ஏகலைவன்
குருபக்திக்கு எடுத்துக்காட்டாக சுட்டப்படுபவன் ஏகலைவன் என்பவன். காட்டிலே வேடர்
குலத்திலே பிறந்த ஏகலைவனுக்கு வில் வித்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலே தணியாத
தாகம் கொண்டிருந்தான்.
அக்காட்டிற்கு அருகே துரோணர்
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார். துரோணரைத் தன்
குருவாகக் கொள்ளக் கருதிய ஏகலைவன் அவரை அணுக, துரோணர் நான் அரச குரு, உன் போன்ற வேடர்களைச்
சீடனாக ஏற்க மாட்டேன் எனத் தடுத்து விடுகிறார். ஏகலைவன் மனம் ஏமாற்றமடைந்தாலும், தளராது
தன் இருப்பிடத்திற்குத் திரும்பி துரோணரின் உருவச் சிலையை செய்து அதனையே மானசீக குருவாக
ஏற்று, வில்வித்தைப் பழகினான். அவனுக்குப் பணிந்தது.
காலங்கள் உருண்டோடின. ஒரு நாள்
துரோணரும், அவருடைய பாண்டவ, கௌரவ சீடர்களும் அக்காட்டிலே உலவி வந்தனர். அவர்களின் முன்னால்
ஓடி வந்த அவர்களின் நாயைக் கண்டு திகைத்தனர். காரணம் அதன் வாய் திறக்க முடியாதவாறு
அம்புகளால் தைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு வியந்த அனைவரும் நாயின் பின் சென்றனர்.
நாய் ஏகலைவனின் இருப்பிடத்தை அடைந்தது. குருவைக் கண்ட ஏகலைவன் பணிந்து எழ, துரோணர்,
அப்பா! நீ இவ்வளவு திறமையுடன் வில் வித்தையை கற்றுள்ளாயே உன் குரு யார்? என வினவினார்.
அதற்கு ஏகலைவன், ஏகலைவன், ஐயா, தாங்கள் தான் ஏன் குரு உங்கள் உருவச் சிலையையே என் குருவாக
ஏற்றுள்ளேன் என்றான்.
அப்படியானால் நீ எமக்குத் தரவேண்டிய
குருதட்கணையை கொடு என்றார். தாங்கள் கேட்பது எதுவாயினும் தருகிறேன் என வாக்களித்தான்
ஏகலைவன். வில் வித்தைக்கு ஆதாரமாகிய கட்டை விரலைக் கொடு எனக் கேட்க, தயங்காது வெட்டிக்
கொடுத்து தன் குரு பக்தியை வெளிப்படுத்தினான்.
பார்வை நூல்
1. இலக்கியப் புதையல் – டாக்டர் க. இந்திரசித்து, ரேவதி பதிப்பகம்,
சென்னை -600 017.
Comments
Post a Comment