பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி!
ஆணும் பெண்ணும் சமமாகத் தோன்றிய மனித இனத்தில்
பெண்ணைப் பொருளாதாரக் காரணிகளுக்காக உருவாக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம் அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்டுப்
பண்பாட்டால் பாதுகாக்கப்பட்டது. ஆண் மட்டுமே ஆளத்தகுதியுடையவன் என்ற கருத்துருவின்
மூலம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் ஆணுக்குரியதாக வரையறுக்கப்பட்டன. இந்தியாவில் பெண்ணடிமைத்தனம்
ஆண் மேலாதிக்க உணர்வுகளோடும், முதலாளித்துவ சமூக அமைப்போடும் மத சாதிய மரபுகளோடும்
பின்னிப் பிணைந்து வளர்க்கப்பட்டது.
”தையல் சொற்கேளேல்”
”பேதமை என்பது மாதர்க்கணிகலம்”
”பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு”
”பெண்கள் சிரிச்சாப் போச்சு
புகையிலை
விரிச்சாப் போச்சு”
”அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”
”கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”
”சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை”
போன்ற வார்த்தைகளே
புழங்கிக் கொண்டிருந்தக் காலக்கட்டத்தில்,
”தையலை உயர்வு செய்”
”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும்
ஈசன்”
”பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும்”
”ஆணும் பெண்ணும் சட்டங்கள் செய்வதும் பாரினில்
பெண்கள் நடத்த வந்தார்”
”பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா”
என்று பாடிச்
சமூகத்தில் பெண் என்பவளை மனுஷியாகப் பாவித்தவன் பாரதி.
புறவுறுப்புகளில் மாறுதல் இருந்தாலும் ஆண்,
பெண்களின் ஆத்மா ஒரே மாதிரி என்று சிந்தித்தவன் பாரதி. பெண்களை செக்குமாடுகளைக் கருதுவதையும்,
பஞ்சுத் தலையணைகளாகப் பாவிப்பதையும் பிழை எனக் கருதியவன். தமிழகத்தில் மட்டுமல்லாது
உலகம் முழுவதிலும் பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறையைத் தவறு
என்று சுட்டிக் காட்டியதோடு அதுவே துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். கலியுகத்திற்குப்
பிறப்பிடம் என்றெல்லாம் நினைத்தவன் பாரதி.
குடும்பம் மற்றும் பிற நிறுவனங்களுக்கும்
அரசியலையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒரு புதிய பார்வையைச் சமீபத்தில் உருவாக்கியவன்
ஃபூக்கோ. ஆனால் பாரதியோ அப்பொழுதே அதிகாரம் என்பதை ஆண், பெண் உறவு என்ற எல்லைக்குள்ளும்
புகுத்தி பெண்மீது ஆண் செல்லும் அதிகாரத்தை விளக்கக் கட்டாய ஆட்சி என்ற சொல்லாட்சியையும்
பயன்படுத்தியுள்ளான். இதனை விளக்க பிரிட்டிஷ் அரசின் செயல்பாட்டையும் துணைக்கு அழைத்துக்
கொள்கிறான்.
தேசங்களில் அன்னியர் வந்த கொடுங்கோல் அரசு
செலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ராஜபக்தி செலுத்த வேண்டுமென்றும் அங்ஙனம் பக்தி
செய்யபாவிட்டால் சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை
உலகத்து நீதிமான்கள் அவமதிக்கிறார்கள்.
அந்த அரசுபோல் தான் ஸ்திரீகள் மீது புருஷர்
செய்யும் கட்டாய ஆட்சியும் என்பது யாருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளங்கும்.
(பாரதியார் கட்டுரைகள்,ப.104)
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பாரதி
பெண்கள் மீதான ஆண் ஆதிக்கத்தைக் கட்டாய ஆட்சி என்னும் சொல் பிரயோகம் மூலமும், பிரிட்டிஷார்
இந்தியாவின் மீது செலுத்து அதிகாரத்திற்கு ஒப்பிட்டும் விவாதிப்பது மிகுந்த கவனத்திற்குரியது.
இது பாரதியின் பெண் பற்றிய சிந்தனையின் புதிய பரிமாணமாகும். அவை,
·
பெண்களுக்கு
ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
· அவர்களுக்கு
இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
·
விவாகம் செய்து
கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை
அவமானப் படுத்தக் கூடாது.
· விவாகமே இல்லாமல்
தனியாக இருந்து வியாபாரம் கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்தீரிகளை
யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
· பெண்கள் கணவனைத்
தவிர வேறு புருஷனோடு பேசக்கூடாது என்றும் பழகக் கூடாது என்றும் பயத்தாலும் பொறாமையாலும்
ஏறப்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
·
பெண்களுக்கும்
ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
· தகுதியுடன்
அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்
கூடாது.
என பாரதியாரின்
கட்டுரை நூலின் வழி அறிய முடிகிறது. இவ்வாறு இருபதாம் தொடக்கத்திலேயே இவ்வாறு கருத்துப்
புரட்சி நமக்கு ஆச்சிரியத்தைத் தருகிறது. இச்சிந்தனையின் ஊற்றுக் கண்ணைப் பாரதி,
”நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம்
என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்”
பாரதியார்
கவிதைகள், சுயசரிதை
எனக் கிண்டலோடும்
கோபத்தோடும் பாரதி பேசுவான். சுதந்திரம் என்பதைப் பற்றிப் பேசும்போது மாதர்களுக்காயினும்,
வேறு யாருக்காயினும் சுதந்திரங்கள் வேறு ஒருவர் கொடுக்க முடியுமென்ற நம்பிக்கை எனக்குக்
கிடையாது. அவரவர்கள் தத்தம் உரிமைகளைத் தாமே முயற்சி செய்து அடைந்து கொள்ள வேண்டும்.
மற்றொருவர் கொடுத்தொன்றும் நிலைத்திருக்க மாட்டாது எனச் சந்திரிகையின் கதையில் சொல்லுவதும்
பாரதியின் கருத்துருவாக்கத்திற்கான அடித்தள ஒருமையைக் காட்டுகிறது.
நிறைவாக,
‘ஆணும் பெண்ணும் சமமல்ல’ என்று கூறப்பட்டு
வந்த காலக்கட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம். அதுமட்டுமல்ல ஆணை விட அணுவளவு உயர்வானவள் பெண் என்றும் பார்ப்பது பாரதியின் பெண்ணுரிமைச்
சிந்தனைக்கு வலுச் சேர்ப்பதாகும். இவ்வாறு தம் படைப்புக்களான கவிதைகள், கட்டுரைகள்
மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டு, அடிமைத்தனத்திற்கு விடைகொடுக்கும் நிலையைத்
தம் படைப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதி.
நாம் இன்று அனுபவிக்கும் கல்வி, வேலை, சொத்துரிமை,
என்று அனைத்து நிலைகளையும் சுதந்திரமாக, மகிழ்வாக வாழ்வதற்கு வித்திட்டவன் பாரதி! அதை
என்றும் மறவாது சுதந்திரத்தை நன்மைக்கு மட்டும் பயன்படுத்தி வாழ்வோம்.
பார்வை நூல்
1.
ஸ்ரீகுமார்.எஸ்.டாக்டர்-
மொழியும் சமூகமும், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17
Comments
Post a Comment