நரந்தம் (Lemon Grass)
கி.பி முதலிரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து
கிரேக்க, ரோமாபுரிகளுக்கு ஏற்றுமதியான பொருள்களில் மிளகு மிகவும் புகழ்வாய்ந்தது. மிளகைத்
தவிர ஏற்றுமதியான வேறு சில மணப்பொருள்களையும் கிரேக்க ஆசிரியர்கள் குறித்திருக்கிறார்கள்.
அவைகளில் NARD என்ற ஒரு பொருளைக் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். இத்துடன்
மலைப்பத்திரம் என்னும் மணப்பொருளையும் குறிப்பிட்டுள்ளார். மலைப்பத்திரம் என்பது கறி
இலையைக் குறிப்பிடுகின்றது. Nard என்பது சங்க நூல்களில் பொருத்தமான சான்று கிடைக்கின்றது.
இது சங்க நூல்களில் குறிப்பிடும் நரந்தம் என்று உணரும் போது வியப்பைத் தருகின்றது.
நரந்தம் என்றொரு புல் பற்றிய செய்திகள் சங்க
நூல்களில் வருகின்றன. நரந்தம் புல்லின் மணத்தைப் பழந்தமிழர் மணமூட்டுவதற்குப் பயன்படுத்தியதைச்
சங்க நூல்களிலிருந்து அறியலாம்.
”நரந்த நாறுந் தன்கையாற்
புலவுநாறு
மென்றலை தைவரு மன்னே”
என்று ஔவையார்
அதியமானைப் பற்றிப் பாடுகிறார். அரசர்கள் தங்கள் கைகளுக்கு நரந்த நறுமணத்தை ஊட்டும்
வழக்கம் உண்டென்பது தெரிகிறது. இது தற்காலத்தில்
உடலில் தீய நாற்றத்தைப் போக்க ‘ஓ தெ கொலோன்’ என்பதைப் பயன்படுத்துவதைப் போன்றதாகும்.
நரந்த நறுமணம் மகளிர் கூந்தலுக்கு ஊட்டப்பட்டதை ”நரந்த நாறிருங் கூந்தல் எஞ்சாது நனிபற்றி” என்று வரும் 54 ஆம் கலிப்பாடல் வரியிலிருந்து உணரலாம்.
மலர் மாலைக்கு நரந்த நறுமணத்தை ஊட்டும் வழக்கமும் இருந்திருக்கின்றது.
”நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
வைதமை
பாணி வணர்கோட்டுச் சீறியாழ்” (புறம், 502)
இங்கு நரந்தம்
பூவால் பலவடங்களாகத் தொகுக்கப்பட்ட மாலை என்று உரை கூறியிருக்கின்றனர். நரந்தம் புல்லிற்கு
நறுமணமான பூ இல்லை. இங்கு நரந்தம் எனப்படுவது நரந்தம் புல்லில் எடுக்கப்பட்டுப் பூசப்படும்
எண்ணெய் மணம் தான், பூவின் மணம் அன்று. நரந்த நறுமணத்தையுடைய பல வடங்களாலான மாலையால்
சுற்றப்பட்ட யாழ் என்று பொருள் கூறவேண்டும்.
”நரந்தம் கண்ணி இவளொடு இவனிடைக்
கரந்த
உள்ளமொடு கருதியது பிறிதே”
என்ற பாடல்
வரிகளுக்கு நரந்த நறுமணம் ஊட்டப்பட்ட கண்ணி என்பதே பொருள் ஆகும். மாலைக்கு மணமூட்டும்
பழக்கத்தை,
”சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண்
கணவீர நறுந்தண் மாலை”
என்று வரும்
திருமுருகாற்றுப்படை வரிகளிலிருந்து உணரலாம். பிற்கால உரையாசிரியர்கள் நரந்தம் என்று
வருமிடங்களில் நரந்தம் பூநாறும் என்றும், நாரத்தை மலர் என்றும், நறை என்றும், கத்தூரி
என்றும் பலபடப் பொருள் கூறிச் சென்றனர். நரந்தம் பூ என்று சங்க நூற்களில் எங்குமே பயிலவில்லை.
”நளியிருஞ் சோலை நரந்தந் தாஅய
ஒளிர்சினை
வேங்கை விரிந்தவி ருதிரலொடு”
என்று வரும்
பரிபாடல் ஏழாம் பாடல் வரிகளுக்கு உரையாகப் பரிமேலழகர், வையை நரந்தம புற்களை வாரி வருவதாகக்
கூறுகிறார்.
”காவே, சுரும்பிமிர் தாதொடு தலைத்தலை
மிகூஉ
நரந்த
நறுமலர் கண்களிக் கும்மே”
என்ற பதினாறாம்
பாடல் வரிகட்கு உரை கூறும்போது நரந்தம் பூ என்று கூறாது நரந்தம் போல மணமுள்ள பூக்களை
வழங்கும் கா என்று பரிமேலழகர் பொருள் கூறிச் சென்றதைக் கவனிக்க வேண்டும். நரந்தம் புல்லுக்குத்தான்
மணம் இருக்கும். அதன் பூவுக்கு மணம் கிடையாது.
”நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை
தோறு பொறையுயிர்த் தொழுகி”
என்று வரும்
பொருநராற்றுப்படை 238-42 ஆம் வரிகள் நறைவேறு, நரந்தம் வேறு என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
நறை ஒரு நறுமணமுள்ள கொடி, நரந்தம் நறுமணமுள்ள புல், அகிலும், ஆரமும் நறுமணமுள்ள மரங்கள்.
இந்த நரந்தம் புல்லைப் பற்றிப் பதிற்றுப்பத்திலும், புறநானூற்றிலும் வரும்
செய்திகள் ஆராயத்தக்கனவாகும்.
”கவிர்த்தை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங்
கருவியொடு நரந்தங் கனவு
மாரியர்
துவன்றிய பேரிசை யிமயம்”(பதிற்றுப்பத்து,2)
”நரந்தை நறும்புல் மேய்ந்து கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்” (புறம்,122)
நரந்தம் புல்
இமயமலைச் சாரலில் வளர்கின்றது. கவரிமான் அதை விரும்பி மேய்கின்றது. இமயத்தில் ஆரியர்
வாழ்கின்றனர். இதில் வரும் அரிய செய்தி ”பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்” என்பதாகும்.
இமயத்திற்குத் தொடர்புடையதென்று பிறநாட்டாரால் போற்றப்பட்ட அருவி கங்கை ஆறாகும். ஆதலால்
பழந்தமிழர் நரந்தம் புல்லொடு கங்கையாற்றையும், இமயத்தையும், கவரிமானையும் இணைத்தே அறிந்திருந்தனர்.
இப்போகிரேட்டஸ் என்ற கிரேக்க ஆசிரியர் (கி.மு.460)
எழுதியிருக்கும் செய்தியொடு ஒத்திருப்பது மிகவும் வியப்பைத் தருவதாகும். இந்தக் கிரேக்க
ஆசிரியர் இந்தியாவில் கிடைக்கும் மருந்துச் செடிகளான மிளகு, இஞ்சி, நரந்தம் ஆகியவைகளைப்
பற்றிக் கூறியிருக்கிறார். நரந்தத்தை இவர் ‘Nardin of gangetis’ என்றழைக்கிறார். பட்டினப்பாலை ‘கங்கை வாரி’ என்று
அழைப்பது போல் ‘கங்கை நரந்தம்’ என்று அழைக்கிறார். இம்முறையில் அழைக்கப்படுவதற்குக்
காரணம், கங்கை யாறு நரந்தம் புல் விளையும் மலைச் சாரலின் வழி பாய்ந்தது தான். இச்செய்தி
‘பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவு மாரியர் துவன்றிய பேரிசை இமயத்தொடு’ என்று வரும்
பதிற்றுப்பத்துச் செய்தியுடன் ஒத்திருப்பது மிகவும் வியப்பைத் தருவதாகும். வையை யாறு
நரந்தம் புல்லை வாரி வருவதாகவும், துறைகளில் தள்ளுவதாகவும் பரிபாடலில் கூறப்பட்டிருப்பதையும்
பரிபாடல் கூறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் நரந்தம் புல் இயற்கையாக வளர்கிறது.
கிரேக்க வரலாற்றாசிரியர்கள் இந்த நரந்தத்தைப்
பற்றி எழுதியிருக்கின்றனர். இப்போகிரேட்டஸைத் தவிர மற்றும் டயாஸ் கொரைடைஸ், பிளினி,
பெரிப்ளுஸ் ஆகியோரும் நரந்தத்திலிருந்து பெறும் நறுமணப் பொருளைப்பற்றி எழுதியுள்ளனர்.
டயாஸ் கொரைடஸ் கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து கிரேக்க நாட்டுக்குச் சென்ற
பொருள்களில் மலைப் பத்திரத்தையும், அகிலையும், நரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
சிந்துநதியின் கரையில் கிரேக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் பண்டமாற்றாக பயன்பட்ட
பொருள்களில் கோட்டத்தையும், நரந்தத்தையும் பெரிப்ளூஸ் பாண்டி நாட்டில் இருந்து கிரேக்கர்கள்
பெற்ற முத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். இந்தியாவில் விளையும் செடிகளில் நரந்தத்தையும்
செலுசிடுகள் என்ற இனத்தார் தங்கள் நாட்டில் பயிரிட முயன்றதாகப் பிளினி என்பார் கூறுகிறார்.
நரந்தம் என்பதை நாரத்தை மரமாகப் பொருள் கொண்டிருக்கின்றனர். நாரத்தை மரத்தை
‘நாரங்க’ என்று மலையாளத்தில் கூறுவார்கள். ‘நார, நரந்த, நாரந்த, நாரத்தை’ ஆகிய நான்கும்
நறுமணமுடைய வேறு வேறு செடிகள் என்பதைப் பிற்காலத்தில் உணராது போகவே அதன் பெயர் மறக்கப்பட்டு
இக்காலத்தில் எலுமிச்சம் புல் என்று அழைக்கப்படுகிறது.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியத்தில்
செடி கொடி விளக்கம் – திரு.பி.எல் சாமி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், திருநெல்வேலி -6.
Comments
Post a Comment