Skip to main content

காக்கை

 

காக்கை

 

          காக்கையின் கருப்பு நிறத்திலும் ஒரு கடவுள் தன்மையைக் காண்கின்றார் பாரதியார்.

          காக்கைச் சிறகினிலே நந்தலாலாநின்தன்

           கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

          கருப்பான, அழகியகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? என்று கேட்கிறார் இளங்கோவடிகள். ”கரியவனைக் காணாதது கண்ணே இல்லை. காணக்கூடிய வாய்ப்பிருந்தால், இமைத்துக் காணும் கண், ஒரு கண்ணே இல்லை. இத்தகைய கொள்ளை அழகு. அவன் கருப்பாக இருந்ததால் அமைந்தது. கம்பரும் இராமனது கருப்பழகைமையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று பாராட்டுகிறார். ஏழு வண்ண வில் அந்த வானவில்; ஆனால் அதில் கருப்பின் அழகு அறவே இல்லையே! கோயில்களில் அனைத்துச் சிலைகளும் கருப்பு நிறம் கொண்டவை; கருப்பு நிறத்திலும் அழகு உண்டு; கவர்ச்சி உண்டு. எனவே கருப்பு நிறக் காக்கையும் வழிபடத்தக்கது. கரியவனான சனி பகவானும் வழி பாட்டுக்குரியவன்.

காக்கையின் சிறப்பியல்புகள்

        ”காலை எழுந்திருக்கும்; காணாமலே புணரும்;

         மாலை குளித்து மனைபுகும் – சாலவே

         உற்றாரோ டுண்ணும், உறவாடும், இவ்வைந்தும்

         கற்றாயோ காக்கை குணம்”

          காக்கைகளுக்கு ஐந்து சிறப்பியல்புகள் உள்ளன என்று பழைய தமிழ் நூல்கள் கூறுகின்றன. அவை 1. காலையில் எழும் தன்மைகொண்டவை. 2. பிறர் காணாமல் ஆணும், பெண்ணும், புணரும். காக்கைகளில் ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் காண்பது கடினம். 3. மாலையில் குளித்த பிறகே கூண்டுகளில் நுழையும். 4. உணவு கிடைத்தால் உற்றார், உறவினரோ உண்ணும். 5. தமக்குள் நன்றாக உறவாடி ஒரு கூட்டமாக வாழும். இச்சிறப்பியல்புகள் வேறு எந்த வகைப் பறவைகளுக்கும் ஒருங்கே அமைந்திருக்கவில்லை. காக்கை கரவா கரைந்துண்ணும்” ”காக்கைகள், உணவு கிடைத்தால், மறைக்காமல், எல்லாரையும் அழைத்து உண்ணும் என்று இதன் பண்பைப் பாராட்டினார் திருவள்ளுவர். மேலும், காக்கைகள், கோட்டான்களைப் பகலில் வென்று விடும் என்று அவை காலமறியும் திறத்தினை இவர் வியந்தார். காக்கைகள் எப்போதும் சுறுசுறுப்பானவை. சும்மா இருப்பதில்லை; ஒற்றுமைக்கு இவை சிறந்த சான்று, கூர்மையான அறிவுடையவை. காலம் தவறாவை.

          காகம் இயற்கை உணவை ஓசை எழுப்பாமல் உண்ணும் காக்கைகள் மக்கள் தரும் உணவுப் பொருள்களை எப்போதும் கரைந்து, பின்னரே உண்ணுகின்றன. மேலும், ஊரைத் தூய்மைப்படுத்தும் ஒரு நல்ல பணியை இவை செய்வதால், இவற்றைஊர்த்தோட்டிகள்என்று நாட்டுப்புற மக்கள் அன்புடன் அழைக்கின்றனர். எல்லா வகைப்பட்ட உணவுப் பொருள்களை உண்ணும் காக்கைகளுக்கு உணவு பஞ்சம் என்றும் இல்லை.

காக்கையின் வகைகள்

          காக்கைகள் அண்டங் காக்கை, மணிக் காக்கை என்று இருவகைப்படும். மிகக் கருப்பாக இருப்பவை அண்டங் காக்கை, மற்றவை மணிக்காக்கை.

