பாலை
பாலை
என்பது முல்லையும் குறிஞ்சியும் திரிந்த வடிவம் என்று கூறுவர். இருப்பினும்
வறட்சியான நிலத்தையும் பாலை என்று கூறும் வழக்கும் உண்டு. அத்தம், சுரம் என்று பாலை
நிலத்தை வழங்குவர். மழையற்ற வறட்சியான பாலை நிலத்துக்கு உரியதாகப் பாலை மரம்
சங்க காலத்தில் வழங்கப்பட்டது.
”பாலை நின்ற பாலை நெடுவழி” (சிறுபாண், வரி
11)
என்று கூறப்பட்டிருக்கின்றது. பாலை என்ற மரம்
இருந்தது என்பது தெரியவருகின்றது. பாலையைப் பற்றிச் சங்கநூலான நற்றிணைப் பாடலில்,
”உள்ளுதொறு நகுவேன் றேழி வள்ளுகிர்ப்
பிடிவிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக்
கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச்
செல்ல(ளி) தூக்கலி னிலைதீர் நெற்றங்
கல்லிழி யருவியி னொல்லென வொலிக்கும்” (நற்,107)
யானையானது பாலையின் நாரைபட
பிளப்பதால் ‘வெண்கோட்டுடன்’ பாலைமரம் தோன்றுகின்றது
என்று கூறப்படுவதை நோக்கவேண்டும். இதன் அடிமரம் மிகவெண்மையாகக் காணப்படும். இதனால் இந்த
மரத்தைத் தந்தப்பாலை என்றும் ஆங்கிலத்தில் ‘Ivory Wood’ என்றும் அழைக்கின்றனர்.
பாலை
மரத்தின் காய் பற்றுக்குறடு போலிருப்பதாகக் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். பற்றுக்குறடு
இரண்டு பிரிவாக நீட்டிக் கொண்டு இருக்கும். ஈயம் பூசுங்கால் குறட்டின் இருபாகங்களுக்கும் சேரும். பாலையின் காயும் ஒன்றாகத்
தோன்றி இரண்டாகப் பிரிந்து கடைசியில் சேருகின்றது நன்றாகப் பார்த்தவர்களுக்குப் பற்றுக்குறடு
போல் தெரியும். குறட்டின் இரண்டு கம்பிகள் போல இரண்டு காய்களும் நீண்டு காணப்படும்.
பற்ற வைக்குங்கால் நுனிகள் ஈயம்பூப் பெற்றதுபோல் இரட்டைக் காய்களும் நுனியில் சேர்ந்து
வெண்மையாகவும் இருப்பதைக் கண்டவர்க்குக் கொடிறுபோல்காய் என்ற உவமையின் நுட்பம் நன்கு விளங்கும்.
பாலையின் மலர் கொத்தாகவும் வெண்மையாகவும்
இருக்கும். நற்றிணையிலும் ‘வாலிணர்’ என்றே இதன் வெண்மையான பூங்கொத்து அழைக்கப்படுகின்றது.
சங்க இலக்கியத்தில் பாலை என்று கூறப்படும் மரத்தை ‘Wrightis tinctoria’ என்று அழைக்கப்படுகின்றது.
மலையாளத்திலும், தெலுங்கிலும் ‘பாலை’ என்றழைக்கப்படுகின்றது.
தமிழில் வெறொரு இனமரமும் வெப்பாலை என்று
அழைக்கப்படுகின்றது. இதனை ‘Halarrhena Antidysenterica’ என்றழைக்கப்படும். இதனை வெப்பாலை
என்றழைக்கின்றனர். ஆனால், இது சங்க நூல்களில் கூறப்பட்ட உண்மையான பாலையன்று. இதன் காய்கள்
இரண்டையாக மிக நீண்டு தொங்கும். ஆனால் பற்றுக்குறடுபோல் காணப்படுவதில்லை. பார்ப்பதற்கும்
இரு மரங்களும் பூவின் நிறத்திலும் காயின் உருவிலும் மரத்தின் வெண்மையிலும் ஒத்துக்
காணப்படுவதால் இரண்டுக்கும் பாலையென்ற பெயர் வழங்கப்பட்டது. சங்க நூல்களில் கூறப்பட்ட
பாலை மரத்தை தற்காலத்தில் நிலப்பாலை என்றழைக்கின்றனர். மற்றொரு பாலை மரத்தைச் சிலப்பதிகாரம்
‘குடசம்’ என்றழைக்கிறது.
பாலைமரம் வறட்சியான மணற்பாங்கான இடங்களில்
காணப்படுகிறது. குடசத்தைக் கிரிமல்லிகை என்றும் அழைத்தனர்.மணமுடையதாக இருப்பதால் மல்லிகைக்கு
ஒப்பிட்டுக் கூறினர். பாலை மரத்தின் இலைகள் ஜனவரி பிப்ரவரியில் விழுந்துவிடுகின்றன.
அதே சமயத்தில்தான் அதன் காய்கள் நன்றாக முற்றி நெற்றாக மாறுகின்றன. இதனை நற்றிணையில்
”இலைதீர் நெற்றங் கல்லிழி யருவியின் ஒல்லென ஒலிக்கும்” என்று இலை தீர்ந்த காலத்தில்
காற்றில் ஒலித்ததாகக் கூறின.
பாலை மரம் நாருடைய பட்டையை உடையது. பட்டையுரித்த
மரக்கொம்பு வெண்மையானது. பூக்கள் வெண்மையானவை. கொடிறுபோன்ற காயையுடையது. இலை உதிர்ந்த
காலத்தில் காய் நெற்றாவது ஆகிய குணங்கள் கூறப்பட்டுள்ளன.
பாலை மரத்தைத் தெலுங்கில் ‘தெள்ளப் பாலா’
என்றும், கன்னடத்தில் ‘வெப்பாலா’ என்றும் அழைக்கின்றனர். இந்தியில் ‘காலா குடா’ என்று
கூப்பிடுகின்றனர். குடசத்தை இந்தியில் குடா என்றும், மராத்தியில் கொடகா என்றும் அழைக்கின்றனர்.
பார்வை
நூல்
1.
சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்
– திரு.பி.எல் சாமி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
திருநெல்வேலி -6.
Comments
Post a Comment