முல்லை
முல்லைப் பூ சிறத்தலால் முல்லை நிலம் எனப் பெயர்பெற்றது. முல்லை என்பது காடும் காடு
சார்ந்த நிலமும் என்று கூறுவர். முல்லை தொத்தி ஏறும் ஒரு செடியாகும். இஃது இயற்கையில்
குறுங்காடுகளிலும் காடு சார்ந்த வெளிகளிலும் வளர்கின்றது. சங்க இலக்கியத்தில் மிகப்
பல இடங்களில் முல்லையைப் பற்றிய பாடல்கள் குறுந்தொகையில்,
”கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை” (குறுந்,62)
”சிறுவீ முல்லைக் கொம்பிற றாஅய்” (குறுந்,275)
”இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித்
தன்ன பசுவீ மென்பிணிக்
குறுமுகை
யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்” (குறுந்,220)
இடம்பெற்றுள்ளன.
முல்லை ஒரு கொடி என்று சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. ‘முல்லை மென்கொடி’
‘பைங்கொடி முல்லை’ என்று அழைக்கப்படுகின்றது. முல்லைச் செடியின் புதிய கிளைகள்
மென்மையாக இருக்கும். முல்லையின் இலைகளைப் ‘பாசிலை’ என்று சங்க நூல்கள் அழைக்கின்றன.
இதன் இலைகள் அகன்றதாயும் கரும்பச்சையாகவும் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது.
முல்லையின் பூ ‘பசுவீ முல்லை’ ‘சிறுவெண்
முகை’ ‘சிறுவீமுல்லை’ என்று கூறப்பட்டிருக்கிறது. முல்லையின் மொக்கிற்குக் காட்டுப்
பூனையின் பல் ஒப்பிடப்பட்டிருக்கின்றது. முல்லையின் முகை ¾ அங்குல நீளமிருக்கும். கூர்மையாகவும்
வெண்மையாகவும் இருக்கும். இதனால் முல்லை மொக்கு காட்டுப்பூனையின் பல்லிற்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது.
முல்லையின் விரிந்த பூவைவிட மொக்குத்தான் ‘வெண்முகை’ ‘தொகு முகை’ ‘குறு முகை’
என்று கூடுதலாகப் பாடப்பட்டிருக்கின்றது. முல்லை முகைத்தலையும், முகையின் தலைசிறந்து
வீசும் நறுமணத்தையும், முல்லை மென்பிணி அவிழ்தலைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம்.
முகைத்தல், முகை முற்றல், முகையவிழ்தல் என்ற மூன்று பருவங்கள் கூறப்படுகின்றன.
முல்லைமலர் வெள்ளியதாகவும், சிறந்த மணமுடையதாகவும்,
தூயதாகவும் காணப்படுவதால் முல்லைமலரைக் கற்புக்கு அறிகுறியாகப் பழந்தமிழர் கொண்டனர்.
குறுந்தொகை 108 ஆம் பாடல் ‘முல்லை ஆசில் வான் பூ’ என்றும்,
”குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை
சான்ற கற்பின் மெல்லியல்” (சிறுபாண், 29-30)
கற்பிற்கு முல்லைப்பூ
பொருந்துவதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுவதை எண்ணப் பார்க்க வேண்டும். ஐரோப்பிய இலக்கியத்திலும்
தூய, வெள்ளிய ‘லில்லி’ மலர் கற்பிற்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. தூய்மைக்கும்
ஒப்பிடப்பட்டிருக்கின்றது. முல்லைச் செடி கார்காலத்தில் பூப்பதாகச் சங்க நூல்களில்
பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. முல்லைச்செடி கார்காலத்தில் பூப்பதாகவும், மழைக்காலமான
ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை பூப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது. முல்லைச் செடியை
‘Jasminum Auriculatum’ என்று வழங்குவர்.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம் – திரு.பி.எல்.சாமி, கழக வெளியீடு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.
Comments
Post a Comment