காக்கை பற்றிய புராணக் கதைகள்

        புராணக் கதைகளில் காக்கைகளைப் பற்றிய கதைகள் இடம்பெற்றுள்ளது.

·        ஒரு முறை, இந்திரன் மகன் சயந்தன் ஒரு காக்கையின் வடிவம் கொண்டு சீதைக்குத் துன்பம் செய்தான். இதைக் கண்ட இராமன் ஒரு தருப்பைப் புல்லை மந்திரித்துச் செலுத்தினான். அது காக்கையின் ஒரு கண்ணைப் பறித்தது. அன்று முதல் எல்லாக் காக்கைகளுக்கும் இரண்டு கண்கள் இருந்தாலும், ஒரு கண்ணில்தான் பார்வை இருக்கிறது. அது சரிந்து பார்க்கும் அழகைக் ‘காக்கா பார்வை’ என்று கூறுவார்கள். மேற்குறித்த இராமாயணக் காட்சியை ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழி நினைவுப்படுத்துகிறது.

·        காவிரியாறு பெருக்கெடுத்தோடுவதற்கு ஒரு காக்கை தான் காரணம் என்று கூறுவர். இந்திரன் தனது நந்த வனம் தழைக்க விநாயகரை வேண்டினான். இவர் ஒரு காக்கையாக உருமாறி அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார். கவிழ்ந்த கமண்டல நீர் காவிரியாறாகப் பெருகியது.

இவ்வாறு இதிகாசங்களிலும், புராணங்களிலும் காக்கை இடம் பெற்றுள்ளது. இதைப் பற்றிய கதைக் காட்சிகளும் இருக்கின்றன.

காக்கை பற்றிய சகுனங்கள் – நம்பிக்கைகள்

          காக்கையைப் பற்றிய சகுனங்களும் நம்பிக்கைகளும் பல இருக்கின்றன.

·        காக்கை கரைந்தால் விருந்தினர் அல்லது தாம் விரும்பியவர்கள் வருவார்கள்.

·        காக்கைகள் சண்டையிடுவதை ஒருவர் கண்டால் அவரது குடும்பத்திலும் பிரச்சனைகள் தோன்றும்.

·        காக்கைகள் ஒரு வீட்டின் முன் கூடித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் இறப்பு வரும்.

·        இரு காக்கைகள் பேன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்ட மகளிர் கருவுறுவர்.

·        காக்கை வலமிருந்து இடப்பக்கம் போவது நல்ல சகுனம். இடமிருந்து வலம் போவது தீயது.

·        ஒருவர் மீது காக்கை எச்சமிடுவது தீய சகுனம்.

·        கனவு- காக்கை பறப்பதாகவும், கூவுவதாகவும் கனவு காண்பது தீயது. ஒருவர் தம் தலைமீது காக்கை பறப்பதாகக் கனவு கண்டால், அவரது ஆயுள் குறையும்.

·        கொடிக்கறி: கொடி – காக்கை. காக்கை சொல்லும் குறியைக் கொடிக்கறி என்று கூறுவார்கள். ஒருவர் பிரிந்து சென்றால் அவர் விரைவில் திரும்பி வருவாரா என்று கேட்பதும், அவர் வருமாறு கரைவாய் என்று வேண்டுவதும் ‘கொடிக்கறி’

கரையாய்! காக்கைப் பிள்ளாய்!

        கருமாமுகில் போல்நிறத்தன்,

உரையார் தொல்புகழ் உத்தம னை, வரக்

        கரையாய்! காக்கைப் பிள்ளாய்!”

          இப்பாடல் திருமங்கையாழ்வார் அருளிய கொடிக்கறி. பிரார்த்தனை செய்த பின், பிரிந்தவர் மீண்டும் வந்துவிட்டால் காக்கைகளுக்கு உணவு படைத்து வழிப்பட்டனர். ‘கொடிக்கறி’ என்பது அகப்பொருள் துறைகளில் ஒன்றாகும். இத்துறை அமைந்த அகப்பாடலை எல்லா கோவை நூல்களிலும் காணலாம்.

பார்வை நூல்

1. இலக்கியங்களில் வழிபாடுகள் – டாக்டர் டி.செல்வராஜ், அமாரவதி பதிப்பகம், சென்னை – 600 004.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...