சங்க
கால விளையாட்டுக்கள்
சங்க கால தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
நடத்தினார்கள். வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைச் சார்ந்தே அவர்களின்
தொழில் அமைந்திருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அவர்கள் இனக்குழு
சமுதாய அமைப்பைப் பெற்றிருந்தமையால் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பிருந்தது.
குழந்தைகளும் இளையோரும் முதியோரும் விளையாடி இன்புற்றனர். பல விளையாட்டுக்களை ஐந்திணை
மக்களும் விளையாடினர். சில விளையாட்டுக்கள் குறிப்பிட்ட ஒரு திணைக்கே உரியதாக அமைந்திருந்தது.
வட்டாட்டம்
தரையின் மேல் கிழிக்கப்பட்ட கட்டத்தில் அல்லது
அரங்கத்தில் நெல்லி வட்டைப் போட்டு ஒரு கட்டத்திலிருந்து, மறு கட்டத்திற்குத் தள்ளி
விளையாடுவர். குறிப்பிட்ட இடத்தை முதலில் அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆவர். இந்த
விளையாட்டைப் பாலை நிலத்தில் வேப்ப மர நிழலில் கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச்
சிறார் ஆடியதாக நற்றிணை (3.1-5) கூறுகின்றது. இவ்விளையாட்டுக்கு அரங்கு தேவை என்பதைத்
திருக்குறளும் (401) வலியுறுத்துகின்றது. இவ்விளையாட்டை ‘பாண்டில்’ என்றும் ‘பாண்டி’
என்றும் சுட்டுவர். இது தள்ளுகின்ற பொருளுக்கேற்ப சில்லி, எத்து மாங்கொட்டை எனக் கிராமப்
புறங்களில் இன்று வழங்கப்படுகிறது.
கிச்சுக் கிச்சுத்
தாம்பலம்
மணலைச் சிறிய மலைத் தொடர்ச்சி போல குவித்து
வைத்து ஏதேனும் ஒரு பொருளை அதனுள் ஒருவர் மறைத்து வைப்பர். மற்றொருவர் அதைக் கண்டுபிடிக்க
வேண்டும். இவ்விளையாட்டை இன்று ‘திரிதிரி’ என்றும் ‘கிச்சுக் கிச்சித் தாம்பலம்’ என்றும்
அழைப்பர். இவ்விளையாட்டைச் சங்க கால மகளிரும் விளையாடினர். இந்த விளையாட்டை ஒருத்தி
புன்னைக் கொட்டையை வைத்து விளையாடினாள் என்றும், ஆனால் பின்பு மணலிலேயே மறந்து விட்டுச்
சென்று விட்டதால் அது முளைவிட்டு வளரத் தொடங்கியது என்றும் நற்றிணை (172) எடுத்துரைக்கின்றது.
கழங்காடல்
கழங்கு என்பது உளுந்து போன்ற ஒரு செடியின்
விதை. இவ்விதைகளை மேலே எறிந்து புறங்கைகளில் ஏந்தி விளையாடியதால், கழங்காடல் என்னும்
பெயர் பெற்றது. மணல் பரந்த முன்றில் பொன்னாற் செய்த கழங்கினைக் கொண்டு விளையாடினார்கள்
என்னும் செய்தி சங்க நூற்களில் பல இடங்களில் சுட்டப்படுகின்றது. இதுவே இடைக்காலத்தில்
அம்மானை என்றும், தற்காலத்தில் மூன்றாங்கல், ஐந்தாங்கல், பத்தாங்கல், பல கல் நான்கு
பிரிவுகளாகத் தட்டாங்கல் என்னும் பெயரிலும் வழங்கப்படுகிறது. இலங்கையில் இதனை ‘கொக்கான்
வெட்டுதல்’ என்றழைப்பர்.
பந்தாட்டம்
இதனை மகளிர் மட்டுமே ஆடினர். இவ்விளையாட்டு
வீட்டிற்கு வெளியிலும் முற்றத்திலும் மாடத்திலும் மணல் மேட்டிலும் ஆடப்பட்டது. பந்து
நூலினால் செய்யப்பட்டது. அதைச் சுற்றிப் பல வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. ‘வரிபுனை பந்து’
(நற்றிணை,305,1, கு.கலி 15,1-4) என்னும் குறிப்பு உள்ளது. இதனைச் செல்வக் குடி மகளிர்கள்
விளையாடினார்கள் என்று உய்த்துணரலாம். சங்கப் பாடல்களில் காணப்படும் ஆடுபந்து, எறிபந்து,
என்னும் தொடர்கள் விளையாடும் முறையைத் தெரிவிக்கின்றன. வானைத் தொடுமளவிற்குப் பந்தை
எறிந்து (கு.கலி.4,22-23, 21,6-7) விளையாடியதாகக் குறிப்புள்ளது. காலால் பந்தைத் தள்ளி
விளையாடியதாகச் சான்றுள்ளது (நற், 324,7-9). எனவே, சங்க காலத்தில் கால்பந்து (Foot
ball) ஆட்டத்தையும் கைப்பந்து அல்லது எறிபந்து (catch ball or sky ball) ஆட்டத்தையும்
மகளிர் ஆடினார்கள் என அறியலாம்.
