Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

திராவிட மக்களின் விளையாட்டுக்கள்

 

திராவிட மக்களின் விளையாட்டுக்கள்

          திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் பெற்றுள்ளன. மீதமுள்ள இருபது மொழிகளும் பேச்சு வழக்கை மட்டும் உடைய மலை சாதியினர் மொழிகள். மொழியில் ஒற்றுமை காணப்படுவதைப் போல திராவிடர்களின் பண்பாட்டிலும் விளையாட்டுக்களிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன.

சடுகுடு

          ஆண்களால் ஆடப்படும் புறவிளையாட்டு. இதனை ஆடும்போது ‘சடு குடு’ என்னும் ஒலிக்குறிப்புத் தொடர் ஆளப்படுவதால் இவ்விளையாட்டு இப்பெயர் பெற்றது. இதனைத் தெலுங்கர் ‘பலிஞ்சப்பளம்’ என்று அழைப்பர். இந்தியாவில் உள்ள பட்டி தொட்டிகளில் எல்லாம் மணற்பாங்கான இடங்களில் விளையாடப்படுகிறது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் விளையாடப்படுகின்றது.

          இவ்விளையாட்டு பழந்தமிழர் போர் முறையான ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பதன் அடிப்படையில் சடுகுடு தோன்றியிருக்கலாம் என்று ஞா.தேவநேயப்பாவாணர் கருதுகின்றார்.

சடுகுடு மூன்று வகையான ஆட்டங்கள் உள்ளன. திறன் சோதிக்கும் ஆட்டம், சஞ்சீவினி ஆட்டம், ஆடாது ஒழியும் ஆட்டம் என மூன்று வகைகளைக் குறிப்பிடுகின்றார்கள். முதல் பிரிவில் இரண்டு குழுவுக்கும் இடையே நடுக்கோடு இல்லை. இரண்டாவது பிரிவில் நீக்கப்பட்டவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளும் விதி உண்டு. மூன்றாம் பிரிவில் நீக்கப்பட்டவர் விளையாட்டு முடியும்வரை கலந்து கொள்ள இயலாது. இம்மூன்றையும் வடநாட்டில் குறிப்பிடப்படுகின்ற கபடி விளையாட்டின் வகைகளாகிய அமர், சஞ்சீவினி, காமினி என்பவற்றோடு குறிப்பிடலாம்.

கிட்டிப்புள்

          தற்கால கிரிக்கெட் விளையாட்டிற்கு மூலவடிவாக்க் கருதப்படுகிறது. இது கேரளத்தில் ‘கரகொட்டி’ என்றும் ‘குட்டியும் கோலும்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டில் பெரிய குச்சியும், சின்னக் குச்சிக்குப் பதிலாகச் சிறு கல்லை அடிக்கின்றனர். இன்றைய கிரிக்கெட்டில் சின்னக் குச்சிக்குப் பதிலாகப் பந்து இடம் பெறுகின்றது. குழியில் வைத்தும் குழியின்றியும் ஆடலாம். சின்னக் குச்சி பல முறைகளில் அடிக்கப்படுகின்றது. சில சமயங்களில் தூரம் அளக்கப்படுகின்றது. விலகுவதற்கும் சேர்வதற்கும் வெற்றித் தோல்விக்கும் வரையறுக்கப்பட்ட விதிகள் உள்ளன. இரண்டு பேர்கள் அல்லது இரண்டு குழுக்கள் ஆடலாம்.

சிலம்பம்

          இவ்விளையாட்டு இளைஞர்கள், நடுத்தர வயதுடைய ஆண்கள் விளையாடுகின்றனர். இதனை ‘நெடுவடி’ என்று மலையாளிகளும், ‘தண்ட வரிசை’ என்று கன்னடர்களும், ‘கரடி ஆட்டமு’ என தெலுங்கர்களும் குறிப்பிடுகின்றனர். இது போர்ப் பயிற்சிக்கு அடித்தளமாக இருந்துள்ளது. இப்போது தற்காப்பிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும் பயிலப்படுகிறது.

          இதில் இருவர் நீண்ட மூங்கில் கழியைப் பயன்படுத்தி அடிப்பார்கள். அடிக்கும்போது தன்மேல் அடிவிழாதபடி தடுத்துத் தாக்க வேண்டும். இதற்குத் தகுந்த பயிற்சி வேண்டும். கை, கால், கண் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். கம்பினால் அடித்தல், தாங்குதல், வீசுதல், சுழற்றுதல் போன்ற தொழில்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாட்டுப் பந்தயம்

          ஆடவர்கள் நேரடியாகப் பங்கு பெறாமல், அஃறிணைப் பொருள்களின் துணையோடு போட்டியிடுகின்றார்கள். இரண்டு காளைகள் பூட்டப்பட்ட சிறுதட்டு வண்டியினை இந்தப் போட்டி விளையாட்டில் பயன்படுத்துவர். கிராமத் தேவதையின் வழிபாட்டின் ஓர் அம்சமாக நடத்தப்படுகின்றது. கிராமத் தலைமையை உருவாக்குவதில் மாட்டு பந்தய அமைப்பிற்குப் பெரும் பங்கு உண்டு.

