சிவனின் ஆனந்த தாண்டவங்கள்
இறைவன் ஆடிய தாண்டவங்கள் ஏழு என்பர். அவை
ஆனந்த தாண்டவம், சத்திய தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம்,
முனி தாண்டவம், சங்கரா தண்டவம் ஆகியன. நடராஜ தாண்டவம் தமிழ் மண்ணிற்கே உரியது.
இறைவனின் எழுவகை தாண்டவங்களை மயிலை சீனி வேங்கடசாமி விரிவாக விளக்குகிறார்.
1.
ஆனந்த தாண்டவம்
சிதம்பரம் தில்லைப் பொன்னம்பலத்தில் பதஞ்சலி
வியாக்கிபாதர் ஆகிய முனிவர்களுக்காக ஆடப்பட்டது என்பது ஐதீகம். இது படைத்தல், காத்தல்,
அழித்தல், மறைத்தல் என்னும் செயல்களை ஒருங்கே காட்டுதல். இது நதாந்த நடனம் எனவும் படும்.
மார்கழி திருவாதிரையுடன் தொடர்புடைய நடனம். இந்தத் தாண்டவப் பிரதிமையில் உள்ள உறுப்புகளை
சிவாயநம என்பதுடன் பொருத்திக் காட்டுவர். திருவாலங்காட்டில் கிடைத்த ஆனந்த தாண்டவ செப்புப்
படிமம் இப்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.
2.
சத்திய தாண்டவம்
சத்திய தாண்டவம் அல்லது கௌரி தாண்டவம் என்ற
நடனம் மதுரை வெள்ளியம்பலத்தில் – கௌரிதேவிக்காக மாலை நேரத்தில் ஆடப்பட்டது. இது திருப்பத்தூரிலும்
ஆடப்பட்டது என்பது – ஐதீகம். அது பிரதோச நடனம் எனவும் படும். இந்தப் படிமத்தில் 8 முதல்
10 கைகள் இருக்கலாம். பொதுவாக நான்கு கைகள் அமைப்பது மரபு. இக்கைகளில் இரண்டில் துடி,
பாம்பு இருக்கும். ஒன்று அபயம் காட்டும். இன்னொன்று வீசிய கரம். இந்தப் படிமத்தில்
அக்கனியைக் காட்டக்கூடாது. சந்தியா தாண்டவத்தின் காலடியில் முயலகன் இருக்கலாம். இல்லாமலும்
இருக்கலாம். இந்தத் தாண்டவப் படிமத்தின் இடதுபுறம் கௌரியும் வலதுபுறம் நந்தியும் இருப்பர்.
3.
சந்திய தாண்டவம்
சந்திய தாண்டவப் படிமம் காஞ்சிபுரம் கூரம் ஊர்க்கோவிலில் உள்ளது. திருநெல்வேலி
மாவட்டம், திருமலையப்பக் குடைவரைக் கோவிலில் இது புடைப்புச் சிற்பமாக உள்ளது. உடையார்
பாளையம் திருமழப்பாடியிலும் இதன் கல் சிற்பம் உள்ளது. இப்படிமத்தைப் புரட்டாசி முழு
நிலவில் வணங்குதல் நல்லது என்பது நம்பிக்கை. இத்தகு பரமவகை கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு
முற்பட்டது என்பர்.
4.
திரிபுரதாண்டவம்
திருக்குற்றால சித்திர சபையில் ஆடப்பட்டது
என்பது ஐதீகம். இந்தப் படிமத்தில் சடைமுடி கவிழ்ந்திருக்காது, இதற்கு 4 கைகள். வலது
கையில் துடி, இடது கையில் அக்னி, ஒரு கை அபயமுத்திரை, இன்னொரு கை வீசிய கரம். இடதுபாதம்
முயலகன் மேல் ஊன்றி நிற்கும். இத்தகு படிமம் ஈரோடு கொடிமுடி சிவன் கோவிலிலும் திண்டிவனம்
வட்டம் திருவக்கரை சிவன் கோவிலிலும் உள்ளது.
5.
காளிகா தாண்டவம்
காளிகா தாண்டவம் படைத்தல் என்ற தொழிலைக்
காட்டுவது. இது முனிதாண்டவம் எனவும் படும். இத்தாண்டவத்தைத்தான் சிவன் திருவாலாங்காட்டில்
ஆடினார் என்பது ஐதீகம். இப்படிமத்தில் 6 கைகள் இருக்கும். இவற்றில் துடி, பாசம், அக்கினி,
மணி, முத்தலைப் பாம்பு ஆகியன இருக்கும். ஒரு கை வீசிய கை (கஜஹஸ்தம்)
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் ஊரை அடுத்தக்
களக்காடு விருபாட்டீஸ்வரர் கோவிலில் காளிதாண்டவப் படிமம் உள்ளது. இதற்கு நான்கு கைகள்.
இரண்டு கைகள் துடி, அக்னி ஏந்தியவை. ஒரு கை அபய ஹஸ்தம், இன்னொரு கை வீசிய கை. இதில்
முயலகன் நடராஜரின் திருவடிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். இறைவனின் கால் முயலகன்
மேல் படவில்லை. தஞ்சை மாவட்டம், திருநல்லூரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் பஞ்ச லோக
காளிதாண்டவ படிமம் உள்ளது. இந்த வடிவம் கி.பி.12 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலில்
உருவானது என்பார் சீனி வேங்கடசாமி.
6.
சங்கரா தாண்டவம்
சங்கரா தாண்டவம் (மாறு கால்) நடு இரவில்
ஆடியது. அழித்தலை குறிப்பது. இவ்வகை படிமத்திற்கு நான்கு கைகள். இரண்டு கைகளில் அக்கினி,
துடி, ஒரு கை கஜஹஸ்தம் இன்னொரு கை தூக்கிய திருவடியைத் தொட்டு இருப்பது. இத்தகு சிற்பம்
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இச்சிற்பத்தில் இரண்டு அடிகளும் ஒன்றுக்கொன்று
சேராமல் இருப்பதால் மாறுகால் தாண்டவம் எனப்படும்.
7.
ஊர்த்துவதாண்டம்
ஊர்த்துவதாண்டம் என்பது அருளல் செயலைக் குறிப்பது.
இது காளித் தாண்டவம். அனுக்கிரக தாண்டவம் என்னும் பெயர்களாலும் குறிக்கப்படும். இது
திருவாலாங்காட்டில் என்றும் ஐப்பசித் திங்கள் முழு நிலவில் இத்தாண்டவப் படிமத்தை வழிபடுவது
நல்லது என்ற நம்பிக்கை உண்டு. இந்த வடிவம் உறுதிப் பொருளைக் கொடுப்பது.
ஊர்த்துவதாண்டவ படிமத்தின் வலது கையில் துடியும்,
இடது கையில் அக்னியும் இருக்கும். ஒரு கை அபய முத்திரை காட்டும். ஒரு கை தலைக்கு மேல்
தூக்கி அகங்கையைக் கவிழ்த்து இருக்கும். தூக்கிய திருவடிக்கு மேல் இடதுக்காலை ஊன்றி
வலது காலைத் தூக்கி ஆடுவது. இந்தப் படிமம் பல கோவில்களில் உள்ளன. திருவாலங்காட்டுச்
சிவன் கோவிலில் 8 கைகள் கொண்ட பஞ்சலோகப் படிமம் உள்ளது.
பார்வை நூல்
1.
அ.கா. பெருமாள்
- தமிழர் கலையும் பண்பாடும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை -600 014.
Comments
Post a Comment