ஓரை
இது மகளிர் குழு விளையாட்டு என்பதில் ஐயமில்லை.
ஏனென்றால் ஆயம் என்னும் சொல்லோடு தொடர்ந்து ஆளப்படுகின்றது. பஞ்சாய்ப் பாவை கொண்டு
மகளிராடும் விளையாட்டு என்று பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ஓரைக்கு விளக்கம் (நற்.68,1-3)
தருவர்.
ஊஞ்சல்
பருவ பெண்கள் மகிழ்ந்து விளையாடிய ஆட்டங்களில்
ஒன்று ஊஞ்சல் ஆட்டம். கயிற்றினால் கட்டப்பட்டுள்ள பலகையில் இருந்து கொண்டு விளையாடினர்.
பனைமடலுக்குக் கருக்கு நீக்கிப் பலகை இணைப்புப் போல் பரப்பிப் பெருங்கயிற்றால் பிணைத்து
ஊஞ்சலை அணைத்தார்கள் (நற்.90,6-10). கருங்கால் வேங்கை மரத்திலும் ஊஞ்சல் கட்டப்பட்டது.
சுறா மீன் கொம்பினால் பலகை செய்தும் அதனைக் கட்டி விளையாடினார்கள்.
நீர் விளையாட்டு
பழங்காலத் தமிழகம் மூன்று திசைகளிலும் நீரால்
சூழப்பட்டிருந்தது. இயற்கை சூழ்நிலை நன்முறையில் இருந்ததால் ஏரிகளிலும் குளங்களிலும்
சுனைகளிலும் அருவிகளிலும் ஆறுகளிலும் அபரிமிதமாக நீர் இருந்தது. அவற்றில் நீந்துதலை
ஒரு பொழுதுபோக்காகக் கொண்டனர். கரையவர் மருள திரையகம் பிதிர திடுமென நெடுநீர் குட்டத்தில்
குதித்து நீந்தி மண்ணெடுத்து கல்லா இளைஞர் மகிழ்ந்தனர் (புற. 243,8-11). பெண்டிர் அருவிகளிலும்
பாய்சுனைகளிலும் காமர் கடும்புனலிலும் குடைந்து குடைந்து ஆடினர். குறுநுரை சுமந்து
பலமலர் உந்தி வருகின்ற புதுநீரில் நெஞ்சு மகிழ் ஆடினர் என்று சங்கப் பாடல்கள் விளக்குகின்றன.
மல்லாட்டம்
இரண்டு ஆடவர்கள் விளையாடும் ஒரு புற விளையாட்டு.
மள்ளன் என்னும் பெயருடைய நான்கு புலவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்திருப்பதை நோக்குமிடத்து,
மல்லாட்டத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் இருந்தனர் என்று உணரலாம்.
சோழன் போர்வைக்கோ பெருநற் கிள்ளிக்கும் முக்காவனாட்டு ஆமூர் மல்லனுக்கும் நடைபெற்ற
மல்லாட்டத்தைப் பற்றி புறநானூற்றுப் பாடல்கள் (80, 81, 82, 83, 84, 85) சித்தரிக்கின்றன.
மேலும், பட்டினப்பாலையில் மறவர்கள் கையிலும் கலத்திலும் சண்டை செய்தனர் என்ற குறிப்பு
வருகின்றது. ஆகவே, சங்க காலத்தில் மல்லாட்டம், கைக்குத்துச் சண்டை, ஆகிய இரண்டும் இருந்திருக்கின்றது
என்று தெரிய வருகின்றது. சிலப்பதிகாரம் பதினொரு வகைக் கூத்துக்களுள் அறுபத்து நான்கு
கலைகளுள் ஒன்றாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஏறுகோள்
தமிழரின் வீர விளையாட்டாகும். கலித்தொகையில்
முல்லைக்கலியில் மட்டும் இவ்விளையாட்டுச் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆடு, பசு, எருமை
என்னும் மூவகைக் கால்நடைகளை வளர்க்கும் ஆயர்கள் இதில் பங்கு பெற்று தமக்குரிய மணப்பெண்ணைத்
தேர்ந்தெடுப்பர். தொழுவத்தில் ஏறுதழுவல் நடைபெறும். பெண்கள் பரண்களில் நின்று காண்பர்.
இவ்விளையாட்டு இன்றும் மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் சிறப்பாக நடைபெறுகின்றது.
ஆனால், மணமகனைத் தேர்ந்தெடுக்கும் விழாவாக இன்று நடத்தப்படுவதில்லை.
