பழந்தமிழரின்
உடல்வளக் கல்வி
‘விளையாட்டும் வினையாகும்’ என்பது
தமிழரின் அனுபவப் பூர்வமான முதுமொழி. இவ்வினையைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்களும் இருந்துள்ளனர்.
சங்ககாலப் புலவர்களில் கடுவன் இளமள்ளனார், கடுவன் மள்ளனார், மதுரை அளக்கர் ஞாழார் மள்ளனார்,
ஆகிய புலவர்களின் பெயர்கள் மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றனர். இவர்கள் மள்ளற்
கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும். சங்க மருவிய
காலப் புலவர்களாகிய காரி ஆசானும் கணித மேதையும் தம் ஆசிரியரை ”மல்லிவர் தோள் மாக்காயர்”
என்று போற்றுகின்றார். ஆகவே பழங்காலத்தில் இயற்றமிழும், உடல்வளக் கலையிலும் வல்லவர்கள்
வாழ்ந்திருக்க வேண்டும்.
களரி
தமிழில் உள்ள போரவை, முரண்களரி போன்ற சொற்கள்
பழங்காலத்தில் பயற்சிக் கூடங்கள் உள்ளதைச் சுட்டுகின்றன. பட்டினப்பாலை முரண்களரியில்
பட்டினப் பாக்கத்து மறவர்களும் மருவூர் பாக்கத்து மறவர்களும் சண்டை செய்ததைப் பற்றி
விளக்குகின்றது(59-74). களரி என்னும் சொல் இன்றும் கேரளாவில் வழக்கில் உள்ளது. உடல்வளக்
கலையைக் கற்பிக்கும் ஆசிரியர்களைக் ‘களரிப்பணிக்கர்’ என்று அழைக்கின்றனர்.
பூந்தொடை விழா
குழந்தைப் பருவம் உடலியக்கச் செயல்கள்
(Psychol motor activities) நிறைந்த பருவம். அதனால், இளமையிலே உடல்வளக் கலைப் பயிற்சியில்
சிறுவர்களை ஈடுபடச் செய்தனர். சங்க காலத்தில் இப்பயிற்சிக்கு வழிபாட்டுத் தொடக்க விழா
கூட நடத்தியுள்ளார்கள். பூந்தொடை விழா என்னும் பெயரில் ஒரு விழா நடத்தப்படுவதை அகநானூறு
(186 – 7) குறிப்பிடுகின்றது. வில் பயிற்சியைத் தொடங்கும் முதல் நாளில் புதுமணல் இட்டு,
விழாப் போல நடத்தினார்கள். எனவே இவ்விழாவை பூந்தொடை விழா என்று அழைத்தனர் வார்கழல்
பொலிந்த வன்கண் மழவர். இதனைப் பெரும்பாலும் மேட்டுக்குடி மக்களே செய்திருக்க வேண்டும்.
ஆடவர் விளையாட்டுக்கள்
பெருமையும் வீரமும் ஆடவரின் இரண்டு கண்களாகும்.
போரில் வெற்றி பெற உடல் வளிமை இன்றியமையாதது. அதனால், உடல் வளத்தைப் பெருக்கும் போர்ப்
பயிற்சிக்கும் அடித்தளமாக விளையாட்டுக்களை ஆட்வர்கள் விளையாடினார்கள். ஏறுதழுவல்,
மல்லாட்டம், கவண்கல் தெரித்தல், வில் தெரித்தல், வேல் எறிதல், நீந்துதல் ஆகிய விளையாட்டுக்களில்
ஈடுபாடு கொண்டனர். புகழுக்காக உயிரைக் கொடுக்கும் தீர மறவர்களின் – வீர மகளிர்களின்
பெருமை புறத்திணைப் பாடல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். யானைகளோடு பொருதி
வெற்றி பெறுதல் இமாலயச் சாதனையாகக் கருதப்பட்டது. எனவே தான் ‘களிறு எறிந்து பெயர்தல்
காளைக்குக் கடனே’ என்று பொன்முடியார் பாடியுள்ளார்.
