பழந்தமிழர் வாழ்வில் குற்றங்களும் தண்டனை முறைகளும்
சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் மக்கள் தங்களது வலிமையைப் பிறருக்கு எதிராகப்
பயன்படுத்த முற்பட்ட போது, அது குற்றம் எனக் கருதப்பட்டது. அவ்வாறு குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனையும், மெலியோர்களுக்குப்
பாதுகாப்பும் வழங்கிடும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது.
ஒவ்வொருவரும்
தங்கள் நலனையும் உரிமையையும் இழக்காமல் இருப்பதற்கு அடுத்தவர் ஆற்ற வேண்டிய கடமையை
அரசுச் சுட்டிக்காட்டியது. தங்களுக்குரிய கடமைகளில் இருந்து தவறுபவர்களும் குற்றம் செய்தவர்கள்
எனக் கருதப்பட்டனர்.
குற்றம்
ஒருவர்
தன் நலனைப் பேணுவதற்காக அடுத்தவரின் உயிர், உடல், உடைமை முதலியவற்றிற்குத் தீங்கிழைக்கும் செயலை இன்று குற்றம்
என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
‘குற்றம்’ என்ற சொல்லுக்குப்
பிழை, பழி, துன்பம், தீங்கு எனப் பலப் பொருள்களைத் தருகிறது. குற்றம் என்பது தற்காலத்தில் உடல் பற்றிய குற்றம் என்றும், உடைமை பற்றிய
குற்றம் என்று இருவகையாகப் பகுத்துக் கூறப்படுகிறது.
குற்றங்கள்
எவ்வாறு இருப்பினும் அவை தவிர்க்கப்படவும், நீக்கப்படவும் வேண்டும். சமுதாயத்தில் குற்றங்கள் பெருக இடமளித்தால் சமூக ஒழுங்கையும்
கட்டுப்பாட்டையும் காப்பதற்கும் சமூகத்தில் அமைதி நிலவிடவும் நிறைவான வாழ்க்கை அமையவும்
குற்றத்திற்குத் தண்டணை வழங்குவது இன்றியமையாதத் தேவை என இப்பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன.
குற்றங்களைப்
பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. ”பசுவின்
பால் முலையை அறுத்தல், பெண்டிரின் கருவினைச் சிதைத்தல், தாய் தந்தையரைப்
பேணாது பிழைத்தல்” ஆகியவற்றைக்
கொடிய செயல்கள் என்று கடிந்துள்ளனர். இதனை,
”ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்
மாணிழை மகளில் கருச்சிதைத்தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்” (புறம் – 34)
எனவரும் புறநானூற்றுப் பாடல்
குற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றது.
”கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்” (குறள்-550)
என்னும் குறளுக்குப் பரிமேழலகர், ‘கொடியார்’ என்னும் சொல்லுக்குக்
கொடியவர் என்றது தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப் பார், சூறைகொள்வார், பிறனில் விழைவார் என்றிவர் பட்டியலிட்டுத் தருகின்றார். இக்குற்றங்களைச் செய்தவர்களுக்குக் கொலை தண்டனை (மரண தண்டனை) உண்டு என்பதைக்
குறள் உறுதி செய்கிறது.
குற்றங்களின்
வகைகள்
குற்றத்தின்
தன்மையைக் கொண்டு அதனை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவர் மற்றவரின் உடைமைக்கும் உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
போது அது உரிமையியல் சார் (civil) குற்றமாகக் கருதப்படுகிறது. ஒருவரது நிலத்தை இன்னொருவர் கைப்பற்றிக் கொண்டாலும், ஒருவரது பேச்சுரிமை, எழுத்துரிமை
ஆகியவை பிறரால் பாதிக்கபட்டாலும் அதனை உரிமையியல் சார் குற்றம் எனக் கருதப்படுகிறது.
ஒருவரது
உடலை இன்னொருவர் தாக்கிக் காயம் விளைவித்தல் அல்லது இன்னொருவரின் உயிர் நீக்குமாறு
அவரைத் தாக்கியிருந்தால் அது குற்றவியல் சார் (Criminal) குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாகுபாடுகள்
தொடக்கக் கால சமுதாயத்தில் இருந்ததில்லை. இன்றைய சட்டமும் நீதித்துறையும் எந்த ஒரு குற்றச் செயலுக்கும்
இவ்விரு பகுப்பின் அடிப்படையில் தண்டனை விதித்து வருகின்றனர்.
தண்டனை
சமுதாயத்தில்
குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்று உறுதி செய்யப்பட்டால் தான் அவற்றை மேலும் பெருகாமல்
தடுத்திட முடியும். இதனால் சமுதாய வாழ்வில் ஒழுங்கும் அமைதியும் நிலவும். எனவே குற்றம்
செய்பவரைத் தண்டிக்க வேண்டும் என்பதைத் திருவள்ளுவர்,
”குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்”(குறள்-549)
என்று குடிமக்களிடையே குற்றம்
புரிவோரைக் கடிவது வேந்தன் தொழில் என்றும், அது அரசனுக்கு வடுஅன்று என்றும் தெளிவுப்படுத்துகின்றார்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்றும் கொலையிற்
கொடியாரை ”வேந்து ஒறுத்தல்” என்றும் வரும் திருக்குறள் தொடர்களும்,
”அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தோரை
ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம்”
என்னும் மணிமேகலை அடிகளும்
இங்கு ஒப்பு நோக்கத் தக்கவையாகும்.
