பாரதியார் படைப்புக்களில் - விதவை மறுமணம், பால்ய விவாகம்
பெண்
தன் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், திருமணமான நிலையில் கணவனுக்கும், கணவன் இறந்துவிட்டால் மகன்களுக்கும் அடங்கி நடக்க வேண்டும்
என்ற கருத்தில் பாரதிக்குச் சற்றும் உடன்பாடில்லை. பெண்கள் தாம் விரும்பிய ஆடவரைத் திருமணம் செய்து கொள்வதை
ஆதரிக்கும் பாரதி திருமணத்திற்கப் பின் இந்திய நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சமுதாய
நடவடிக்கைகளோடு உடன்பாடு கொள்ளாமல் ‘ஸ்தீரி அடிமையில்லை. உயிர்த்துணை, வாழ்க்கைக்கு ஊன்று கோல் ஜீவனிலே ஒரு பகுதி (பாரதியார் கட்டுரைகள்) என்று கூறுவதோடு
மட்டும் நின்றுவிடாமல் இண்டும் பரிபூர்ணமான சமானம். பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதல் பொருந்தும் (பாரதியார் கட்டுரைகள்
ப.102) என்றும் விவாதிக்கிறார். பாரதியின் இந்த
விவாதங்களை அவ்வளவு எளிதில் புறந்தள்ள முடியாது. ஆணும் பெண்ணும் சமம். அதுமட்டுமல்ல ஆணை விட அணுவளவு உயர்வானவள் பெண் என்றும் பார்ப்பது
பாரதியின் பெண்ணுரிமைச் சிந்தனைக்கு வலுச் சேர்ப்பதாகும்.
பாலிய விவாகமும், முதியோர் மணமும்
பாலிய
விவாகமும் முதியோர் மணமும் விதவைகளின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரித்து வந்தது. கணவன் இறந்துவிட்டால்
பெண் விதவை என்று அழைக்கப்பட்டாள். கணவன் இறந்தவுடன் அவள் எவ்வளவு வசதி படைத்தவளாக இருந்தாலும்
அபசகுன உருவமாகக் கருதப்பட்டாள். நகைகளைத் துறந்த, மணம் தரும் மலர்களைச் சூடுவதையும் நல்லுடைகளை உடுத்துவதையும்
தடுத்தனர். சிலர் அவளது
தலையை மொட்டையடித்து வெள்ளாடை தரிக்கச்செய்து வீட்டிற்குள்ளேயே வீட்டு வேலை செய்யப்
பணித்தனர். விதவையைக் காண்பதும், எதிரில் வருவதும்
அபசகுனமாகக் கருதப்பட்டாள். குடும்ப நிகழ்வுகளிலோ, சடங்குகளிலோ அவள் பங்கேற்க அனுமதி கிடையாது. வேறு திருமணம்
செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆடவனோ தனது மனைவி இறந்து பத்து நாட்களில் அவன் கிழவனாக
இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ளத் தடையில்லை. குழந்தை இல்லையென்றாலும், ஆண்குழந்தை இல்லையென்றாலும் வேறு திருமணம் செய்து கொள்ள ஆடவனுக்கு
உரிமை இருந்தது. பெண் தனது இளமைப்
பருவத்தில் கணவனை இழந்தாலும் மறுமணம் செய்யலாகாது. பருவத்தில் கணவனை இழந்தாலும் மறுமணம் செய்யலாகாது. இது பொது நிலையாக
நிலவி வந்தது.
பால்ய
விவாகம் இல்லா விட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை. பெண்களின் வாழ்க்கை
நாசமடையும். குடும்ப வாழ்க்கை
துக்கமாகும். பாலிய விவாகம்
இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம். இச்சிந்தனைகள்
இந்தியாவில் வலுவாக காலை ஊன்ற இருந்தது கண்டு பாரதி மட்டுமல்ல காந்தி அடிகளும் வருத்தத்தில்
ஆழ்ந்தார்.
பால்ய
விவாகத்தை நிறுத்துவதன் மூலம் 15 வயதுக்குட்பட்ட
கைபெண்களும் மற்ற இளமையுடைய கைபெண்களும் மறுமணம் செய்து கொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்றும்
கூறிய காந்தி இந்த உபாயங்களை விருப்பமுடையோர் அனுசரிக்கலாம் என்றார். தமக்கு இவற்றை
அனுசரிப்பதில் விருப்பமில்லை யென்றும் தம்முடைய குடும்பத்திலேயே பல விதவைகள் இருக்கலாமென்றும்
அவர்கள் புனர் விவாகத்தைப் பற்றி யோசிக்கமாட்டார்கள் என்றும், தாமும் அவர்கள்
மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க விரும்பவில்லை என்றும் கூறியதைத் தம் கட்டுரையில்
குறிப்பிட்ட பாரதி அதை ஏற்க மறுக்கிறார். ‘பால்ய
விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளாலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்கிறார். ஆனால் அதை
உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை. மழுப்புகிறார். (பாரதியார் கட்டுரைகள்,ப.152)
எனக் காந்தியைப் பாரதியார் விமர்சனமும் செய்கிறார்.
ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக
வாழ்க்கையிலும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது என்றும் பாரதி கருதினார்.
எனவே எல்லா விதவைகளும் மறுமணம் செய்து கொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்குச்
செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான அநியாயத்திற்குத் தகுந்த மாற்று,
மற்ற பேச்செல்லாம் வீண் கதை என்றார். அந்த மறுமணமும் எந்த வகையில் யார் யாருக்கு எப்படி
அமைய வேண்டும் என்றும் பாரதி கூறுகிறார்.
