ஆடுபுலி ஆட்டம்
நாட்டுப்புற
வாழ்வியலின் ஒரு பகுதியாக நாட்டுப்புற விளையாட்டுக்கள் அமைகின்றன. தமிழத்தின்
பல கிராமங்களில் இன்றும் மரபு விளையாட்டுக்கள் போற்றப்படுகின்றன. இவ்விளையாட்டுக்கள்
உடல் வளர்ச்சிக்கும் உள்ள மலர்ச்சிக்கும் துணைபுரியும். அறிவைக் கூர்மைப்படுத்தி ஆற்றலை வளர்க்கும் பயிற்சிக் களமாகத்
திகழ்பவை.
ஆடுபுலி ஆட்டம்
தோற்றம்
‘குறிஞ்சி நிலத்திற்கும், முல்லை நிலத்திற்கும்
இடைப்பட்ட இயற்கை வேட்டுவினைப் போராட்டம் விளையாட்டின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்’
என்று இரா. பாலசுப்பிரமணியன் கருதுகின்றார். உலகெங்கும் நாகரிகம் தோன்றி வளர்ந்த காலத்தில்
மனித சமுதாயம் வீரயுகத்தில் இருந்தது. அடுதலும் தொலைதலும் அக்காலத்தில் புதிதன்று.
தமிழகத்தில் வீர யுக காலக்கட்டத்தில் – ஆட்சி எல்லையை விரிவுபடுத்திக் குறுநில மன்னர்களை
அடிமைப்படுத்தி மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்) பேரரசு அமைத்த காலகட்டத்தில், இச்சமூக
அரசியற் பின்னணியில் ‘ஆடுபுலி ஆட்டம்’ தோன்றியிருக்கவேண்டும்.
தாய்லாந்தில் ஒரு புலியும் இந்தனோஷியாவில் ஐந்து புலிகளும் இவ்விளையாட்டில்
பயன்படுத்தும்போது, தமிழகத்தில் ஆடப்படும் ஆடுபுலி ஆட்டத்தில் மூன்று புலிகள் பயன்படுத்துவது
சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களாகக் குறிக்கும். 15 ஆடுகளும் அவர்களுக்கு
கீழ் ஆட்சி புரிந்த பாரி, ஆய் போன்ற குறுநில மன்னர்களைக் குறிக்கும். ஆகவே, இவ்விளையாட்டில்
வரும் போராட்டம் வலியவன் – மெலியவன், ஆண்டான் – அடிமை, முதலாளி - தொழிலாளி, சுரண்டுபவன்
– சுரண்டப்படுபவன் என்னும் வர்க்கப் போராட்டத்தைச் சூட்சம்மாகச் சுட்டுகின்றது எனலாம்.
ஆடுபுலி
ஆட்டம் ‘பதினைந்தாம்
புலி’ என்னும் பெயரிலும்
தமிழகக் கிராமங்களில் வழங்கப்படுகின்றது. இது ஆடவர்களுக்கே உரிய விளையாட்டு. பெரும்பாலும், இதனை முதியவர்கள்
பொது இடங்களில், குறிப்பாகக்
கோயில்களிலும் சத்திரஞ் சாவடிகளிலும் விளையாடுவர். இவ்விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் பெறுவது விளையாடுபவரின்
திறனைச் சார்ந்ததாகும். இரவு, பகல் எந்நேரத்திலும் எப்பருவத்திலும் விளையாடலாம். இதனை விளையாட
இருவர் வேண்டும்.
இருபத்து
மூன்று புள்ளிகள் கொண்ட செவ்வக – முக்கோணக் கட்டத்தில்
பதினைந்து காய்களை ஆடுகளாகவும், மூன்று காய்களைப் புலிகளாகவும் வைத்து விளையாடுவார்கள்.
ஆடாக இருப்பவர் ஒரு காய் வைத்தால், புலியாக இருப்பவர் ஒரு காய் வைத்து ஆட்டத்தைத் துவங்குவார்.
மூன்று காய்கள் வைத்த பின்பு புலியாக இருப்பவருக்குக் காய் இருக்காது. ஆனால், ஆடாக
இருப்பவர்க்குக் காய் இருக்கும். இருப்பினும் புலியாக இருப்பவர் காய்களைப் புள்ளிகளில்
நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அடைபடாத ஆட்டினைப் புலி தாவி வெட்டலாம். ஆடாக இருப்பவரும்
வெட்டலாம். வெட்டப்பட்டது வெளியே வந்துவிட வேண்டும். புலியை, ஆடு அங்கும் இங்கும் நகரவிடாமல்
செய்து விட்டால், ஆடு வெற்றி பெற்றதாகும். ஆடுகளை வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகும்.
இவ்விளையாட்டைக் கேரள மக்கள் நாயும் புலியும்
என்றும் கர்நாடக மக்கள் சிங்கமும் ஆடும் என்றும் அழைக்கின்றார்கள். விலங்குகளின் பெயர்கள்
வேறுபட்டாலும் எல்லாவற்றுக்கும் அடிப்படையான – கருவான வலிய விலங்கிற்கும் மெலிய விலங்கிற்கும்
இடையே நடைபெறும் போராட்டம் ஆகும். தென்னிந்தியாவில் இவ்விளையாட்டுச் சிறப்பாக ஆடப்படுவதால்,
தென்னிந்திய வடிவங்களுக்குப் பொதுவான மூலவடிவம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து
சிறிது வேறுபாட்டுடன் மற்ற வடிவங்கள் கிளைத்திருக்க வேண்டும்.
பார்வை நூல்
1. டாக்டர் அ.பிச்சை - தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள், தமிழ்ப் புத்தகாலயம், தி.நகர், சென்னை -600 017.
Comments
Post a Comment