குறிஞ்சி
திணைகளில்
முதல் திணை குறிஞ்சி. வரலாற்று அடிப்படையில் மலைகளிலும், காடுகளிலும்
தேனும் கிழங்கும் பழமும் தேடியுண்டு வாழ்ந்த வாழ்க்கையே மனிதனின் முதல் வாழ்க்கையாதலால்
குறிஞ்சித் திணையே முதல் திணையாகக் கருதப்பட்டது.
கடல்
மட்டத்திற்கு மேல் ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி
குறிஞ்சிச் செடியாகும். பிற செடிகளுக்கு அத்தகைய வரையறை கிடையாது. இத்தன்மையின்
காரணத்தாலேயே, மலையையும் மலை
சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும். இச்செடியின்
பூ ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி பன்னிரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து காணப்படுகின்றது. இயற்கையில்
இத்தகைய வியப்பிற்குரிய பூ வேறின்மையால் மலையிலும் மலை சார்ந்த இடத்திலும் காணப்படும்
இந்தப் பூவின் பெயராலேயே இந்த இடத்தை அழைத்தனர். செடி நூலில் இச்செடி ‘ஸ்ட்ரொபிளான்த்தெஸ்’ (Strobilanthes) என்ற இனத்தைச் சார்ந்தது.
தமிழ்
நாட்டிலும், ஈழத்திலும்
மத்திய இந்தியாவிலும் காணப்படுகின்றது. நீலகிரி மலையிலும் கொடைக்கானல் மலையிலும் பழனி மலையிலும்
பல ஆண்டுகளாக இச்செடி பூக்கும் காலத்தைக் கண்டு வைத்திருக்கின்றனர். இவை மலைச்சாரல்களில்
பூக்கும் பொழுது பல்லாயிரக்கணக்கான பூக்கள் ஒரே கூட்டமாகத் தென்படும். ஒன்பதாவது ஆண்டிலிருந்து
பன்னிரண்டாவது ஆண்டு வரை மலைச்சாரல்களில் கூட்டம் கூட்டமாக இச்செடிப்புதர்கள் பூத்துக்
கிடக்கும். பன்னிரண்டாம்
ஆண்டில் செடிகள் இறந்துவிடுகின்றன. இப்படிக் கூட்டம் கூட்டமாகப் பார்த்தால்தான் பழந்தமிழ்ப்
புலவர் ‘கருங்கோற் குறிஞ்சி
யடுக்கம்’, (புறம்,374) என்று கூறினார். இந்தப் பூவில்
நிறையத் தேனுண்டு. பல்லாயிரக்கணக்கான பூக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றுவதால்
தேனீக்கள் மலைச்சாரல்களில் பெரிய பெரிய தேன் கூடுகளைக் கட்டுகின்றன. இதனை,
”கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந்.3)
என்று குறுந்தொகைப் பாடல்
வழி அறியலாம். ‘குறிஞ்சிப்
பெருந்தே னிறால்’ என்று கலித்தொகையும்
கூறுகிறது.
”கருங்கோற் குறிஞ்சி மதனில வான்பூ
நாறுகொள் பிரச மூறு நாடற்கு”
என்ற நற்றிணைப் பாடலில்
குறிஞ்சித்தேனின் இனிமை கூறப்பட்டிருக்கின்றது. குறிஞ்சித் தேனை மிக உயரியதாகக் கருதியதற்கு மற்றொரு காரணம்
குறிஞ்சிப் பூக்களின் தேன்கூட்டில் பிற பூக்களின் தேன் கலப்பதில்லை. ஏனெனில் குறிஞ்சிச்
செடி பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித் தேனையே கூடுகளில் சேரக்கின்றன. இத்தகைய தேனை
‘தனிப் பூத்தேன்’ (Unifloral
Honey) என்று அறிஞர்கள் அழைக்கின்றனர். இத்தகைய அரிய பெரிய இனிமையான தேனைத் தருவதாலும் மலையும் மலைசார்ந்த
இடத்தையும் குறிஞ்சி என்ற பெயரால் அழைத்தனரென்று தெரிகின்றது.
நீலகிரியில்
தோடர்கள் தங்கள் குழந்தைகளின் வயதைக் குறிஞ்சிச் செடி பூப்பதைக் கொண்டே கணக்கிட்டனர்
என்கின்றனர். குறிஞ்சிச்செடி
எப்படிப் பழங்குடி மக்களையும் பழந்தமிழரையும் கவர்ந்ததோ, அது போல நீலகரியிலும் கொடைகானலிலும் வாழ்ந்த வெளிநாட்டாரின்
கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக இதைப் பற்றிய நாட்குறிப்பும் எழுதியுள்ளனர். இச்செடியின்
பூவைப் படம் வரைந்தும் பாடம் செய்தும் வைத்திருக்கின்றனர்.
