புற்று மண்
புற்று மண்ணும், துளசிச் செடியடி மண்ணும்,
வில்வ மரத்தடி மண்ணும் எப்போதும் புனிதமாக மதிக்கப்படுகின்றன. இவை தெய்வீகத் தன்மையுடையன.
சில நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருத்துவ ஆற்றல்களும் இவைகளுக்கு உள்ளன. சாதாரண மண்ணை
விடப் புற்று மண் சில அபூர்வ ஆற்றல்களைக் கொண்டது. இது நுட்பமானது; இறுகப் பற்றுவது;
விரைவில் கரையாதது; சிதையாதது.
கறையான் என்ற எறும்பு வகை அற்புதமாகக் கட்டுவது
புற்று; கறையான் கட்டினாலும் அது தானே தோன்றுகின்ற ‘சுயம்பு’ போலக் காட்சி தருகின்றது.
மெதுவாக வளர்கின்றது. இதில் பாம்புகள் குடியேறுவதால், இதற்குத் தனிப் பெருமையும், புனிதத்
தன்மையும் கிடைக்கின்றன.
புற்று மண்ணின்
மகிமைகள்
·
தூக்கணாங்குருவியின்
கூடு, சிலந்தியின் வலை முதலியன மனிதனால் படைக்க முடியாதவை. இவை குருவிக்கும், சிலந்திக்கும்
ஆண்டவன் அருளிய அபூர்வமான, அதிசயமான ஆற்றல்கள் ஆகும். இவற்றைப் போலக் கறையான் வடிவமைத்துக்
கட்டுகின்ற புற்றும் இயற்கையின் ஓர் அதிசயம். மனிதனால் படைக்க முடியாதது புற்று.
·
புற்று வழிபடத்
தகுந்த ஒரு வடிவம். இதைக் கண்டவர் அஞ்சி வணங்குவர். இதை முழுவதும் சிதைக்க யாரும் முற்படுவதில்லை.
தேவையான புற்று மண்ணை இதன் பக்கங்களில் ஓரளவு வெட்டி அல்லது அகழ்ந்தெடுப்பது உண்டு.
·
புற்று மண்ணுக்குத்
தனி மகிமைகள் இருப்பதால், இதனைத் திருவிழாக் காலங்களிலும், பூசை நேரங்களிலும் பல காரியங்களுக்குப்
பல முறைகளில் பயன்படுத்துகின்றனர். மேலும், புற்றுமண் ஒரு மருந்து, இதைப் புசித்தும்,
பூசியும் சில நோய்களைக் குணப்படுத்த முடியும்.
·
புற்றில் விரிசலோ,
பிளவோ ஏற்படுவது அபசகுனம். இவை ஊருக்கு ஏற்படும் கேடுகளை முன்னரே அறிவிக்கும் அறிகுறிகள்
என்று நம்புகின்றனர்.
·
புற்றின் ஓரப்
பகுதிகளில் அல்லாமல் மையப் பகுதிகளில் புல், செடி முதலியன வளர்வதில்லை. புற்று மண்ணுக்கு
ஒரு தெய்வீக அற்புத ஆற்றல் இருக்கிறது.
·
புற்றுகளை நிலத்தின்
காதுகள் என்பர். அவை கறையானின் வீடுகள்; நாகராசனின் அரண்மனைகள்; தெய்வ வடிவங்கள் சிலவற்றைப்
பாதுகாக்கின்ற கவசங்கள்; இறைவர் உறைகின்ற கோயில்கள்; சிலர் தெய்வங்களாகவே வழிப்படப்படுகின்ற
மண் திருமேனிகள்.
·
புற்று மண்ணை
நீரில் கரைத்து, சிவனுக்கு அபிடேகமும் செய்கின்றனர்; புற்று மண்ணுக்கு இதுவும் ஒரு
மகிமை.
புற்று வழிபாடு
புற்று வழிபாடு மூன்று முறைகளில் நடைபெறுகின்றது.
1.
இயல்பானவை
ஒன்று, வயல் வெளிகள் முதலான நிலப்பரப்புகளில் முளைத்துக் கிளைத்த புற்றுகளை
வழிபடுகின்றனர்.
2.
தனிச் சன்னதி
இரண்டு, கோயிலின் ஓர் அங்கமாக, புற்றுகளுக்குத் தனிச் சன்னிதிகளை அமைத்து வழிபடுகின்றனர்.
எ.கா; திருவொற்றியூர் கோயில். கோயில் வளாகங்களில் தோன்றிய புற்றுகளை வழிபடுவதும்
இந்த வகைகளில் அடங்கும்.
3.
மூலவர்
மூன்று, சில தலங்களில் புற்று ‘மூலவராக’ இருப்பதையும் காண முடியும். இங்கெல்லாம்
முதல் வழிபாட்டிற்கும் சிறப்பு வழிபாட்டிற்கும் உரியன புற்றுகளே. எ.கா; மண்டைக்காடு
பகவதியம்மன் கோவில்.
புற்று மண்
விநாயகர்
விநாயகர் சதுர்த்தியன்று புற்று மண்ணால்
விநாயகர் உருவத்தைச் செய்து வழிபட வேண்டும். இதுவே பழைய முறை. இப்போதும் நடைமுறையில்
உள்ளது.
புற்று மண் நீரில் நன்றாகக் குழையும் இயல்புடையது.
சிறு சிறு கட்டிகளாகத் திரளாது. இதனால் விநாயகர் உருவத்தைக் கச்சிதமாகப் புனையலாம்.