பெண்களின் விளையாட்டுக்கள்
குழந்தைகளும் மகளிரும் தமது மென்மைக்கும்
உள இயல்புக்கும் தக்கவாறு விளையாட்டுக்கள் மேற்கொண்டனர். குழந்தைகளின் விளையாட்டுக்கள்
பொழுதுபோக்கு நோக்கத்தையே முதன்மையாகவும், வயது வந்தோர் வாழ்க்கைக்கு அடித்தளமிடுவதை
இரண்டாம் நோக்கமாகவும் கொண்டனர். அலவனாட்டல், பூக்கொய்தல், மணல்வீடு கட்டுதல், சிறுதேர்
உருட்டல், செம்மூதாலாட்டு, வண்டோட்டுதல், களி கொய்யு, வருதிரை உதைத்தல், கிலிகிலியாட்டு,
பொய்யாட்டு, எதிரொலி உண்டாக்கல், வட்டாடுதல், குழிமணலுள் மறைத்து வைத்து ஆடுதல் போன்ற
பொழுது போக்குச் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியுற்றனர். மகளிர்கள் வண்டல் பாவை,
ஓரை, புனலாடல், ஊசல், பந்து, உந்திப் பறத்தல், கழங்கு போன்ற விளையாட்டுக்களை ஆடினர்.
கூத்தாட்டங்கள்
ஆண்களும் பெண்களும் கூத்துக்களை ஆடி மகிழ்ந்தனர்.
சங்க காலத்தில் நான்கு வகை கூத்துக்களை ஆடியதாகச் சு. வித்தியானந்தன் குறிப்பிடுகின்றார்.
அவை நாட்டுக் கூத்து, சமயக் கூத்து, பேய்க் கூத்து, போர்க்கள கூத்து என்பனவாகும். வேலன்
வெறியாட்டு சமயச் சடங்கிற்குரிய கூத்தாட்டமாகும். பேய் மகளிர் ஆடும் கூத்து துணங்கை
கூத்து எனப்படும். போர்க்களத்தில் குரவையும் துணங்கையும் ஆடப்பட்டால் அவை போர்க்களக்
கூத்தாகவும் கொள்ளப்படும். ஓசைக்கேற்ப ஆடும் ஆட்டங்களும், இன்று உடற்பயிற்சியில் ஓர்
பிரிவாகக் கொண்டுள்ளனர். மேலை நாடுகளில் ஆடப்படும் சமூக நடனங்கள் வட்ட நடனங்கள் போன்று
அமைந்துள்ளது.
யானைப் போர்
வீரர்கள் போரில் கலந்து கொள்ளாத காலங்களில்
வீர உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள பலவகையான போர்க் காட்சிகளைக் காண்பதில் விருப்பம்
செலுத்தினர். ஏறுகள், ஆட்டுக் கடாக்கள் யானைகள் ஆகியவற்றைத் தமக்குள் போரிடும்படி செய்து
கண்டு மகிழ்ந்தனர். யானைப் போரைப் பார்க்கச் செய்குன்றுகள் அமைத்தனர் என்றும் அவற்றின்
மேல் பாதுகாப்பாக நின்று யானைப் போரைக் கண்டு இன்புற்றனர் என்றும் மதுரைக்காஞ்சி
(594-596) குறிப்பிடுகின்றது. இதனைத் திருக்குறளும் உறுதி செய்கிறது (758).
நிறைவாக,
உடலைப் பண்படுத்தி அழகோடு வைத்துக் கொள்வதும்
பழங்காலத்தில் இருந்தது. சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கள்வன் என்று பொற்கொல்லன் பாண்டியனின்
அரண்மனைக் காவலர்களிடம் சொல்கின்றான். ஒரு காவலாளி கோவலனை நன்கு உற்றுப் பார்த்து ‘அவன்
திருடன் அல்லன், அவனுடைய உடற்கட்டு உடலியல் நூலில் கூறப்பட்டுள்ளது போல நன்றாக அமைந்துள்ளது’
என்று கூறுகின்றான். இதிலிருந்து அக்கால மக்களிடையே உடலைக் கட்டுப்படுத்தி அழகூட்டும்
கலையும் அக்கால மக்களிடம் இருந்தது என்பது தெரிய வருகின்றது.
பார்வை நூல்
1.
தமிழர் பண்பாட்டில்
விளையாட்டுக்கள் – டாக்டர் அ.பிச்சை, தமிழ்ப் புத்தகாலயம், தி நகர், சென்னை – 600 017.
Comments
Post a Comment