Skip to main content

பாம்புச் செடி

 

பாம்புச் செடி

          பாம்புச் செடி என்ற செடி அகநானூற்றில் கூறப்படுகின்றது. செடிகள் பாம்பின் படம் போலிருப்பதே தற்காப்பு ஆகும். இச்செடிகளை விலங்குகள் பாம்பு என்று அஞ்சி அணுகாது. சங்க நூற்களில் அகநானூற்றில் மட்டும் இச்செடி பற்றிய செய்தி காணப்படுகின்றது.

          ”வெண்கோட் டியானை விளிபடத் துழவும்

           அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்

           பகலு மஞ்சும் பனிக்கடுஞ் சுரனே” (அகம்.68)

என்ற அகப்பாடலில் ‘அகல் வாய்ப் பாந்தட் படார்’ என இச்செடி குறிப்பிடப்படுகிறது. இச்செடியைக் கண்டு யானை அஞ்சுவதாகக் கூறப்படுகின்றது. விலங்குகளில் பாம்பைக் கண்டு அஞ்சுவன யானையும் குரங்கும் என விலங்கு நூலறிஞர் கூறுகின்றனர்.

          ”சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை

           கான யானை அணங்கி யாஅங்கு” (குறுந், 119)

எனக் குறுந்தொகைப் பாடல் கூறுகின்றது. குரங்குகள் பாம்பைக் கண்டால் அஞ்சும். பாம்பைக் கொல்வதற்காக அதைக் கையால் பிடித்துவிடும். விடவே விடாது. ஆதலின் பிடித்த பிடியை, பாம்பு பல தடவை வளைந்து கடித்தாலும் தான் சாகும் வரை தளரவிடாது. பாம்பைப் பார்க்கவும் அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்டு பிடித்த பாம்பை விடாதிருக்கும். இதை ”பைங்க ணுகம் பாம்பு பிடித்தன்ன” என்ற பாடல் வரி கூறுகின்றது. ‘குரங்குப்பிடி’ என்பது பேச்சு வழக்கில் வழங்குவது பாம்பைக் குரங்கு பிடிப்பதைக் கொண்டு கூறுவதாகும்.

           மலைப்பகுதிகளில் மலைப்பாம்புகள் குரங்குகளைப் பிடித்து விழுங்கிவடும். மற்றும் விழுதுபோல் மரங்களில் தொங்கிக் குரங்கை ஏமாற்றிப் பிடித்து உண்பதும் மலைப்பாம்புகளின் வழக்கம். மலைப்பாம்புக்கு மலைப் பகுதிகளில் அடிக்கடி அகப்படும் உணவு குரங்குகளாகும். ஆதலால் பாம்புகள் என்றால் குரங்குகளுக்குப் பெரும் பயம். இதைப் பாரதிதாசன் ஒரு பாடலில்,

          ”கிளையினிற் பாம்பு தொங்க

         விழுதென்று குரங்கு தொட்டு

        விளக்கினைத் தொட்ட பிள்ளை

        வெடுக்கெனக் குதித்த தைப்போல்

        கிளைதோறும் குதித்துத் தாவிக்

        கீழுள்ள விழுதை யெல்லாம்

        ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி

        உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்”

என்ற பாடலில் சங்கப்பாடல் மணம் கமழக் காண்கிறோம். இயற்கையுண்மையை வெகு அழகாகப் பாடியுள்ளார். சங்கப் புலவர் வந்த பாரதிதாசன்.

          பாம்புச் செடியைப் ‘பாந்தட் படார்’ என்றழைக்கின்றார் ஊட்டியார் என்ற சங்கப் புலவர். படர்வது படார், பாந்தட் படார் என்பது ஒரு கொடியெனத் தெரிகின்றது. இச்செடி சோற்றுக் கற்றாழை போலிருக்கும். பழந்தமிழ் புலவர்கள் மலைகளில் ஆராய்ந்து கண்ட செடியே பாந்தட் படாராகும்.

          அகநானூற்றில் 288 – ஆம் பாடலில் வரும் ‘வெரு வரு படாஅர்’ என்ற தொடரும், ‘படா அர் வெரூஉம்’ என்ற 309 பாடல் தொடரும் இந்தப் பாந்தட் படாரையே குறிப்பிடுகின்றன என்று தெரிகின்றது.

          ”இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்

           தண்பெரும் படாஅர் வெரூஉம்

           குன்றுவிலங் கிடவினவர் சென்ற நாட்டே” (அகம், 309)

இப்பாட்டில் யானை, ‘படாஅர்’ கண்டு பயப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இது அகம் 68 இல் வரும் ‘பாந்தட் படாஅர்’ செய்தியோடு ஒத்திருப்பதால், இதில், ‘படாஅர்’ என்று குறிப்பிடுவது பாம்புச் செடியையே யாகும்.

          கொடைக்கானல் மலை உயரத்தில் இயற்கையில் பாம்பைக் காண முடியாது. இருப்பினும் இந்தப் பாம்புச் செடியின் படமெடுத்தாற் போன்று நிற்கும் பூவைக் கண்டு சிலர் பாம்பென்று பயந்து ஏமாறுகின்றனர். இந்தச் செடி சேப்பங்கிழங்கு இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பூவை மறைத்துக் கொண்டு ஒரு மடல் மூடியிருக்கிறது. இந்த மடல் படமெடுத்தாடும் நாகப்பாம்பின் படம்போல் நிமிர்ந்து பாம்பின் படத்தில் காணப்படும் வரிகளுடனும் புள்ளிகளுடனும் காணப்படுகின்றது. இந்தச் செடியை ‘Arisaema Leschenaulti’ என்றழைக்கின்றனர். ஆதலின் சங்க இலக்கியத்தில் கூறப்படும் பாம்புச்செடி கொடைக்கானலில் தற்போது நாகப்பாம்புச் செடி என்றழைக்கப்படும் செடியாக இருக்கலாம்.

பார்வை நூல்

1.  சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்திரு.பி.எல் சாமி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...