உறவுமுறை பெயர்கள்
ஒரு
சமூகத்தில் மிக அடிப்படையான அமைப்பாக உறவுமுறை விளங்குகிறது. உறவுநிலை என்பது
இரத்த வழி அமைகின்ற குடும்ப உறவில் தொடங்கி பின்னர்க் குடும்பங்களுக்கிடையே உறவுகளை
ஏற்படுத்திக் கொண்டு, அதன் தொடர்பு வளர்த்து பல குடும்ப உறவுகளால் பின்னப்பட்டு, ஓர் இனக்குழு
அமைப்பு முழுவதையும் உறவு முறையாக மாற்றிவிடும் சமூக வளர்ச்சியைக் காணலாம்.
சமூகத்தில் உறவுமுறைகள்
ஒரு
சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சாதிவேறுபாடுகளையும், மதப்பிரிவுகளையும் உறவுமுறை பிரதிபலிக்கின்றது. பொதுவாக, கிராமப்புற மக்களிடம் கணவன் மனைவியைப் ‘புள்ள’
என்று அழைப்பதும், மேல்தரச் சமூகத்தினரிடம் ‘டார்லிங்’, ‘ஹனி’ என்பதும், பெயர் சொல்லி
அழைப்பதும் பொதுவாக காணப்படுகின்ற வழக்கமாகும். அது போன்றே கணவனை மச்சான், மாமா, அத்தான்,
டார்லிங் என்றும் சிலசமயங்களில் செல்லப் பெயரிட்டு அழைப்பதும் சமூகத்திற்கு ஏற்ப மக்களிடையே
மாறுபட்டு அமைந்திருக்கின்றன.
‘மன்னி’ என அண்ணியையும், ‘அத்திம்பேர்’ எனச்
சகோதரியின் கணவனையும் அழைக்கிற வழக்கம் பிராமணர்களிடையே காணப்படுகின்றது. நாட்டுக்கோட்டைச்
செட்டிமார்கள் வீட்டுத்தலைவியை ‘ஆச்சி’ எனவும், கோயம்புத்தூர் கவுண்டர்கள் ‘அம்மணி’
எனவும் அழைக்கின்றனர். தமிழகத்தில் வாழும் தெலுங்குத் தமிழர்களாகிய நாயுடுகளும் நாயக்கர்களும்
‘நயினா, பாவா’ எனும் உறவுமுறைப் பெயர்களைத் தங்களது தாய் மொழியாகிய தெலுங்கு மொழியின்
எச்சமாகப் பெற்றிருக்கின்றனர். மேற்கூறிய சான்றுகள் சாதி வழி உறவுமுறைப் பெயர்கள் வேறுபடுவதை
நமக்கு உணர்த்துகின்றன.
முஸ்லீம் மக்களின் ‘பாவா, வாப்பா’ எனும்
உறவுமுறைச் சொற்களுக்கு இணையாக இந்துக்கள் ‘கணவன், அப்பா’ எனும் உறவு முறைப் பெயர்களைப்
பயன்படுத்துகின்றனர். இந்துக்களும், முஸ்லீம்களும் மதவழி வேறுபட்டவர்களாக இருப்பினும்
இனவழித் தமிழர்களே. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளுடன் மணஉறவு கொள்வதை இந்து சமயம்
தவிர்க்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அனுமதிக்கிறது. இவ்வாறு சமயவழி, உறவுமுறைத் தொடர்புகளும்
உறவுமுறைப் பெயர்களும் வேறுபடுகின்றன.
உறவுமுறைப் பெயர்கள் சமூக அமைப்பு முறையினையும்
பிரதிபலிக்கின்றன. பெண்களுக்கு, வயதுக்கு வந்த பின்னர் சமூக மதிப்பு வழங்கப்படுவதை
உறவுமுறை பெயர்கள் சுட்டுகின்றன. தங்கையாக இருந்தாலும் வயதுக்கு வந்துவிட்ட பின்னர்
தொட்டுப்பேசுவதையோ ‘வாடி போடி’ என்று அழைப்பதையோ ஆண்கள் தவிர்த்து விடுகின்றனர். தந்தை
வயதுக்கு வந்தப் பெண்ணை தங்கச்சி என்று அழைக்கிற முறை சில சமூகங்களில் காணப்படுகிறது.
