Skip to main content

காப்பியங்களில் மணமக்களின் மணக்கோலம்

 

காப்பியங்களில் மணமக்களின் மணக்கோலம்

மணமகள் ஒப்பனை

          திருமணத்தில் மணமக்களின் ஒப்பனைச் செயலை ‘மணக்கோலம் பூணுதல்’  என்பர். மன்னர் மணவினையில் சிறப்பாக இடம்பெறுவதைக் காண முடிகிறது. பொருளாதார நிலையை உணர்த்தும் வகையிலும் அமைகிறது. பெருங்கதையில் மணமகள் பதுமாவதி வதுவையில் கோலஞ் செய்தல் விரிவாகச் சுட்டப்படுகிறது.

          சிந்தாமணியிலும் மணமக்கள் ஒப்பனை இடம் பெறுகிறது. ஒப்பனை புரிய ஒப்பனையில் தேர்ச்சி பெற்றவர் இருந்தமை சுட்டப்படுகிறது. அலங்கார மாலை, விலாசினி என்பவர்கள் இலக்கணைக்கு ஒப்பனை செய்த தன்மை கூறப்படுகிறது. கூந்தல் அலங்காரம் விரிவாகக் காட்டப்படுகிறது.

          ”மைந்நூற் றளைய  மாவீழோதி வகுத்துந்

                                                தொகுத்தும் விரித்தும்

         கைந்நூற் றிறத்திற் கலப்ப வாரிக்கமழு நானக்கலவை

         ஐந்நூற் றிறத்தின் னகிலின் னாவியளைந்து கமழவூட்டி

         எந்நூ ற்றிறழு முனர்வா வெழிலேற் றிமிலின்

                                                        னேற்ப முடித்தாள்” (சீவக.2437)

மேலும் ‘திருமணப் பெண்ணுக்குத் தீஞ் சொல் மடவாட்டு திங்களைச் சூழ்ந்த மீன் போல செம்பொன்னலான பட்டத்தையளித்து, அரும்பையும், இலையையும் இடை விட்டுக் கட்டிய முல்லை சூட்டைக் கற்புக்குச் சூட்டி, விரும்பக் கூடிய முத்து மாலைத் தொங்கவிட்ட சிறந்த பொன்னாலான மகரவாயான அணிகலன்களை அணிவித்தாள். மணங்கமழ் குவளை மலரைக் கூந்தலில் வைத்து மணிச் சுண்ணத்தாலே அமைந்த பொட்டினை நுதலிலே இட்டு, உள்ளத்தைக் கவரும் வாள் அனைய கண்ணை, நிறமுடைய மையால் புனைந்தாள். யானைத் தந்தத்தால் ஆனதோடு, அழகுறும் மகரக் குழை ஆகியவற்றை நீக்கி எரியும் மணியினாற் செய்யப்பட்ட குதம்பை என்னும் காதணியை அணிவித்தாள்.

          பவளம் போன்ற விரலில் மணிமோதிரம் மின்னத் தோளிலும், கழுத்திலும் அழகிய மணக்கும் சாந்தினால் கொடி அசையும்படி எழுதினாள். இடையில் பொன்நாணும், முத்து வடமும் புரளுமாறு அணிவித்தார். இழை தெரியாத பட்டுடை உடுத்தாள். குரங்கு செறி என்னும் அணிகலனைத் துடையில் அணிந்தும், சிறிய கணைக்காலைப் பற்றியவாறு கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்கச் சிற்றடியிலும், அழகிய விரல்களிலும் அணிவனவற்றை அணிந்து, பாம்பினது சிறுநாவைப் போல முந்தானையைத் திருத்திட்டாள். மலரணைய அடிகளும், கையும், நெற்றியும், நகமும் காண்பவர் வியப்புற்று வரும்பும்படி ஒளியையுடைய செந்நிறத்தை எழுதினாள்’ என விரிவாகச் சுட்டப்படுவதைக் காணலாம்.

