நெல்லி
நெல்லி
மரத்தைப் பற்றிச் சங்க நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. நெல்லி மரத்தைப்
பாலைத் திணைக்குரியதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. நெல்லி மரம் வறட்சியான சூழ்நிலையில் வளரக் கூடியதென்பதைச்
சங்கப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தனரென்பது விளங்குகின்றது.
”விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அந்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்” (அகம்,241)
”நெல்லி நீடிய கல்லறை கவா அன்” (அகம்,385)
”புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கிற் கடுவளி யுதிர்ப்ப” (அகம்,363)
”நெல்லி நீடிய கல்காய் கடத்திடை” (ஐங்குறுநூறு,334)
நெல்லி மரம் வறண்ட இலையுதிர்
காடுகளிலும், 4,500 அடிவரை உயரமான
குன்றுச் சரிவுகளிலும் இயற்கையில் வளர்வதாகச் செடிநூலார் கூறுவர்.
நெல்லிக்காயைத்
தின்றதனால் மற்ற உணவை உண்ணத் தயங்கும் பற்கள் என்று சொல்லியிருப்பதை ,
”பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி” (அகம்,54)
”சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
விழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த”(நற்றிணை,271)
நெல்லிக்காயைத் தின்னும்
போது புளிச்சுவை தெரியும். ஆனால், தின்றவுடன் நீர் அருந்தினால் வாயில் இன்சுவை தோன்றும். இதையே மேற்காட்டிய
சங்கப் பாடல்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் நீர் வேட்கையைத் தணிக்கும் தன்மையுடையவை,
”குறும்பொறை மருங்கிற் கோட்சுர நீந்தி
நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” (அகம்,271)
பாலையில் நெடுவழி
நடந்தவர்க்கு நீர் வேட்கையால் உயிர் போகாதிருக்க நெல்லிக்காய் உதவியதாகக் கூறியதைக்
காணலாம். உண்ணும் நீர்போல் உதவி நீர் வேட்கையைத் தணித்ததால் ”அறந்தலைப்பட்ட நெல்லியம்
பசுங்காய்” என்று நற்றிணை கூறுகின்றது.
நெல்லியின் காயைப் புறாவும் வௌவாலும் உண்பதாகச்
சங்கநூல்கள் கூறுகின்றன.
”புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்” (அகம்,315)
”நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது”(குறுந்தொகை,
201)
புறா உண்டதாகக்
கூறியது அரிய செய்தியாகும். வௌவால் விரும்பி உண்டதாகக் கூறியது அறிஞர்கள் கண்டறிந்த
செய்தியாகும்.
நெல்லி மரத்தைத் தோட்டத்திலும் விட்டு முற்றத்திலும்
வேலியிலும் வளர்த்து வந்த்தை சங்க நூல்கள் கூறுகின்றன. ”நெல்லி வேலிப் பரலுடை முன்றிலங்குடிச்
சீறூர்” என்று புறநானூறு கூறுகின்றது. வீட்டைச் சுற்றி நெல்லி மரத்தை இன்றும் சிற்றூர்களில்
வளர்ப்பர். நெல்லக்காயின் விதை கல்போல் உறுதியாக இருக்கும். அவ்விதையைப் பரல், என்றும்
புன்காழ் என்றும் கூறுவர்.
”பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா” (புறம்,
91)
”ஆர்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த” (சிறுபாண்,
99,101)
அதியமான் ஔவைக்குத்
தான் அரிதாகப்பெற்ற சாகா மருந்தான கருநெல்லிப் பழத்தைக் கொடுத்தக் கதையைப் புநானூறும்,
சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன. இயற்கையில் அத்தகைய குணமுடைய கருநெல்லிக்கனி இருப்பதாகத்
தெரியவில்லை. ஆனால் நெல்லிக்காய் நிறைய மருத்துவச் சத்துடையது.
அரிநெல்லி
இதன் குடும்பத்தைச் சேர்ந்த அரிநெல்லி என்றொரு
மரமும் உண்டு. இதன் கனியும் உண்பதற்குப் பயன்படும். அரிநெல்லி சங்க நூல்களில் கூறப்படவில்லை. அரிநெல்லிக்கனி இந்திய நாட்டிற்குச் சொந்தமன்று.
மலேயாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் அரிநெல்லியிலிருந்து பிரித்துணர்வதற்காக்க்
காட்டு நேல்லி என்றும், பெரு நெல்லி என்றும் சங்க காலத்தில் வழங்கிய நெல்லியை அழைக்கின்றனர்.
அரிநெல்லியைச் செடிநூலார் `Phyllanthus Acidus’ என்பர்.
பார்வை நூல்
1. கழக வெளியீடு – சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி – 6.
Comments
Post a Comment