இந்தியாவில் சிற்சில சாதியரைத் தவிர மற்றபடியுள்ளார்
நாகரிக தேசத்தார் எல்லோரும் செய்கிறபடி விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்திற்குத்
தகுந்த புருஷரை புனர் விவாகம் செய்து கொள்ளலாம். அப்படியே புருஷர்கள் எந்தப் பிராயத்திலும்
தம் வயதுக்குத் தக்க மாதரை மறுமணம் செய்து கொள்ளலாம். (பாரதியார் கட்டுரைகள், ப.152)
என மறுமணத்திவ் இருந்த சந்தேகங்களை நீக்கி இருபாலர்க்கும் பொதுவான தீர்ப்பைத் தம் கட்டுரையின்
மூலம் வழங்குகிறார். இதில் சிற்சில சாதியர் என்பதற்கு இந்திய சாதி அமைப்பின் பின்னணியிலேயே
புரிந்து கொள்ள முடியும். பிராமணருக்கு அடுத்த நிலையில் உயர்சாதியார்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்,
தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகைப்பாட்டில் இந்திய சாதியமைப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
பாரதியார் காலத்தில் சீர்திருத்தம் பேசியவர்கள்
எல்லோரும் உயர்சாதிக்கான சீர்திருத்த்த்தையே முன் வைத்தார்கள். பாரதியார் இந்த சீர்திருத்தங்களெல்லாம்
(எடுத்துக்காட்டாக விதவைமணம், மறுமணம் போன்றவை) இந்தியாவில் பல பிற்படுத்தப்பட்ட சாதியாரிடம்
நடைமுறையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய பெண்ணியவாதிகள் பெண்ணியம் பேசும்பொழுது
பெண்ணைப் பற்றிய பெண்ணின் சிந்தனையும், பெண்ணைப் பற்றிய ஆணின் சிந்தனையும், பெண்ணைப்
பற்றிய சமூகத்தின் சிந்தனையும் மாற வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.பாரதியார் அன்றைய
நாளில் இதற்கான தீர்வுகளாகத் தமது சந்திரிகையின் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பழைமையைக் கடைப்பிடிக்கும் பிராமணக் குடும்பத்துள்ளே விதவை மறுமணத்திற்கான ஆதரவு முளைவிடுவது
போன்று கதை அமைத்துள்ளார். கதையில் வரும் விதவையான விசாலாட்சியின் அண்ணன் மனைவி கோமதி
பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு சாகும் தருவாயில் இருக்கும் பொழுது,
”நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம்
செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்.
ஆதலால் ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ள வரை
வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால் நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான
சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டுத் தைரியத்துடன் சென்னைப்
பட்ணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்திற்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து
அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு” – சந்திரிகையின் கதை,ப.118
என்று கூறுவது
போல கதையமைத்துள்ளார். பெண் பெண்ணினத்திற்கு எதிரி என்று நம்புவதை இக்கதை மூலம் தகர்த்துள்ளார்.
பிராமணர்கள் மட்டுமல்ல மற்ற சாதிப் பெண்களிடமும் இந்த மாற்றம் வர வேண்டுமெனக் கருதிய
பாரதியார் அதனை வீரேசவிங்க பந்தலுவின் மனைவி மூலம் நிறைவு செய்கிறார்.
கோபாலய்யங்கார் விசாலாட்சியை மறுமணம் செய்ய
இயலாது என்று மறுத்ததும் வீரேசலிங்க பந்தலுவின் மனைவி விசாலாட்சியைப் பார்த்து,
”பயப்படாதே அம்மா, உனக்கு நல்ல புருஷன்
கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான்.
நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன். – சந்திரிகையின் கதை, ப.143. என முன்வருவது
போல காட்சிப் படுத்தியுள்ளார்.
சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய
அய்யர் இளம் வயதில் விதவையான தம் மகளுக்குப் பம்பாய் சென்று தென்னாட்டு வைதீக பிராமணர்
ஒருவருக்கு மறுமணம் செய்து வைத்த்தைப் பாராட்டும் வகையில் தமது சந்திரிகையின் கதையில்
விதவை மறுமணத்திற்கு ஆதரவு நல்கி, ஆலோசனை வழங்கும் ஒரு கதாப்பாத்திரமாக அவரைச் சித்திரப்
படுத்தியுள்ளார்.
நிறைவாக,
பாரதிதாசன் விதவை மறுமணம், பால்ய விவாகம்
பற்றி தமது கவிதைகள் மூலம் ஆற்றலோடு வெளிப்படுத்திய கருத்தோட்டங்கள் அனைத்தும் பாரதியாரின்
அடியொற்றியே வெளிப்படுத்தியுள்ளார் என்பது அறிந்த கொள்ள முடிகின்றது. இந்த வளர்ச்சி
பாரதியின் பெண்ணியச் சிந்தனையின் தொடர்ச்சிதான் என்பதை இக்கட்டுரையின் வழி புரிய வைத்துள்ளது.
பாரதிதாசனைப் போல பாரதியார் அதிக கவிதை வரிகளை எழுதவில்லை. பாரதியின் செயல்பாட்டுச்
சிந்தனை வீச்சு மிகப்பரந்து பட்டது. இக்கட்டுரையின் வழி பெண்களின் விதவை மறுமணம், பால்ய
விவாகம் போன்றவற்றிற்கும் பாரதியார் விதைத்த விதை தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம்
என்பதை இக்கட்டுரை உணர்த்துகின்றது.
பார்வை
நூல்
1. ஸ்ரீகுமார்.எஸ்.டாக்டர்- மொழியும் சமூகமும்,
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17
Comments
Post a Comment