குரவைக் கூத்து
பண்டைய கூத்துகளில் குரவைக் கூத்து முக்கியமானது. பழம் இலக்கியங்களில் அதிகம்
பேசப்படுவது. இக்கூத்து அய்த்தல், தழுவுதல், முறைதல், தூங்குதல், நிற்றல் என்னும் சொற்களின்
அடைமொழிகளுடன் கூறப்படுவது. ஆரவாரம் மிக்க இக்கலையைப் பார்த்தவர்கள் பாமரர்கள் என்பதும்
குறிப்பிடத்தகுந்தது.
இக்கூத்து முதலில் குறிஞ்சி நிலத்தில் பொழுதுபோக்கு
வழிபாடு அம்சமாக உருவாகி பிற நிலங்களுக்கும் பரந்திருக்கிறது. குறவர் அவை என்பது குரவைக்கூத்து
ஆனது என இதை விளக்குவர். குரவை என்பது குறவையிலிருந்து தோன்றிய சொல் என்ற கருத்து உண்டு.
மதுரைக்காஞ்சி குன்றுதோறும் நின்ற குரவை எனக்கூறும்.
குரவைக்கூத்து ஒரு நிகழ்த்து கலை. இதில்
7 அல்லது 9 கலந்து கொள்ளுவர் என உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். இது இரு பாலருக்கும்
உரிய கூத்து. இக்கூத்தைக் குறிக்கும் சொற்களில் தழுவுதல் என்ற சொல் குறிப்பிடத்தகுந்தது.
குரவை தழீஇ, பல்பிணை தழீஇ, மேனித் தழீஇ என்ற பழம் சொற்கள் பிணைந்து ஆகுதலைச் சுட்டும்.
குரவைக் கூத்தை ஆடியபோது கள் குடிப்பது சாதாரண
நிகழ்ச்சி, அப்போது இதில் ஒரு ஒழுங்கு இருந்திருக்க நியாயம் இல்லை. அதனால் இதை அயல்தர்
எனக் குறிக்கின்றனர். சடங்கு சார்ந்த இக்கலை நிகழ்த்தப்பட்ட போது இதனுள் ஒரு ஒழுங்கு
இருந்திருக்கலாம். அப்போது பாடப்பட்ட பாடலும் பின்னணியாக இசைக்கப்பட்ட கருவியின் இசையும்
ஒழுங்குடன் இருந்திருக்கலாம். இதனால் ஆரம்ப காலக் குரவைக் கூத்தில் சடங்கு சார்நதும்
பொழுதுபோக்கு சார்ந்தும் என இருவேறுபட்ட நிலைகளில் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இக்கலை
வெற்றியின் அடையாளமாக நிகழ்த்தப்பட்டபோது இதில் வரையறை இருக்கவில்லை.
குறிஞ்சி நிலத்தில் பிறந்த இக்கலை முதலில்
மலையின் உச்சியில் மரங்களின் இலை பரந்த வெளியில் இயற்கைச் சூழலில் நடந்திருக்கிறது.
பின்னர் இது வேறு நிலங்களிலும் பரவியது. இதனால் இதன் தன்மை மாறியது. முல்லை நிலத்தில்
பொழுது போக்கிற்காகவும் நடந்தது. அப்போது பெரும்பாலும் பெண்களே கூத்தில் பங்கு கொண்டனர்.
மருத நிலத்தில் முன்னேற்பாட்டுடன் ஆடப்பட்டது. பாலை நிலத்தில் இக்கலை நிகழவில்லை. இருபாலரும்
ஆடும் ஆட்டம் என்பதால் காதலை வளர்க்க இதில் இடமிருந்தது. காதலின் அன்பைப் பெற இந்த
ஆட்டம் உதவியது. தேவராட்டம் தொடர்பான செய்திகளை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
குறிஞ்சிநிலத்தில் முருகனுக்காகக் குரவை
ஆடப்பட்டது. இந்தவகை ஆட்டம் பரவலாக நடந்திருக்க
வேண்டும். பரதவர் இக்கலையை நெய்தல்நிலத்தில் நடத்தியபோது கள் குடிக்காமல் ஆடியிருக்கின்றனர்.
ஆரம்பகாலச் சங்கப்பாடல்களின் படி குரவைக்கூத்தை
தொழில் முறைக் கலைஞர்கள் நடத்தவில்லை என்று தெரிகிறது. அப்போது குடும்பம், சமூகம் என்ற
அளவில் நடந்தது. ஒழுங்கின்றியும் நடந்திருக்கிறது. பொழுதுபோக்கிற்காக நடத்தப் பட்டபோது
பெரும்பாலும் குளிர்ச்சியான இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். ஆடியவர்கள் கள் குடிக்கவும்
செய்தனர்.