குறிஞ்சிச்
செடியின் பல இனங்கள் உள்ளன. அதில் ஓரினம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை மலரும். அது விளையும்போது
பிற செடிகளை வளரவிடாது அழுத்திவிடும். இச்செடி ஆண்டுதோறும் இளவேனிலில் குருத்துத் தோன்றும். பல கணுக்கள்
விட்டு வளரும். இக்குருத்து, ஆண்டு இறுதியில்
கீழ்க்கணுவைத் தவிர்த்து முழுவதும் அழிந்துவிடும். குறிஞ்சிச் செடியில் 28 இனங்கள் ஈழத்தில் காணப்படுகின்றன. பர்மாவிலும்
அசாமிலும் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அவை சிறப்புடையவனாகக் காணப்படுகின்றன. ஏனெனில் வேறெங்கும்
அவை செழிப்பாகவும் பெரியதாகவும் தமிழ் நாட்டில் வளர்வது போல் இருப்பதில்லை. குறிஞ்சி இனங்களில்
பூக்களின் நிறம் மாறுபடுகிறது. மிக அழகிய பூக்களையுடைய இனங்கள் பல ஆண்டுகளுக்கொரு முறையே
பூக்கின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்கள் இச்செடியை ‘மலைவாழ் புதர்ச்செடி’ என வருணிக்கின்றனர். குறிஞ்சிப்பூவின் நிறங்களில் நீல நிறத்தையே தமிழர் போற்றினர்.
குறிஞ்சிப்
பூவின் பல நிறங்களையும் தமிழர் நன்றாக அறிந்திருந்தனர் என்று கூறுவது மிகையாகாது. ”கருங்கோற்
குறிஞ்சிப் பூ” என்று பலவிடங்களில்
இப்பூ வருணிக்கப்படுகின்றது. குறிஞ்சி அரும்பாயிருக்கும் போது வெண்மையாகக் காணப்படும். நற்றிணையும்
”கருங்கோற் குறிஞ்சி
மதனிலவான் பூ” என்று கூறுகின்றது. குறிஞ்சித்
திணையில் குறிஞ்சிப் பண் தோன்றியது. குறிஞ்சிப் பண்ணில் தோன்றும் இராகங்களைக் குறிஞ்சி இனப் பூக்களின்
நிறத்தால் பெயரிட்டழைத்து இருக்கின்றனர்.
இயற்கையோடு உள்ளுணர்வை இணைத்துப் பார்க்கும்
முறை அறிவியல் வளர்ந்தபின் தோன்றியதொன்று. மிகப் பிற்காலத்தது. ஆனால் சங்க காலத் தமிழர்
இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர்.
நிறத்திற்கும் இசைக்கும் ஒப்புமை காணும் அளவு நுண்ணிய மனவுணர்ச்சி உடையவராயிருந்தனர்.
நிறத்தையும் ஒழுக்கத்தையும் இணைத்து பார்க்கும் நுண்ணுணர்வும் இருந்தது. கற்பிற்குச்
சின்னமாக மேல் நாட்டில் வெண்மையான ‘லில்லி’ என்ற பூவை இலக்கியத்தில் கூறுகின்றனர்.
ஓவியங்களில் வரைகின்றனர். சங்க காலப் புலவர்கள் வெள்ளை முல்லையைக் கற்புக்கு அறிகுறியாக
அக்காலத்திலேயே கூறினர்.
பல்லாண்டுகளுக்கு ஒரு முறை பிறந்து
இறந்து, பிறந்து இறந்து வாழும் குறிஞ்சிப் பூவின் தேன் சாரலில் சேர்ந்து பெருந்தேனாவது
போலப் பிறந்து இறந்து வாழும் எல்லாப் பிறப்பிலும் நாடனொடு நட்புக் கூட வேண்டும் என்று
கூறக் கூடிய நுண்ணிய உள்ளுணர்வைப் பழந் தமிழிலக்கியத்தில் காண முடியும். காதலர் கூட்டத்திற்குக்
குறிஞ்சி நிலம், கூதிர்க்காலம், நள்ளிரவு என்று பொருத்தம் கூறும் உள நூலறிவினைச் சங்க
இலக்கியத்தில்தான் காணமுடியும். அகத்திணையில் நாம் காண்பது சிறந்த ஒழுக்கம், உயரிய
குறிக்கோள், நுண்ணிய உள்ளுணர்வு, ஆழ்ந்த ஆராய்ச்சி, பரந்த உலகியலறிவு, அகன்ற இயற்கையறிவு,
உலகம் அடங்கலும் அகத்திணையில் அடக்கிப் பார்த்த பழந்தமிழரின் அறிவைப் போற்றாதிருக்க
முடியாது.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியத்தில்
செடி கொடி விளக்கம் – திரு.பி.எல் சாமி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.
Comments
Post a Comment