இலுப்பை
‘இலுப்பை’ மரத்தைச் சங்க காலத்தில்
‘இருப்பை’ என்றழைத்தனர். ஊர்ப்புறங்களில் எண்ணெய் எடுப்பதற்காகத் தோப்பாக வளர்க்கப்படுவதுண்டு.
கோயில்களில் விளக்கெரிக்க இதன் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையில் இலுப்பை மரம் தென்னிந்தியக்
காடுகளில் காணப்படுகிறது. வடஇந்தியாவிலும் கேரளத்திலும் மரம் சிறிது வேறுபட்டது.
இலுப்பை மரங்களைச் சங்க நூல்களில்,
”நீடுநிலை யரைய செங்குழை யிருப்பை” (அகம்.331)
”குதிர்க்கா லிருப்பைக் குவிகுலைக் கழன்ற” (அகம்.321)
”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து” (புறம்,384)
”கருங்கோட் டிருப்பை வெண்பூ முனையிற்” (அகம்,247)
இலுப்பை மரம்
உயரமாக வளரும் என்பதையே ‘நீடு நிலையரைய’ என்ற அகநானூறு குறிக்கின்றது. இலுப்பை
மரத்தின் அடிமரம் பெருத்துக் காண்பதால் அகநானூற்றில் ”குதிர்க்கா லிருப்பை” ”திரளரை
யிருப்பை” மற்றும் ”பொகுட்டரை யிருப்பை” என்று
கூறப்பட்டுள்ளது. இலுப்பையின் அடிமரம் வளர வளரப் பெருத்துக் காணப்படும்.
இலுப்பை வெயில் காலத் தொடக்கத்தில் கொழுந்து
விடத் தொடங்கும். அக்காலத்தில் இலுப்பை மரமெல்லாம் ஒரே இளந்தளிராகத் தெரியும். இலுப்பையின்
தளிர் செம்புத் தகடுபோலச் சிவந்து வெயிலின் ஒளியில் பளபளவென்று மின்னும். இதை நன்கு
கண்ட சங்கப் புலவர்கள் இலுப்பையின் தளிரைப் பற்றிப் பாடியிருக்கின்றனர். அகநானூற்றில்
இலுப்பை மரத்தின் அழகிய கொழுந்து, ”செய்குழை யிருப்பை” (அகம்,331) ”அங்குழையிருப்பை”
(அகம்,107) என்றழைக்கப்படுகின்றது.
”செப்பட ரன்ன செங்குழை யகந்தோறு” (அகம்,9)
”...... .......
......... ........... கதிர்தெறக்
கழலிரை யுகுத்த கால்பொரு தாழ்சினை
யழலகைந் தன்ன வங்குழைப் பொதும்பிற்” (அகம்,351)
செப்புத் தகடுபோலச்
சிவந்த கொழுந்துகள் தோன்றியதாக அகநானூறு கூறியிருப்பது அழகிய பொருத்தமான உவமையாகும்.
இலுப்பை மரம் வெயிற் காலத் துவக்கத்தில் இலைகளை இழந்து விடும். காய்ந்த இலைகள் சருகுகளாகக்
கீழே கிடக்கும். அதே சமயத்தில் கொழுந்துகள் தோன்றும். இந்தக் காட்சியை அகநானூறு
351 ஆம் பாடலில் விளக்குகிறது. காற்றடித்து இலைகள் சுழன்று கீழே வீழுகின்றன. நெருப்புப்
பற்றினாற் போன்று கொழுந்துகள் தோன்றுகின்றன. இயற்கையில் காணப்படும் இந்த உண்மையான காட்சியைப்
படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த வர்ணனை அழகிய பூமரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய
ஒரு பேராசிரியர் வர்ணித்ததை விடச் சிறப்பாக
இருப்பதைக் காணும்போது வியப்பில் ஆழ்த்துகிறது. இலுப்பையின் இலை நீண்டிருப்பதால் திருவாலவாயுடையார்
புராணம், ‘நெட்டிலையிருப்பை’ என்று குறிப்பிடுகின்றது.
இலுப்பையின் மிக முக்கிய பாகம் அதன் பூவாகும்.
இதன் பூவை சங்க நூல்களில்,
”வெருக்கடி யன்ன குவிமுகி ழிருப்பை
மருப்புக்
கடைந்தன்ன கொள்ளை வான்பூ
மயிர்க்கா
லெண்கி னீரினங் கவர” (அகம்,267)
”குதிகா லிருப்பை வெண்பூ வுண்ணா” (அகம்,321)
”கான விருப்பை வேனல் வெண்பூ
வளிபொரு
நெடுஞ்சினை யுகுத்தலி னார்கழல்பு
களிறு
வழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை
யருஞ்சுர மிறந்தவர் படர்ந்து” (குறுந்,329)
”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து” (புறம்,384)
”நெய்தோல் திரியில் தண்சிதர் உறைப்ப” (நற்றிணை,279)
இலுப்பையின்
பூ வெண்மையாகவும் இதழ்கள் தடித்து உருண்டையாகவும் இருக்கும்.
·
வடநாட்டில்
இந்த இதழ்களை உலர்த்தியும், சமைத்தும் உண்பர்.
·
இலுப்பைப் பூப்
பழங்குடி மக்களுக்கு முக்கிய உணவுப் பொருளாகும்.
· தமிழ் நாட்டில்
பழங்காலத்தில் சர்க்கரைப் போல பயன்படுத்தினர். ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை”
என்ற பழமொழி வழங்கி வருகிறது.
· வௌவால் இலுப்பைப்
பழத்தை விரும்பி உண்பதாக நற்றிணை (279)பாடல் வழி அறியலாம்.
· கரடிகளுக்கு
இலுப்பைப் பூவின் மிகுந்த ஆசையுண்டு. கீழே கிடக்கும் பூவை மட்டுமின்றி மரத்தின் மேலேறிப்
பறிப்பதும் உண்டு.
”கீழ்ப்படு
தார முண்ணா மேற்சினைப்
பழம்போற் சேற்ற தீம்புழ லுணீஇய
கருங்கோட்
டிருப்பை யூரும்
பெருங்கை
யெண்கின் சுரனிறந் தோரே” (அகம்,171)
”ஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
ஈன லெண்கின் இருங்கிளை கவரும்” (அகம்,95)
மேற்காட்டிய
அகப்பாடல்களில் கரடிகள் இலுப்பைப் பூவை விரும்பி உண்ணுவதைப் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இலுப்பையைப் பழந்திராவிட மொழிகளில் ‘இப்பை’
என்றழைக்கின்றனர். ‘இருப்பை’ என்று சங்க நூல் வழக்கொடு நெருங்கிய தொடர்பு தெரிகின்றது.
வடமொழியில் ‘மதூகம்’ என்றும், இந்தி மொழியில் ‘மாகுவா’ என்றும் அழைக்கப்படுகின்றன. மதூகம் என்ற சொல் நிகண்டுகளில்
காணப்படும் சொல்லாகும்.
1.
சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம் – திரு.பி.எல்.சாமி, கழக வெளியீடு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி -6.
Comments
Post a Comment