ஏழு சுரங்கள்
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம் என்பன ஏழு சுரங்களாகும். இவை தற்போது சட்ஜம், ரீடபம்,
காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்று வழங்கப்படுகின்றன. இவற்றின்
முதல் எழுத்துக்களை சரிகமபதநி என்பர். இவை ஏழும் நிறைந்தது பண் என்றும் இவற்றில்
குறைந்து வருவது திறம் என்றும் பெயர் பெறும். நெட்டெழுத்துக்கள் ஏழும் ஆலாபனையில் பயன்பட்டனவாம்.
1.
தாரம்
இது மெய் எழுத்தாய ‘க’ என்ற குறியீட்டெழுத்து
உடைமையால் காந்தாரம் எனப்பட்டது. இதுவே முதல் இசையாகும். காந்தர்வம் இன்பத்திற்குக்
காரணமாக இருப்பது போது இவ்விசை இயல்பாக இக்காலத்துத் தம்பூர் என்ற கருவியிலும் முறை
சுருதி சேர்க்கப்பட்டால் ஒலிக்கின்ற ஒலித்தன்மையில் உள்ளீடாகக் கேட்கப்படுவது.
2.
குரல்
தமிழ் மரபில் ஓரிசை ஈரிசை மூவிசை என்ற பகுப்பு அமைதியில் இரண்டாம் இசையாய குரல்
எனும் இவ்விசை மகளிர் குரலை ஒத்தது எனப்படும் நடுவான இடத்தைப் பெற்றிருப்பதால் இது
மத்திமம் எனவும் கூறப்படும்.
3.
துத்தம்
இது தொந்தம், துருத்தி என்ற சொற்களைப் போன்று முன்னுள்ள எல்லை, பின்னுள்ள எல்லை,
ஆகியவைகளின் அளவு ஒத்திருக்க நடுநின்றமையால் துத்தம் எனப்பட்டது. இனி முறையில் ஐந்தாவதாக
நிற்பது கருதிப் பஞ்சமம் என்று பகரப் பெறுவதும் வழக்காயிற்று.
4.
கைக்கிளை
இசை வகையில் சிறியகிளை என்ற பொருளில் இக்கைக்கிளைப் பெயர் காரணப் பெயராக எழுந்துள்ளது.
இதன் குறியீட்டெழுத்து ‘த’ ஆனதால் அவ்வெழுத்தினைத் தழுவி வருவது பற்றித் தைவதம் எனக்
கூறப்பெறுவதும் உண்டு.
5.
உழை
உழை என்ற சொல் இடத்தது என்று பொருள் பெறும். குழலிலும் யாழிலும் இடக்கையால்
இசைக்கப்படுவது குறித்து இச்சொல் வழங்கி வந்தது என்றும் கூறலாம். இதன் குறியீட்டெழுத்து
‘நி’ ஆனதால் நிசாதம் என்று கூறும் பழக்கமும் பிற்காலத்தில் எழுந்தது.
6.
இளி
இதற்கு அடிமணை, இசை, பட்ட்டை என்னும் பெயர்கள் உண்டு. ஆறுபிறப்பிப்பது என்றும்
ஆறாவது என்றும், ஆறு நிலைகளின் வழி வருவது ஆதலாலும் சட்ஜம் என்று கூறப்பட்டது.
7.
விளரி
ஒரு நிரலாக உள்ள ஒரு தொகுதியை நிறைவு செய்கின்ற ஒன்றினுக்கு விளரி என்று பெயர்.
இது இகர விகுதி பெற்று இறுதி இசை என்ற பொருளில் இரிஷபம் எனக் கூறப்பெற்றது.
இக்காரணங்கள் யாவும் தமிழ்மரபை ஒட்டியனவாகும். எந்த மரபைக் கொண்டு காரணம் கற்பித்தாலும்
ஒலிவகைகளான இவற்றிற்குப் பொருந்தும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தமிழ்
இலக்கண வழக்கு.
பார்வை நூல்
1.
சி.சுப்பிரமணியன்
– சங்க இலக்கியம் சில பார்வைகள், பாரி புத்தகப் பண்ணை, சென்னை-600 108.
Comments
Post a Comment