தின் மூலம் அறியலாம்.
Comments
Post a Comment