குரவைக் கூத்து இருபாலருக்கும் உரியது என்றாலும்
மகளிரே அதிக அளவில் கலந்து கொண்டனர். பரந்த வெளியல் இது விளையாட்டாக நடத்தப்பட்டது
என்பதை குப்பை வெண்மணல் குரவை, வேங்கை முன்றில் குரவை, கொண்டல் இடுமணல் குரவை என்ற
தொடர்கள் உணர்த்தும். காதலர்கள் குரவையாடிய போது தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
சங்ககாலத் தமிழரின் கொடையாகக் குரவைக் கூத்தைக்
கொள்ளலாம். பழந்தமிழரின் இசை வடிவங்களுக்கும் பாடல்களுக்கும் உரமூட்டியது இக்கலை. சிறுபறை,
தொண்டகப்பறை, ஆம்பல்குழல், தண்ணுமை என்ற இசைக் கருவிகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்தது.
சிலப்பதிகாரத்தில் குறிப்படப்படும் குரவைக்
கூத்து சங்க காலக் குரவைக் கூத்திலிருந்து வேறுபட்டது. இக்காலத்தில் இது அழகுணர்ச்சியுடன்
ஆட்பட்டது. இளங்கோவடிகள் காலத்தில் குரவைக் கூத்தை ஏழு பேர்கள் ஆடவேண்டும் என்ற வரையறை
இருந்திருக்கலாம். ”எழுவர் இளங் கோதையர் என்று தன் மகளை நோக்கி தொன்றுபடு முறையாலிறுத்து”
என்பது சிலப்பதிகாரம், என்றாலும் 7 முதல் 9 பேர்களும் ஆடியிருக்கின்றனர். அடியார்க்கு
நல்லாரும் இதைக் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகார காலத்தில் குரவைக் கூத்து பாடல்நிலை,
வழிபாட்டு நிலை என்ற நிலைகளில் வளர்ச்சியடைந்தது. சமயம், சமூகம் தொடர்பான பாடல்கள்
பாடப்பட்டிருக்கலாம். இவை தொடர்பான நம்பிக்கைகள் இக்காலத்தில் வலுப்பெற்றிருக்கலாம்.
சிலப்பதிகாரத்தில் வரும் இடைக்குலப் பெண்ணான மாதிரி என்பவள் ஒரு பிறப்பில் குரவைக்கூத்து
ஆடியதால் மறுபிறப்பில் திருமாலுக்கு அடியவளானாள்.
அடியார்க்கு நல்லார் வினோதக் கூத்தில் ஒன்றாகக் குரவையைக்
குறிப்பிடுகிறார். அவர் தம் சமகாலத்தில் பார்த்ததையோ பழைய செய்திகளைக் கேட்டதையே கருத்தில்
கொண்டு குரவைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்திருக்கலாம். குரவையின் பின்னணி சடங்கு சார்ந்த
வழிபாடு என்ற எல்லையைத் தாண்டி புராணம், தொன்மம், முற்பிறவிக் கொள்கை போன்றவற்றுடன்
இணைக்கப்பட்டபோது ஆட்ட முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
சங்க காலத்தில் நிலத்துடன் தொடர்புடையதாக
நிலத்தன்மையை வெளிப்படுத்துவதாக இருந்த குரவை, சிலப்பதிகார காலத்தில் பொழுதுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
சங்க காலத்தில் இசைக் கருவியுடன் பெரிதும் தொடர்புடையதாய் இருந்த குரவை இரண்டாவது காலகட்டத்தில்
நெறிப்படுத்தப்பட்டு பாடலக்ளுக்கு முக்கியத்துவம் அளித்தது. இப்பாடல்கள் இலக்கியத்
தரம் உடையவை ஆயின. குரவைக் கூத்து வீழ்ச்சியடைந்த பிறகும் குரவைப் பாடல்கள் மதிப்பிழக்கவில்லை.
சிலப்பதிகாரக் குரவைப் பாடல்கள் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, விளரி, தாரம் என்ற இசைநரம்புகள் பெயரால் அழைக்கப்பட்டன. இங்கு மாயவன்,
நப்பின்னை குறித்த தொன்மங்கள் பேசப்பட்டன. பிற்கால ஆழ்வார்களுக்கு நப்பின்னை தொன்மத்தைக்
கொடுத்தது சிலப்பதிகார குரவைப் பாடல்களே.
பார்வை நூல்கள்
1.
அ.கா.பெருமாள்
– தமிழர் கலையும் பண்பாடும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 600 014.
Comments
Post a Comment