    கம்பராமயணத்திலும் ஒப்பனை பற்றிய செய்தி இடம் பெறுகிறது. ‘கோலங்காண்படலம்’ என்று தனியாக ஒரு படலம் அமைந்துள்ளது. இதனுள் பதினான்கு பாடல்கள் அமைந்துள்ளன. சீதைக்கு அணிகலன் அணிவித்து ஒப்பனை செய்ததனைக் கம்பர்,

          ”கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து,

         ஈனம்இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்;

         மான்அணி நோக்கினார் தம் மங்கலக் கழுத்துக்கு எல்லாம்

         தான் அணி ஆனபோது, தனக்கு அணியாதுமாதோ?” (கம்ப.1123)

எனச் சுட்டுவார். சீதையின் கழுத்துக்குப் பொருத்தமான அணிகலன்களை அணிவித்தனர். ஆனால் ‘சீதை திருமகளின் அவதாரமாகையால், அவளேதான் திருமாங்கல்யம். அதனால் தான் தாரைவார்த்தல், தீ வலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் என்ற பல திருமண நிகழ்ச்சிகளையும் கூறிய கம்பன் தாலி அணிவித்தல் (திருப்பூட்டு கட்டுதல்) பற்றிக் கூறவில்லை’ என நல்ல பெருமாள் விளக்குவார். இங்குக் கம்பன் நயம்பட மணவினைக்குரிய செயல்களை எண்ணிய பாங்கினை உணரமுடிகிறது.

          பெரியபுராணத்திலும் மணமகள் ஒப்பனை பற்றிச் சுட்டப்படுதல் காணலாம். மணமகள் பூம்பாவை ‘ஓவியர்க் கெழுத ஒண்ணாப் பகட்டொளி ஒளிர் வுற்றேங்க’ என்றும்,

          ”கற்பகம் ஈன்ற செவ்விக் காம்ரூபவளச் சோதிப்

         பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்தபோலும்

         நற்பத பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும்

         எல்லாம் அற்புதம் எய்தத் தோன்றி

         அழகிலுக் கணியாய் நின்றாள்”  (பெரிய.1108)

எனவும் விளக்குவார்.

மணமகன் ஒப்பனை

          மணமகனை ஒப்பனை செய்தலும், மணவினையில் இடம்பெற்றது.

          ”கன மணிமுடியுங் கதிர் முத்தாரமும்

         இனமணிய பூணு மேகவட்டமும்

         வயிரக் குழையும் வல்வினைப் பொலிந்த

         நெடுந்தோள் வளையுங்கடுங்கதிர்க் கடகமும்

         நாமர வளியுங் காமர் கைவினைச்

         சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்

         பந்திக் கச்சினொ டொத்தவை பிறவும்

         ஆரணங்காகிய பேரணி கலங்கலும்

         உழைப் பெருஞ் சிலதியர் பிழைப்பலர் நீட்ட

        அருவரை பிளந்த வஞ்சுவரு நெடுவேல்

         ஒருவலத் துயரிய பொருவில் புட்கொடித்

         தளையவிழ் நறுந்தார்த் தனக்கிணையில்லா” (பெருங்.2,5:138-149)

எனப் பெருங்கதையில் உதயணன் மனக்கோலம் பூண்ட செய்தி சுட்டப்படுகிறது.

          சீவகன் மணக்கோலம் பூண்ட செய்தி ‘நீலமணியினது ஒளியினீரவாய் நிழலுமிழுங் குஞ்சியை ஆற்றின் பின்பு அகிற்புகையினது மணத்தாலே அமைத்து எழுதிற்றென்ன அழகுபட முடித்தான். கண்ணியைத் தலையிலணிந்தான். மார்பின் மேல் இந்திரவில் தோற்கும்படி குலாவி ஆரம் வில்விடாநிற்கக் கற்பகம் பூத்துப் பரந்த தோவென்னும்படி பொற்பை அகத்தேயுடைய ஒழிந்த கலங்களை அணிந்தான். எலிமயிர் முதலியவற்றாற் செய்த பட்டை உடையாக வுடுத்துக் குழை சுடரத் தார் திளைப்பக் கன்னியர்க்கு அநங்களாயினான்’ என விளக்கப்படுகிறது.