வல்லாட்டம்
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி இலக்கணம் கூறுமிடத்து வல்லாட்டம் (373) பற்றியும்,
அது விளையாடுவதற்குத் தேவையான நாய் மற்றும் பலகை பற்றியும் (374) குறிப்பிடுகின்றார்.
இந்த ஆட்டத்தை முதியோர் ஆடினர் என்றும், ஊர்ப் பொது மன்றத்தில் இதற்கான வல்லப் பலகை
இருந்தது என்றும், முதியோர் மிகுந்த சிந்தனையோடு ஆடினர் என்றும் புறநானூறும் (32),
அகநானூறும் (377) தெரிவிக்கின்றன. வல்லுப் பலகை பற்றி மருதக் கலி (ம.கலி, 29.13-14)
குறிப்பிடுகின்றது. வல்லாட்டம் என்பது ஒரு போட்டி விளையாட்டாக ஆடப்பட்டது என்று பரிபாடலின்
வாயிலாக (29.13-14) அறியலாம். திருவள்ளுவர் காலத்தில் வல்லாட்டம் சூது விளையாட்டாக
வளர்ந்திருக்கிறது.
கழைக்கூத்து
இந்த ஆட்டம் ‘ஆரியக் கூத்து’ என்றும், ‘கயிற்று
நடனம்’ என்றும் சுட்டப்படுகின்றது. விழா நாட்களில் ஆடல் மகளிர் உடற்பயிற்சி வித்தைகள்
பலவற்றைச் செய்வார்கள். கழைக்கூத்து நடக்கும் போது வாத்தியங்கள் பல ஒலிக்கப்படுகின்றன.
மகளிர் கயிற்றில் நடந்தும் ஆடியும் பொது மக்களை மகிழ்விக்கின்றனர். இதனை ஆரியர் ஆடினர்
என்பதற்குக் குறுந்தொகையில் (7,3-5) சான்று உள்ளது. இது விழாக் காலத்தில் நடைபெற்றது
என்று குறிஞ்சிப்பாட்டு (192-194) கூறுகின்றது. இது இன்று தெருக்கள் கூடுமிடத்திலும்
சர்க்கஸிலும் ஆடப்படுவதைக் காணலாம்.
சிறுதேர் உருட்டல்
பழங்காலத்தில் மூன்று சக்கர வண்டிகளை – தேர்களை
உருட்டிச் சிறுவர்கள் மகிழ்ந்தார்கள். இவ்விளையாட்டை அகன்ற தெருக்களில் தலைவர்களின்
குழந்தைகள் விளையாடினார்கள். இச்சிறுத் தேர்களைத் தச்சச் சிறார்களே செய்தார்கள் (பெரும்.249).
சிறுவர்கள் கால்வல் தேரினை கையினால் இயக்கி நடை பழகினார்கள். பனங்குரும்பையால் உருளை
செய்து இயற்றிய சிறுதேரை மணலில் இழுத்து விளையாடும் சிறுவர்கள் தங்களைக் குதிரைகளாகவும்
தலைவர் மகன் அத்தேரில் ஏறி வருகின்ற அரசனாகவும் கற்பித்துக் கொண்டு விளையாடினார்கள்
என்று கலித்தொகை (ம.கலி. 18) கூறுகின்றது. சக்கரங்கள் பொருந்திய பவழத்தால் ஆன பலகையின்
மேல் கையால் புனைந்த யானைகள் தனியாக (ம.கலி.15.4-9) இருக்கும். அல்லது கல் யானைகள்
சண்டை போடுவது போல பலகையின் மேல் இருக்கும் சிறுதேர்களை மணலில் இழுத்து செல்வர் வீட்டு
குழந்தைகள் விளையாடினார்கள்.
நிறைவாக,
சங்க கால விளையாட்டுக்கள் எளிமையானவை. அவற்றைப்
பொழுது போக்கிற்காக ஆடினர். போட்டி மனப்பான்மை அதிகமாக இல்லை. பெரும்பாலும் பெண்களும்
குழந்தைகளும் ஈடுபட்டனர். உடல் வளத்தையும் உவகையையும், நட்புணர்ச்சியையும் பெருக்குவதாகவே
அக்கால விளையாட்டுக்கள் அமைந்தன. இவற்றில் பெரும்பாலானவை இன்றும் கிராமப்புறங்களில்
காணப்படுகின்றன. காலத்திற்கேற்ப கருவிகள் மாறிவிட்டாலும் அவற்றின் செயல் அடிப்படை இன்றும்
மாறாமல் இருக்கின்றது.
பார்வை நூல்
1.
தமிழர் பண்பாட்டில்
விளையாட்டுக்கள் – டாக்டர் அ.பிச்சை, தமிழ்ப் புத்தகாலயம், தி நகர், சென்னை 600
017.
Comments
Post a Comment