தருமிக்குப்
பொற்கிழி அளித்தது
வங்கிய சூடாமணிப் பாண்டியன் இறைவன் வழிபாட்டிற்கு
வேண்டி ஒரு நந்தவனத்தை நிர்மானித்தான். அத்துடன் சண்பக நந்தவனம் ஒன்றும் தனியாக அமைத்தான்.
சண்பக மலர்களை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் அவன் சண்பகப் பாண்டியன் என்று பெயர் பெற்றான்.
சோமசுந்தரக் கடவுளுக்குச் சண்பக சுந்தரர் என்ற திருப்பெயர் வழங்கப்பட்டது.
கோடை காலத்தில் சண்பகப் பாண்டியன் தன்தேவியுடன்
சண்பகத் தோட்டத்தில் தங்கியிருந்தான். அப்போது வீசிய தென்றலில் நறுமணம் தவழ்ந்து வந்தது.
இந்த மணம் சோலை மணமில்லை என்பதை அறிந்தான். காற்றுக்கும் மணமில்லை என்பது அவனுக்குத்
தெரியும். ஆராய்ந்தான். முடிவில் தன் தேவியின் கூந்தலில் மணம் என்பதை அறிந்து, கூந்தலுக்கு
இயற்கையில் மணம் உள்ளதா? அல்லது செயற்கை மணமா? என்று சந்தேகம் கொண்டான்.
பாண்டியன் அரண்மனைத் திரும்பியதும் தன் சந்தேக
கருத்தை அறிந்து பாடல் செய்பவருக்கு ஆயிரம் பொன் அடங்கிய முடிப்பு அளிப்பதாக அறிவித்தான்.
அந்தப் பொன் முடிப்பை சங்க மண்டபத்தில் கட்டத் தொடங்கவிடச் செய்தான். சங்கப் புலவர்கள்
ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றிய கருத்துக்களைப் புனைந்து பாடல்கள் இயற்றினர். அவை
எதுவும் மன்னனின் சந்தேகத்தைப் போக்குவதாக இல்லை.
தருமி என்பவன் ஆதிசைவ மரபைச் சேர்ந்தவன்.
இளம் புலவன். அவனுக்குப் பெற்றோர் உற்றார் யாவரும் கிடையாது. பிரம்மச்சாரி, அவன் சோமசுந்தரக்
கடவுளிடம், ‘எம்பெருமானே! நான் மணக்க விரும்புகிறேன். பொருள் வசதி இல்லை. வேத சிவாகமங்களை
ஓதியிருந்தும் எனக்கு இல்வாழ்க்கை அமையவில்லை. பாண்டியன் சந்தேகத்தைப் போக்கினால் பொற்கிழி
கிடைக்கும். அதை இயற்றும் ஆற்றலையாவது எனக்குத் தா! என்று வேண்டி நின்றான்.
சோமசுந்தரப் பெருமான் அவனுக்கு அருள் புரிய
திருவுளங் கொண்டு புலவர் வடிவில் வந்து ஒரு செய்யுளைத் தாமே இயற்றி அவனுக்குத் தந்தார்.
தருமி பெரிதும் மகிழ்ந்து அச்செய்யுளுடன் சங்கப் புலவர்கள் கூடியிருந்த சபைக்குச் சென்றான்.
அவர்கள் அச்செய்யுள் வாங்கிப் படித்து அதன் சொல் நயத்தையும் பொருள் நயத்தையும் பாராட்டினர்.
பின் அச்செய்யுளை மன்னனிடம் கொண்டு காட்டி விளக்கினர்.
”கொங்கு தேர் வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியியற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
இச் செய்யுள்
மன்னன் சந்தேகத்திற்குத் தெளிவு தந்தது. அதனால் பொற்கிழியைப் பெற்றுக் கொள்ளும்படிக்
கூறினான். தருமி பொற்கிழியை எடுக்கும் சமயம் நக்கீரன் என்ற புலவன் தடுத்து, ”இந்தச்
செய்யுளில் குற்றம் இருக்கிறது” என்றான்.
இதனால் தருமி பெரிதும் ஏமாற்றம் அடைந்தான்.
நக்கீரனிடம் வாதிடும் வல்லமையும் அவனுக்கு இல்லை. அதனால் கோயிலுக்கு விரைந்து சென்று
இறைவனை வணங்கி, கருணை வடிவானவானே! எனக்கு ஏன் இந்த இழிநிலை? என்று கண்கலங்கினான்.
