Skip to main content

சங்க கால மகளிரின் இசைத்திறம்

 

சங்க கால மகளிரின் இசைத்திறம்

சங்க கால மகளிர் கவின் கலைகளில் வல்லவராகத் திகழ்ந்தனர். வாழ்க்கையில் மகிழ்ச்சி விளைக்கும் கலைகள் பலவற்றையும் தமிழ் மகளிர் ஐந்தாம் வயது நிரம்பிப் பன்னிரண்டாம் வயது முடிய ஏழாண்டுகளிலும் நன்றாக்க் கற்றுணர்ந்தனர் என்கின்றார்.

குறிஞ்சிப் பண்

          குறிஞ்சி நிலத்திற்குரிய பண் குறிஞ்சிப் பண். முருகனுக்கு வெளியாட்டு நிகழும் போது பலவகையான வாத்தியங்கள் முழங்க குறிஞ்சிப்பண் பாடப்பட்டதைத் திருமுருகாற்றுப்படை (238-239) இயம்புகிறது.

          மலைச்சாரலில் உள்ள தினைப்புனத்தில் குறப்பெண் ஒருத்தி குறிஞ்சிப் பண் பாடுகிறாள். குறிஞ்சிப் பண் பாடிக்கொண்டே அவளது தழைத்து நீண்ட கரிய கூந்தலைக் கோதிக் கொள்கிறாள். தினையை உண்ண வந்த யானைக் குறிஞ்சிப் பண்ணைக் கேட்டவுடன் தினையையும் உண்ணவில்லை. நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. துயில் வராத அதன் கண்கள் துயில் வரப்பெற்று உறங்கிய நிலையில் நிற்கின்றது.

          ”ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி

         பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

         குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

         மறம்புகல் மழகளிறு உறங்கும்”

என்னும் அகநானூற்றுப் பாடல்(102) படம் பிடிக்கிறது.

மருதப்பண்

          மருதப்பண் விடியற்காலையில் இசைக்கப் பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகிறது. விறலியர் சீறியாழில் மருதப்பெண்ணை இசைத்துப் பாடினர். இதனை,

          ”மருதம் பண்ணி கருங்கோட்டுச் சீறியாழ்

         நரம்பு மீதிறவாது உடன்புணர்ந்து ஒன்றிக்

         கடவது அறிந்த இன்குரல் விறலியர்”

என்று மலைபடுகடாத்தின் (534-536) வரிகள் சுட்டுகின்றன.

பாலைப்பண்

          பாலைப் பண் நண்பகலுக்கு உரியது. இனிமையானது. பண்களில் மிகச் சிறந்ததும் புகழ் மிக்கதும் பாலைப்பண். ஆறலைக் கள்வர்கள் பொருள் பறிக்கச் சென்ற பொழுது, வழியில் செல்லும் பயணிகள் பாடிய பாலைப் பண்ணைக் கேட்டு மனம் இளகப் பெற்றனர். ஆறலைக்கும் கொடுமை ஒழித்து திரும்பிப் போயினர், தீயவரையும் நல்லவராகுமாறு மனமாற்றம் செய்யும் ஆற்றல் பாலைப் பண்ணுக்கு  இருந்தது என்பதனை இதனால் உணரலாம். இதனை,

          ”ஆறலை கள்வர் படைவிட அருளின்

           மாறு தலைபெயர்க்கும் மறவின் பாலை”

என்ற பொருநராற்றுப்படை வரிகள் (21-22) இயம்புகின்றன. பாலைப்பண்,

1.   செம்பாலை

2.   படுமலைப்பாலை

3.   செவ்வழிப்பாலை

4.   அரும்பாலை

5.   கொடிப்பாலை

6.   விளரிப்பாலை

7.   மேற்செம்பாலை

என ஏழு பிரிவுகளைக் கொண்டிருந்தது. பாலைப் பண்ணை மிடற்றாலும், யாழாலும், குழலாலும் இசைத்து மகிழ்ந்தனர்.

காஞ்சிப்பண்

          விழுப்புண் பட்டவர்கள், பேயால் பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வருத்தம் தீரக் காஞ்சிப்பண் பாடுவது சங்க கால வழக்கம். விழுப்புண் பட்ட வீரனைக் காக்க ஐயவி (வெண் சிறு கடுகு) அப்புதல், அகிற் புகைத்தல், மணி அடித்தல், வேம்பினை மனையில் செருகுதல் முதலான செயல்களில் ஈடுபடுவர். அப்போது ஆம்பல் குழல் ஊதிக் காஞ்சி பண்ணை மகளிர் பாடியதாகப் புறநானூறு (281:4-7) வழி அறியலாம்.

செவ்வழிப் பண்

          முல்லைக்கும், நெய்தலுக்கும் உரிய மாலை நேரப்பண் செவ்வழிப் பண். இப் பண் இரக்க உணர்ச்சியையும், அவல உணர்ச்சியையும் தோற்றுவிக்க வல்லது. பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் யாழிசை. யாழில் செவ்வழிப் பண் பாட, அவ்விசைக் கேட்டு மாரிக் காலத்து மாலைப் பொழுதில் தமியனாயிருக்கும் தலைவி கேட்டு வருந்தினாள். இக்காட்சியைப்,

         ”பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப

         ஆருயிர் அணங்கும் தெள்ளிசை

         மாரி மாலையும் தமியள் கேட்டே”

என்ற அகநானூறுப் பாடல் (214:13-15) இயம்புகின்றது.

பஞ்சுரப் பண்

          குறிஞ்சி நில மகளிர் வேங்கை மலர் பறிக்குங்கால் விளையாட்டு கருதி பஞ்சுரப் பண்ணை பாடினர். பஞ்சுரப் பண்ணுடன் வேங்கை வேங்கை என்ற ஆரவாரத்தைக் கேட்டு வழியில் சென்று பயணியர் வெருவினர். இதனை,

          ”வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்

           ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்”

என்று ஐங்குறுநூற்றுப் பாடல்(311:1-2) விவரிக்கின்றது.

விளரிப் பண்

          விளரிப் பண் ஏக்கத்தையும் இரங்கலையும் தோற்றுவிக்கும் தன்மையது. பிரிவுத்துயருற்ற தலைவிக்குத் தலைவன் செல்லும் தேரின் மணியோசை விளரிப் பண்ணைப் போல் கேட்பதாக்க் குறுந்தொகை கூறுகிறது.

 சங்க காலத்து மகளிர் இசைக் கலையில் சிறந்திருந்தமை அறிய முடிகிறது.

பார்வை நூல்

1.  முனைவர் எஃப். பாக்யமேரி  - காலந்தோறும் தமிழர் கலைகள், அறிவுப் பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை – 600 014.

 

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...