          எருமைப் பந்தயத்தை ‘கம்ளா’ என்று தென் கன்னட மக்கள் அழைக்கின்றனர். இரு எருமைகளை நுகத்தடியில் பூட்டுகின்றனர். பின்புறத்தில் ஒரு மரப்பலகை இணைக்கப்படுகின்றது. இதன்மீது நின்று கொண்டு எருமைகளை விரட்டிச் செல்வர். உழுது சேறாக உள்ள நிலத்தில் எருமை ரேஸ் நடத்தப்படுகின்றது. இந்த எருமைப் பந்தயம் மலபார் பகுதியிலும் நடத்தப்படுகின்றது.

பொய்க்கால் நடை

          பொய்க்கால் நடை என்பது குழந்தைகள் விளையாட்டு ஆகும். தமிழகத்துக் கிராமச் சிறுவர்களும் காடர், கோண்டி இனத்தைச் சேர்ந்த மலை வாழ் மக்களின் குழந்தைகளும் இதனை ஆடுகின்றனர். பொய்க்கால் நடைக்குத் தமிழ்ச் சிறுவர்களும் காடர் சிறுவர்களும் தேங்காய் ஓட்டைப பயன்படுத்துகின்றனர். இரண்டு தேங்காய் ஓடுகள் ஒரு கயிற்றினால் இணைக்கப்படும். அவற்றின் மேல் ஏறி நின்று கொண்டு, ஒரு கயிற்றை இழுத்துக் காலைத் தூக்கி நடக்க வேண்டும். இதனால் சாதாரண நடைக்கு மேல் மூன்று நான்கு அங்குலம் உயரமாக நடப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சி தோன்றுகின்றது.

தாயம்

          இவ்விளையாட்டு திராவிட மக்களிடையே வரலாற்றுப் புகழ் பெற்ற விளையாட்டு. சிறுவர்களும், பெரியவர்களும் ஆண்களும் பெண்களும் விளையாடலாம். இது சதுரங்க விளையாட்டிற்கு அடிப்படை. பழங்கால நாகரிகத்தில் தாய விளையாட்டில் சுடுவண் காய்களைப் பயன்படுத்தி விளையாடியதாகத் தொல் பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். இதனை மலையாளிகள் ‘கம்பி தாயம்’ என்று அழைப்பார்கள்.

          இது பலகைக் கட்ட விளையாட்டு. இதற்குத் தரையிலோ பலகையிலோ ஆறு அல்லது எட்டுக் கோடுகளைக் குறுக்கிலும் நெடுக்கிலும் கிழித்துச் சதுரக் கட்டங்களை வரைந்து விளையாடுவர். தாயக் கட்டையோ, சோழிகளோ, புளிய முத்துக்களோ, பயன்படுத்தப்படும். விளையாட்டில்  வெற்றி, வாய்ப்பு நிலையையும் அறிவுநிலையையும் சார்ந்தது.

பல்லாங்குழி

          பல்லாங்குழி பெண்களால் விளையாடப்படும் விளையாட்டாகும். தெலுங்கில் ‘ஓமன கூடலு’ எனவும், கர்நாடகத்தில் ‘சென்ன மனெ’ என்வும் குறிப்பிடப்படுகிறது. தரையில் அல்லது மரப்பலகையில் உள்ள பதினான்கு அல்லது இருபத்து நான்கு குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவர். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணிதமுறை சார்ந்த விளையாட்டாகும். சிக்கலான இவ்விளையாட்டு செஸ் விளையாட்டுக்குச் சம்மாகக் கருதப்படுகிறது.

அம்மானை

          அம்மானை விளையாட்டு ஒரு பந்து விளையாட்டு ஆகும். மகளிருக்குரியது. இவ்விளையாட்டில் சிறிய பந்துகளை மேலே தூக்கிப் போட்டுப் பிடிக்க வேண்டும்.

ஆடுபுலி ஆட்டம்

          ஆண்களும் பெண்களும் விளையாடும் விளையாட்டு. அறிவு நிலையைச் சார்ந்தது. மலையாளிகள் ‘நாயும் புலியும்’ என்றும், கர்நாடக மக்கள் ‘சிங்கமும் ஆடும்’ என்றும்  அழைக்கிறார்கள். மிருகங்களின் பெயர்கள் வேறுபட்டாலும் வலிய விலங்குக்கும் மெலிய விலங்குக்கும் போராட்டம் நடைபெறுகின்றது. வலிய விலங்கைக் காட்டிலும் 5 மடங்கு மெலிய விலங்குகள் உள்ளன. இதற்கென தனியான கட்டமைப்பு உண்டு. கோவில்களிலும், சாவடிகளிலும், பொது மன்றங்களிலும் இவ்விளையாட்டிற்கான கட்டத்தைக் கல்லிலே செதுக்கியிருப்பதைக் காணலாம்.

நிறைவாக,

          திராடவிட மக்களின் விளையாட்டுக்கள் செழுமையானவை, சில வெளிநாட்டுப் பண்பாடுகளோடு தொடர்புடையவை. வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட கிராமியச் சமுதாயத்தில் சில சிக்கலான, போட்டி விளையாட்டுக்கள் உள்ளன. பெரும்பாலான நகர மக்கள் நாட்டுப்புற விளையாட்டுக்களை மறந்தும் துறந்தும் மேனாட்டு விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேனாட்டு கல்வி முறைகளினால் திராவிட மரபு விளையாட்டுக்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன.

பார்வை நூல்

1. டாக்டர் அ.பிச்சை - தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள், தமிழ்ப் புத்தகாலயம், தி.நகர், சென்னை -600 017.

  

Comments

Popular posts from this blog