”சொரிந்து தேய்க்காத எண்ணெயும்,
பரிந்து போடாத சாப்பாடும் வீண்”
நம் நாட்டில் பழமையின் பெருமையும், புதுமையில் பொலிவும் கொண்டு வளமான வாழ்வை
வாழ்ந்து வருகின்றனர். நம் கலாச்சாரமும், பண்பாடும் இணைந்து பிறநாட்டிற்கு முன்னோடியாக
வாழ்ந்து வருகின்றோம்.
‘சனிநீர் ஆடு’ என்னும் ஔவையின் ஆத்திசூடியின் அமுதமொழிக்குச் சனி- என்றால் சீதளம்
– குளிர்ந்த நீரில் நீராடு என்பதே உண்மை பொருள்.
இன்று எண்ணெய்க்குளியல் என்பதை மறந்து நாகரீகத்தின் உச்சியில் தலைமுடிக்கு ஷாம்பூ
குளியல் தான் குளிக்கின்றோம். இதனால் பக்கவிளைவுகள் அறிந்தும், தவிர்க்க முடியாமல்
மேனாட்டு நாகரீக மோகத்தில் யாரும் பழமையான முறையைப் பின்பற்றுவதில்லை.
செவ்வாய், வெள்ளி பெண்களும், புதன், சனி ஆண்களும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இன்றும் சில கிராமப்புறங்களில் பின்பற்றி வருகின்றனர். உடல்
ஆரோக்கியத்திற்கும், உழைப்புக்கும் ஏற்ற நல்ல உடற்பயிற்சியாக அமையும். நன்கு தலையில்
சொரிந்து தேய்க்கும்பொழுது தலைமுடியின் வேர்ப்பகுதி வரை அழுந்தத் தேய்ப்பதால் உடல்
சூடு தணிகிறது. எண்ணெய் பசையுடன் இருப்பதால் முடி எளிதில் கொட்டாது. புத்துணர்ச்சி
ஏற்படுகிறது. உடலில் எண்ணெய்ப்பசை இருப்பதால் ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டு வாத நோய்கள்
நம்மை தாக்காது. இதனால் உடலும் மனமும் வளம் அடைகிறது.
எண்ணெய் குளியலும், தாயன்போடு பரிந்து பல கதைகளைச் சொல்லி குழந்தையின் வயிராற
ஊட்டிவிடும் உணவும் தான் குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு ஆதாரம். ஆனால் இன்று பொருளாதார
முன்னேற்றத்திற்காக ஓடும் பெற்றோர் தம் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்
அளிப்பதில்லை. ‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு’ என்றும் சொல்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நாம் எண்ணெய் காணாத தலை, உடல் வறண்டு பல சரும நோய்களும்,
உடல் வெப்பத்தாலும் வாணியனுக்குப் போகாத பணம் வைத்தியனுக்குப் போவது அன்றாட வாழ்க்கையில்
நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அன்று அறுபது வயதிலும் வராத முட்டு வாதம் இருபது
வயதில் வருகிறது. ஆகையால் பழமையான முறையைப் பின்பற்றி நாம் நலமோடு வாழ வழி வகுக்கலாம்.
சிந்தித்துச் செயல்படுவோம்.
பார்வை நூல்
1.
மாணவர்களுக்கான
பழமொழி கட்டுரைகள் – ஹேமா ராமானுஜம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை -14.
Comments
Post a Comment