நெய்தல்
கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் திணை
என்று கூறப்படும். கடல் சார்ந்த இடத்தில் நெய்தல் செடி காணப்படுகின்றது. கடலோரங்களில்
கழிகளில் நெய்தல் செடி காணப்படுவதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. ‘இருங்கழி நெய்தல்’
என்று குறுந்தொகைப் பாடல் 336 கூறும். இருங்கழி ஓரத்தில் கழிசேர் மருங்கில் நெய்தல்
மலர்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது. மேற்குக் கடற்கரையில் கழிகளில் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
”பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்” (குறுந்.9)
”இருங்கழி ஓதம் இல்லிறந்து மலிர
வள்ளிதழ் நெய்தல் கூம்ப ....” (நற்றிணை,
117)
”பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக்” (நற்றிணை,138)
”கழியே, சிறுகுர னெய்தலொடு காவி கூம்ப
எறிதிரை யோதந் தரலா னாதே” (அகம்.350)
நெய்தல் செடியின்
இலை ‘பாசடை’ என்று அழைக்கப்படுகின்றது. நீரில் வாழும் தாமரை, ஆம்பற் கொடிகளின் இலைகளை
‘அடை’ என்று வழங்குவது சங்க நூல் வழக்கு. பிற்காலத்தில் தான் ‘அடை’ என்ற சொல் வெற்றிலைக்கும்
அடைக்காய் என்பது பாக்குக்கும் வழங்கலாயின. நெய்தலின் இலை தாமரையைப் பார்க்கிலும் சிறியதாய்
இருந்ததால் ‘சிறு பாசடைய’ நெய்தல் எனப்பட்டது. தாமரை, ஆம்பல் மொக்குகளை விடச் சிறியதாக
இருந்ததால் ‘சிறுகுரல் நெய்தல்’ எனக் கூறப்பட்டது. நெய்தலின் இலை சிறிய யானைக்குட்டியின்
காதுபோலக் காணப்படுவதாகக் கூறப்பட்டிருக்கின்றது.
யானையின் காதில் காணப்படும் வரிகளும் நெய்ப்பும்
நெய்தல் இலையில் காணப்படும் நரம்புகளுக்கும், மெழுகு பூசினாற் போன்ற வழவழப்புக்கும்
உவமையாகக் கூறப்பட்டிருக்கின்றது. நெய்தல் மலர் நன்றாக இலைகளுக்கு மேல் வெளியே நீட்டிப்
பூப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது. ‘கணைக்கால் நெய்தல்’ என்று பலவிடங்களில் பேசப்படுகின்றது.
‘கண்போல் நெய்தல்’ என்றும் கூறப்படுகின்றது. நெய்தல் மலர் கருநீலமானது. அதனால் அதைக்
கருப்பு நிறமானது என்றே கூறுவர். இதன் நிறம் கருமை என்று கருதியே கண்ணுக்கு உவமிக்கப்பட்டது.
இதன் பூவை ‘மணிப்பூ’ என்றும் கூறுவர். மணிபோல நீலநிறத்தையுடைய பூ வென்று பொருள் கொள்ள
வேண்டும். நெய்தல் மலர் நறுமணமுடையது என்றும் இதன் தாதை வண்டினம் விரும்புவதாகவும்
கூறப்பட்டுள்ளது.
நெய்தல் செடி அழகுக்காக வளர்ப்பதுண்டு. இதையே
நீலோற்பலம், நீலம், கருநெய்தல், கருங்குவளை, பானல் என்று பலபெயரால் மயங்கிக் கூறுவர்.
அதில் கருநீல நிறமுடையதையே ‘நெய்தல்’ என்று சங்க நூல்கள் கூறுவதாகத் தெரிகிறது.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம் – திரு.பி.எல்.சாமி, கழக வெளியீடு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.
Comments
Post a Comment