அழகாக வடிவமைக்கலாம். எளிதில் கிடைக்கின்ற ஓர் அருமையான பொருளாகப் புற்று மண் இருப்பதால்,
கிராமப்புற மக்கள் புற்று மண்ணால் விநாயகர் உருவத்தைச் செய்வதையே மிக விரும்புகின்றனர்.
புற்று மண்
பிரசாதம்
புற்றுகள் இருக்கின்ற பல கோயில்களில் புற்று
மண்ணையே பிரசாதமாக வழங்குகின்றனர். திருநீற்றைப் போல மகிமையுடையது புற்றுமண். இதையும்
நெற்றியில் தரிக்கலாம்.
நாகர் கோயிலில் வழங்கப்படுகின்ற பிரசாதம்
புற்றுமண். கோயிலில் குறிப்பிட்ட இடத்திலிருந்து பல ஆண்டுகளாகப் புற்று மண் அகழ்ந்து
அள்ளப்பட்டாலும் அதன் அளவும், தன்மையும், குணமும் குறையாமல் இருப்பது ஓர் அற்புதமான
அதிசயந்தான்.
புற்றுமண் உருண்டைப் பிரசாதம் சங்கரன் கோயிலில்
வழங்கப்படுகிறது.
திருவொற்றியூரில், புற்றிலிருந்து ஒருவித
மையைச் சேகரிக்கின்றனர். இது பாதுகாக்க வேண்டிய, கிடைத்தற்கரிய பொருள். இதையும் நெற்றியில்
பூசலாம். இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு என்பர்.
புற்று மண்
மருந்து
·
புற்றுமண் ஓர்
அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. பாம்பு கடித்தால் புற்று மண்ணை எடுத்து, நீரில் அல்லது
பாலில் கலந்து, கடிப்பட்டவர்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் பாம்புக்கடி விடம் தணிகின்றது.
·
சில தோல் வியாதிகளுக்குப்
புற்று மண் ஏற்ற மருந்து. தோலில் புற்று மண்ணைத் தடவி, வியாதியைக் குணப்படுத்துகின்ற
மருவத்துவ முறை பழங்காலத்தில் மண் தடவிக் குணப்படுத்த முடியும் என்பர்.
·
கழுத்து, தாடைப்
பகுதிகளில் ‘பொன்னுக்கு வீங்கி’ என்ற நோயைக் குணப்படுத்த அதன் மீது புற்று மண்ணை பூசும்
இப்போதும் உள்ளது.
புற்று மண்ணும்
பிள்ளைப் பேறும்
புற்றுமண் வெட்டிப் பொங்கல் வைத்தால் பிறக்கும் என்ற
நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக இருக்கிறது.
புற்று மண்ணை வெட்டி எடுத்து, நீர்
ஊற்றி, பக்குவப்படுத்தி, மூன்று பெரிய உருண்டைகளாக உருட்டி, உலர வைக்க வேண்டும். ஒரு
வாரம் உலர்ந்து கெட்டியான பிறகு அந்த உருண்டைகளை அடுப்பாகப் பயன்படுத்தி, பொங்கல் பொங்கி,
இறை வழிபாடு செய்தால் குழந்தை பிறக்கும். இந்த வழிபாட்டு முறை இப்பொழுதும் உண்டு.
புற்று வழிபாட்டுப்
பாடல்
கிராமப்புற மக்கள் புற்று வழிபாட்டின் போது
பாடும் பாடல்,
”புற்று புற்று நாகரே
பூமி இடம் கொண்டவரே
மணிப் பிரம்பு போல
வால் அழகு நாகரே
சிறு சுளகு போலப்
படம் எடுக்கும் நாகரே
குண்டு முத்துப் போலக்
கண்ணழகு நாகரே
பச்சரிசி போலப்
பல்லழகு நாகரே
பள்ளர் மகன் பள்ளன்
தேவேந்திர குடும்பன்
கொட்டி மண்வெட்டி எடுத்துக்
குளத்ருகே போனான்
இருபுறமும் பாதை ஒதுக்கி
வழி விடுவாய் நாகரே
புற்று வழிபாட்டு
முறைகள்
புற்றை வழிபடுவதற்கு முக்கிய வழிமுறைகளாக சக்தியின் ஓர் அம்சமான மாரியம்மனை
வழிபடுகின்ற முறைகளில் எல்லாவழிகளிலும் புற்றையும் வழிபடலாம்.
புற்று இருக்கும் இடத்தில் சாணத்தால் மெழுகிக்
கோலமிடுகின்றனர். புற்றின் மேல் மஞ்சளும் சந்தனமும் பூசிக் குங்குமப் பொட்டுகள் வைக்கின்றனர்.
வேப்பந் தழைகளால் புற்றையும் மூடுகின்றனர். அப்போது புற்று ஒரு தெய்வ வடிவம் போல காட்சி
தருகின்றது. சுமங்கலிகள், அங்குக் குழுமியுள்ள அனைவருக்கும் பிரசாதமும், தாம்பூலமும்
வழங்குகின்றனர். அதிகமான ஆரவாரம் இல்லாத அமைதியான வழிபாடு. பக்தர்களே புற்றை நேரில்
பூசித்து வழிபடலாம்.
புற்றுக்குப் பாலும், முட்டையும், வாழைப்
பழத்துண்டுகளும் மேலோன நைவேத்தியப் பொருள்கள் ஆகும். புற்றில் செலுத்த வேண்டிய காணிக்கைப்
பொருள்களுக்குப் பூச்சூட்டி, கருப்புத் துணியுடனும், சந்தனத்துடனும், அந்தி நேரத்தில்
அவற்றைப் புற்றில் செலுத்துவார்கள்.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர் டி.செல்வராஜ், அமாரவதி பதிப்பகம், சென்னை – 600 004.
Comments
Post a Comment