தாழை
நெய்தல் திணையில் கடற்கரைச் சூழலில் காணப்பட்டதாகச்
சங்க நூல்களில் கூறப்பட்ட செடிகளில் தாழையும் ஒன்றாகும். தாழையைப் பற்றிப் பல புலவர்கள்
பாடியுள்ளனர். தாழையின் அடிமரம் இலை, பூ, வீழ், வாழும் சூழ்நிலை ஆகியவைபற்றிச்
செய்திகள் வருகின்றன. இச்செய்திகள் செடிநூலில் கூறப்படும் செய்திகளோடு பெரும்பான்மை
ஒத்தே வருகின்றன. தாழையின் அடிமரம் நேரிதாக இல்லாமல் வளைவுடன் காணப்படும். ”தடந்தாள்
தாழை” (நற்றிணை 131, 230, 270) ”தடவுமுதல்”(நற்றிணை 19,235) ”தடவு நிலைத்தாழை” (குறுந்தொகை
219) என்று நற்றிணையிலும், குறுந்தொகையிலும் தாழையின் அடிமரம் பொருத்தமாகக் கூறப்படுகின்றது.
தாழையின் மடல்கள் கீழே விழுந்து தாழையின்
தாள் அல்லது அடிமரம் சருச்சரையுடையதாக இருப்பதைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.
”பிணர் அரைத்தாழை” (அகம்.130) ”பிணர்படு தடவுமுதல்” (நற்றிணை.19,235) என்று தாழையின்
சுர சுரப்பான அடிமரம் விளக்கப்படுகின்றது. தாழையின் அடிமரத்தை மிக அழகாக ”இறவுப்
புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்” என்று நற்றிணை கூறுகின்றது. இறா மீனின் வளைவுகளுடன்
கூடிய புறம் தாழையின் வீழ்ந்த மடல்களால் ஆன வடுவுடன் காணும் அடிமரத்தைப் போல் இருக்கின்றது.
தாழையின் மிக முக்கியமான செய்தியாகக் கருதுவது அதன் விழுதேயாகும். தாழையின் விழுதைச்
செடிநூலார் (Stilt roots) என்று கூறுவர். முதியவனுக்கு ஊன்றுகோல் உதவுவது போல் தாழையைத்
தாங்குவதற்கு இந்த விழுதுவேர் பயன்படுகிறது.
”வீழ்தாட் டாழைப் பூக்கமழ் கானல்” (நற்றிணை,78)
”வீழ் தாழை தாள் தாழ்ந்த” (பட்டினப்பாலை,
84)
”வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை” (குறுந்தொகை,228)
மேற்காட்டிய
பாடல்களில் தாழையின் விழுது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தாழையின் விழுதை
ஊஞ்சல் கயிறுபோல் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. ”வீழ்கயி றூசல்”, ”வீழுசல்”
என்று அழைக்கப்படுகின்றது. தென்னை மரமும் தாழையென்றே சங்க நூல்களில் அழைக்கப்படுகின்றது.
அதை ‘வீழில் தாழை’ யென்று குறிப்பிட்டனர். வீழ் தாழையினின்று பிரித்துக்காட்டவே
வீழில் தாழையெனப் பட்டது.
தாழையின் இலையைக் கண்டவர் யாரும் அதை மறக்கவே
முடியாது. தாழையின் இலையை மடல் என்றழைப்பர். ”மடல் பெரிது தாழை” என்று பிற்காலப்
பாடல் கூறினபடி தாழையின் இலை மிகப் பெரியது. 15 அடி வரையில் நீண்டு வளரக் கூடியது.
”நீடிலைத் தாழை” என்று கலித்தொகை (144) கூறுகின்றது. இலையோரங்களில் கூரிய, ஊறுதரும்
கொடிய முட்கள் நிறைய இருக்கும். தாழையின் இலையைச் சங்க நூல்களில் அழகாக வர்ணித்துள்ளனர்.
”சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை”
(நற்றிணை 19)
தாழை இலையின்
ஓரத்தில் உள்ள பற்கள் அராவுகின்ற வாளரத்தின் பற்கள்போல இருப்பதாகக் கூறியது முற்றிலும்
பொருத்தமே. வாளரத்தைப் போன்று ஒரு திசையில் தாழையின் முட்கள் சாய்ந்திருக்கும். கொம்பன்
சுறாவின் முள் நிறைந்த கொம்பு போலிருப்பதாகக் கூறியதும் அழகிய உவமையாகும்.
தாழையின் உள்மடல் வெண்மையானதாக இருக்கும்.
வெண்தோடு என்று சிலம்பு கூறுவது அகமடலையேயாகும். ”முள்ளுடை நெடுந்தோடு” ”எயிறுடை
நெடுந்தோடு” என்று அகநானூறு (130, 180) கூறுவது பொருத்தமேயாகும்.
தாழையின் இலையைவிட முக்கியமானதாகக் கருதியது
அதன் பூவேயாகும். தாழையின் பூ மிக்க நறுமணமுடையது. தொலைவிலும் நறுமணத்தைத் தரக்கூடியது.
தாழையின் பூவைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.
”தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென
மலரும் பெருந்துறை” (குறுந்தொகை,226)
“பெருங்களிற்று மருப்பினன்ன வரும்பு முதிர்பு”
(நற்றிணை,19)
தாழையின் பூ
வெண்மையானது என்பதை ‘வெள்வீ’ என்றும், ‘வான்போது’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தாழையின் பூ உருவில் சிறகுகளை மடக்கி அமரந்துள்ள வெண்மையான நாரை போலிருப்பதாகக் கூறப்பட்டிருப்பது
அழகான ஒப்புமையாகும். இதன் காரணமாக ‘குருகென மலரும்’ என்றும், ”அலைநீர்த்
தாழை அன்னம் பூப்பவும்“ என்றும் கூறினர். கடற்கரை ஊர்களில் தாழைச் செடிகளிலே நாரைகள்
தங்குவதாகப் பல சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
தாழைக்கு ஆண் பூ, பெண் பூ என்று தனித்தனிப்
பாகங்கள் உண்டு. ஆண் பூவென்பது நிறைய மகரந்தத் தூள் நிறைந்த பாகமாகும். தனியாக உள்ள
ஆண் பூவிலிருக்கும் மகரந்தப்பைகள் திறக்கும்போது பல்லாயிரக்கணக்கான மகரந்தத் தூள்கள்
காற்றடித்துப் பரவும். இதையே மணமிக்க சுண்ணப்பொடி பூசியதுபோலப் பரவியதாகக் கூறியிருக்கின்றனர். சங்க கால மகளிர் சங்கு வளையல்களை
அணிந்தனர். வெண்மையான அவ்வளையல்கள் உடைந்து உதிருவதுபோல் தாழை மகரந்தத்தை உதிர்த்ததாகக்
கூறியது அழகிய ஒப்புமையாகும். தாழையில் நிறைய மகரந்தம் இருந்ததால் ‘தாழாது உறைக்கும்’
என்று கலித்தொகை குறிப்பிடுகின்றது.
புல்வகையை ஒத்த செடிகளுக்கு நிறைய மகரந்தம்
உண்டு என்று செடிநூலார் கூறுவர். இத்தகைய செடிகளில் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும்
காற்றடித்து மகரந்தத் தூள் பரவுதலால் ஆகமெனக் கூறுவர். இயற்கையில் தாழைக்குள்ள பல்லாயிரக்கணக்கான
மகரந்தத் தூள்கள் சிதறுவதைச் சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுப் பாடியிருப்பது அரிய செய்தியாகும்.
அனுபவ வாயிலாக நுண்ணிய, அரிய அறிவியல் செய்திகளையும்
தமிழ்ப் புலவர்கள் உணர்ந்திருந்தனர். மிகப் பிற்கால நூலாகிய விறலி விடு தூதில் தாழையின்
மகரந்தம் காற்றில் வீசுவதைப் பற்றி நுண்ணிய செய்தி கூறப்பட்டுள்ளது.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம் – கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், திருநெல்வேலி -6
Comments
Post a Comment