          கம்பனில் இராமன் மணக்கோலம் பூண்ட காட்சி (21) இருப்பத்தியொரு பாடல்களில் இடம் பெறுகிறது. இராமனின் வதனம்,

          ”மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை

         பொங்கு இருங்கருங் கடல் பூத்தது ஆம் என,

         செங்கிடைச் சிகழிகை, செம்பொன் மாலையும்,

         தொங்கலும் துயர்வர, சுழியும் குடியே”

பொலிவுடன் விளங்கியது. காதினில் குழை, தெய்வத் தன்மையுள்ள வீர நெற்றியில் அணியும் வீர பட்டிகை, திலகம், அழகிய தோளினில் வயிரங்கள் இழைத்த அணிவலயம், பெருவடமுத்துக்கள், கடகம் கைகளில் அணிந்தும், மார்பினில் ஆரங்கள் அணிந்தும், ஒளி திகழ் உத்தரியம் மார்பில் நூல் ஆகியவற்றையும் அணிந்து தோன்றிய தோற்றத்தை,

          ”தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல்

         மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே”

எனச் சுட்டுகிறார். பட்டு உழுத்திக் காலில் அருநுண்வினைச் சிலம்பு நோன் கழல் அணிந்து ஒளிர்தர, இமையவர்க்கு எலாம் தன்னையே அணையது ஓர் கோலம் தாங்கினான் இராமன்.

          ”இனிப்பரந்து உலகினை அளப்பது எங்கு? என

         தனித்தனி தடுப்பன போலும் சால்பின;

         நுனிப்ப அரு நுண்வினைச் சிலம்பு நோன்கழல்,

        ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ” (கம்ப.1227)

எனச் சுட்டுகிறான்.

          திருஞானசம்பந்தர் மணக்கோலம் பூண்ட செய்தியைப் பெரியபுராணம் சுட்டுகிறது.

          ”தன்சுடப் பரிய முத்துத் தமணிய நாணிற்கோத்த

         கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க்கடி சூத்திரத்தை

        வெண்சுடர்த் தரளமாலை விரிச்சுடர்க் கொடுக்கின் மீது

         வண்திரு அரையின் நீடு வளப் பொலிவளரச் சாத்தி”

       

        ”ஒளிக்கதிர்த் தரளக் கோவை உதரபந் தனத்தின் மீது

        தளிரொளி துளும்பு முத்தின் பூணநூல் கோவை சாத்தி

        ஒளிகதிர் முத்து மாலை கருசுடர் ஆரஞ்சாத்தி

        வாள்விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழிசாத்தித்” (பெரிய.1204-1219)

என மணக்கோலம் பூண்ட செயலைப் பல பாடல்களில் விளக்குகிறார் சேக்கிழார். திருவடி முதல் திருமடி வரை தூயமுத்துக்களாலாகிய அணிகளை அணிந்தனர். அழகு மிகுந்த தெய்வத்தன்மை வாய்ந்த மணக்கோலத்தை அத்தொழிலில் வல்ல வேதியர்கள் செய்ய, சம்பந்தர் திருவுடையான் மாலையாகிய உருத்திராக்க மாலையினைத் தொழுது தாமே எடுத்து அணிந்து கொண்டார். இவ்வாறு மணவினையில் மணமக்கள் ஒப்பனை சிறப்பு இடம் பெறுதலை இன்றும் வழக்கில் காணமுடிகிறது.

பார்வை நூல்

1.  1. காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – முனைவர் புலவர் சீ.வசந்தா, எம்.ஏ., எம்.எட்., ஸ்ரீவித்யா பதிப்பகம், சென்னை -600 082.

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...