பெண் என்பவள் பிறந்த வீட்டிலிருந்து வாழ்க்கைப்படுகிற இடத்துக்குப் பிரிந்து செல்ல
வேண்டியவள் என்பதை, ‘அண்ணனுக்குப் பொறந்தா அத்தை அசலா ஆயிடுவா’ என்பதும் நாற்று+அன்னார்
= நாத்தனார் எனும் உறவுச்சொல் விளக்கமும் உணர்த்துகின்றன.
ஆண்மகன் உழைப்பாளியாகவும் குடும்ப வருவாய்க்குத் துணை நிற்பவனாகவும் விளங்குகிறான்.
இதனை ‘ஆண்பிள்ளையானாலும் சாண் பிள்ளை’,‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ எனும் உறவுமுறைப்
பழமொழிகள் உணர்த்துகின்றன. குடும்ப வருவாய்க்கு உதவுகின்ற போதும், குடும்பத் துணைக்கு
ஓரு ஆளாக விளங்கும்போதும், ஆண்களுக்கு சமூக மதிப்பு ஏற்படுகிறது.
ஒரு சமூகத்தில் அமைகிற உறவுமுறை திருமணத்தாலும் ரத்தத்தாலும் அமைகிறது. திருமணத்தால்
அமைகிற உறவுமுறையை மணஉறவு என்றும் பிறப்பால் அமைகிற உறவு முறையை இரத்த உறவு எனவும்
கூறுவர். இவ்வாறு உறவு நிலை திருமணம், பால்வேறுபாடு, வயதுநிலை எனும் மூன்று கூறுகளால்
வகைப்படுத்தப்படுகிறது. திருமணத்தால் அண்ணனுக்கு மனைவியாக வந்தவள் தனக்கு மூத்தவளாக
இருந்தாலும் இறையவளாக இருந்தாலும், கவலைப்படாது வயது வேறுபாட்டை விட மணஉறவுக்கு முதலிடம்
தந்து அண்ணி என்று உறவு வைத்து அழைப்பதால் மணஉறவு, வயது நிலை வகைப்பாட்டை முந்தியிருக்கிறது
என்று கருதலாம்.
சகோதரன், சகோதரி எனும் பால்வேறுபாட்டிற்குள் அண்ணன் தம்பி யென்றும், அக்காள்
தம்பி யென்றும் உட்பிரிவு எழுவதால் பால் வேறுபாட்டிற்கு அடுத்தே வயது நிலை வேறுபாடு
அமைகிறது என்று தீர்மானிக்கலாம். இதனால் உறவுநிலை
வகைபாட்டில் திருமண உறவு முதன்மையாகவும், பால்வேறுபாடு இரண்டாம் நிலையுடையதாகவும்,
வயதுநிலை மூன்றாம் நிலையிலும் அமைகின்றன.
கணவன், கணவனின் பெற்றோர், சம்பந்தி, குடும்ப உறவுகள் எனச் சமகால நிலையில் உறவுமுறைகள்
பரந்துபட்டு விளங்குகின்றன. பெரும்பாலும் இத்தகைய உறவுமுறைகளை இளைய தலைமுறையினர் தெளிவாக
அறிந்து வைத்திருப்பதில்லை. பொதுவாக, உறவுமுறைப் பெயர்களையும் அமைப்புகளையும் திருமணத்திற்குப்
பின்னரே ஒருவர் விரிவாகப் புரிந்து கொள்கிறார். அதிலும், ஆண்களை விடப் பெண்களே அறிந்து
வைத்திருக்கின்றனர். இவ்வாறு உறவு நிலையில்
நீண்டும், விரிந்தும் சமகால தலைமுறையில் பெற்றோர் –பிள்ளை – மணஉறவு – சம்பந்திக் குடும்பம்
எனச் சமக்கோட்டு நிலையில் பரந்தும் காலங்காலமாய இருந்து வருகின்றன. உறவினர்கள் பிறந்தும்
மறைந்தும் மாறி கொண்டேயிருக்க, உறவுமுறைச் சொற்கள் மெல்ல அசைந்து கொடுத்து வாழையடி
வாழையாய் வாழ்ந்து வருகின்றன.
பார்வை நூல்
1.
இலக்கியச் சாரல்
– முனைவர் எஸ். ஆரோக்கியநாதன், மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி – 607 302.
Comments
Post a Comment