எம்பெருமான் உடனே புலவர் வேடத்துடன் தருமியையும் அழைத்துக் கொண்டு, சங்க மண்டபத்தை அடைந்தார். அவர் ஆத்திரத்துடன், ”எம் பாடலில் குற்றம் சொன்னது யார்? என்று வினவ, நக்கீரன் முன்வந்து நின்றான். ”என்ன குற்றம் கண்டாய்?” என்றார் இறைவன். அதற்கு நக்கீரன் ”சொற் குற்றம் இல்லை. பொருட் குற்றம் உள்ளது. கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது. அது கூடிய மலர்களைச் சார்ந்து மணம் பெரும்” என்றான். அத்துடன் எந்த மகளிராக இருந்தாலும், தான் வணங்கும் திருகாளத்தியப்பரின் நாயகியாக இருந்தாலும் கூந்தலுக்கும் இயற்கை மணம் கிடையாது என்று ஆணித்தரமாகக் கூறவே, எம்பெருமான் ஆத்திரங்கொண்டு தமது நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார்.
நக்கீரன்அது கண்டும் அஞ்சவில்லை. ”நீர் இந்திரனைப் போன்று உடல் முழுவதும் கண்களை உடையவராயினும் அல்லது முக்கண்களையுடைய சிவனே ஆயிலும் சரி! உம் பாடலில் உள்ள குற்றம் குற்றம் தான்!” என்று ஆணவத்துடன் கூறினான். ”நக்கீரா!” என்று அவனை நெற்றிக் கண் கொண்டு பார்க்க, அதன் வெப்பம் தாங்காமல் விரைந்தோடி பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தான். புலவர் வடிவிலிருந்த எம் பெருமான் மறைந்தருளினார்.
நக்கீரனைக் காப்பாற்றிய
புலவர்கள்
நக்கீரனுக்கு ஏற்பட்ட நிலையை அறிந்த கபிலர்,
பரணர் போன்ற பெரும்புலவர்கள், சிவபெருமான் புலவர் வடிவம் தாங்கி வந்துள்ளார். அவரிடம்
வாம் புரிந்து பெரும் பிழையை செய்துவிட்டான் நக்கீரன். பின் புலவர்கள் அனைவரும் சோமசுந்தரப்
பெருமானை வணங்கி, எம் பெருமானே! நக்கீரன் ஆணவ மிகுதியால் தங்கள் பாடலின் பிழை கண்டு
வாதிட்டான். இப்போது பொற்றாமரை குளத்தில் வீழ்ந்துள்ளான். அவன் பிழையைப் பொறுத்துக்
காத்தருள வேண்டும்” என்று வேண்டினர்.
இறைவன் இறைவியுடன் பொற்றாமரைப் பொய்கையில்
எழுந்தருளினார். அவர்களின் திருவருளரால் நக்கீரன் தன் தவறை உணர்ந்தான். ஐயனே! உமாதேவியாரின்
கூந்தலுக்குக் குற்றம் சொன்ன என்னைத் தங்களைத் தவிர வேறு யார் தான் பொறுத்தருள முடியும்’
என்று வேண்டியபடி, ’கயிலை பாதி காளத்தி பாதி’! என்ற காளத்தியப்பர் மீது திரு அந்தாதியொன்றைப்
பாடி வேண்டினான்.
எம்பெருமான் அவனைக் கரையேற்றினார். ”கருணைக்
கடலே! கோபத்திலும் அருள் பாவிக்கும் ஞான தெய்வமே!” என்று புகழ்ந்து கோபப் பிரசாதம்
என்ற பாமாலையையும் பரமனுக்கு சூட்டிப் போற்றினான். ”நக்கீரா! அஞ்சற்க. நீ முன் போலவே
நன் மதிப்புடன் திகழ்வாய்” என்று கூறி மறைந்தார். அதன் பின் நக்கீரன் பொற்கிழியை தருமிக்குக்
கொடுத்தான். மன்னனும் மேலும் பல பரிசுகளைத்
தருமிக்கு வழங்கினான்.
பார்வை நூல்
1.
இராமாயணக் கதைகள்
– ஸ்வாமி, அபி புக்ஸ், J.V.காம்ப்ளக்ஸ், கோயம்புத்தூர் -641 018.
Comments
Post a Comment