அரசனின்
ஆணைக்கு அடிபணிந்து நடத்தல் குடிமக்களின் கடமை என்று கருதப்பட்டது. மீறி நடப்பவர்கள்
குற்றம் புரிந்தவர்கள் என்று கருதப்பட்டனர்.
சங்க
இலக்கியங்களில் ஒறுத்தல் என்னும் சொல் தண்டித்தல் என்னும் பொருளில் வழங்கியது. குற்றம் செய்பவர்களை
மன்னன்,
·
துன்பம் செய்தல்,
·
பொருள் கோடல்,
·
கோறல்
என்று
மூன்று முறைகளில் தண்டித்தான்.
துன்பம் செய்தல்: ஒருவர் இழைத்தக்
குற்றத்திற்காக அவரது உடலை வருத்துதல் என்று பொருள்படும். இதற்குப் பழங்காலத்தில் கசையடி கொடுத்தல், உறுப்புகளை
நறுக்குதல் முதலிய தண்டனைகளைச் சான்றாக்க் குறிப்பிடலாம். தற்காலத்தில்
சிறையில் அடைத்தல் என்னும் தண்டனை சான்றாக உள்ளது. இதற்குச் சட்ட வல்லுநர்கள் Penal Punishment என்று அழைப்பர்.
பொருள் கோடல்: பொதுவாக இன்றைய
முறையின் படி Fine என்ற ஆங்கிலச்
சொல்லுக்கு இணையாகக் குறிப்பிடலாம். ஒருவர் இழைத்த்த் தீங்கிற்காக அவரைத் தண்டிக்கும் வகையில்
அவரிடமிருந்து பொருளைத் தண்டமாகப் பெறுவதைப் பொருள்கோடல் எனலாம்.
கோறல்: கொடிய குற்றம் இழைத்த ஒருவருக்குத் தண்டனையாக அவரைக் கொன்று
விடுதல் என்று பொருள்படும். இது இன்று மரண தண்டனை (Death sentence) என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது.
இந்த
மூன்று தண்டனைகள் தான் இந்திய தண்டனைச் சட்டத்திலும் (The Indian Penal Code,1860) குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய
தண்டனைச் சட்டத்தில் இன்றைய அளவில் ஐந்து வகையான தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,
·
மரண தண்டனை
·
ஆயுள் தண்டனை
·
சிறைத் தண்டனை
·
சொத்து பறிமுதல்
·
அபராதம் அல்லது
பணத்தண்டம்
என்பன. இவற்றை நோக்கும்போது, கி.பி.1860 இல் ஆங்கிலேயரால்
இயற்றப்பட்டு இன்றுவரை இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தண்டனை முறைகளைப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்தோன்றிய பழந்தமிழ் இலக்கியமும், இலக்கிய உரைகளும் வரையறுத்து வழங்கியிருப்பது வியக்கத்தக்கதாக
உள்ளது.
தண்டனையின்
தன்மைகள்
குற்றம்
இழைப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்பது மக்களைக் குற்றம் செய்வதில் இருந்து தடுப்பதற்கும், குற்றங்கள்
பெருகாமல் இருப்பதற்கும் ஏற்றதொரு கருவியாகக் கருதப்படுகிறது.
அரசுக்கு எதிராகப்
போரைத் தூண்டுதல்
நாட்டிற்கும்
அரசுக்கும் எதிராகப் போரக்குரல் எழுப்பிக் கலகம் செய்வது கடுங்குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு கலகம்
விளைவித்தல் கொலை தண்டனைக்குரிய குற்றச் செயலாகக் கருதப்பட்டது.
பொய்ச்சான்று
பழங்காலத்தில்
பொய்ச்சான்று (பொய்க்கரி) உரைப்பதும், கொலைத் தண்டனைக்குரிய
குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு பொய்க்கரி உரைப்போரைத் தன் பாசத்தால் பற்றிப் புடைத்து
உண்ணும் சதக்கப்பூதம் ஒன்று இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இது, நாட்டில் குற்றம்
புரிந்த மக்களைத் தண்டிப்பதற்காக அரசன் வழங்க வேண்டிய தண்டனையை வழங்குவதற்கு அரசின்
அமைப்பிற்குள் வராத இந்தச் ‘சதுக்கப்பூதம்’ என்ற அமைப்பும் இருந்தமையைப் புலப்படுத்துகிறது.
அகவாழ்வில்
குற்றத்திற்குத் தண்டனை
அகவாழ்க்கையில்
தவறிழைப்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது. தான் காதலித்த பெண்ணைக் கைவிட்ட ஒருவனுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்தண்டனை நீறுதலைப்
பெய்யும் அதாவது சாம்பலைக் கரைத்துத் தலையில் ஊற்றும் தண்டனை என்று அகநானூறு கூறுகிறது.
”திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறினிலாளன், ”அறியேன்” என்ற
திறன்இல் வெஞ்சூல் அறிகரிகடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப்பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே”
இப்பாடல், ‘அழகிய பெண்ணொருத்தியின்
அழகினைத் துய்த்துவிட்டு அவளைக் கைவிட்ட ஒருவன், ”இவளை நான் பார்த்ததும் இல்லை” என்று அறமில்லாத
கொடுமொழியைச் சான்றோர் முன் உரைத்தான்.
ஆனால்
அவையத்தார், நடந்த உண்மையை
அறிந்த சான்றினர்களைக் கொண்டு வினவி அறிந்து அவனுடைய பொய்த் தன்மையை உணர்ந்து கொண்டனர்.
எனவே
அந்தக் கொடியவனை மரக்கிளையில் இறுகக் கட்டி வைத்துத் தலையிலே நீற்றினைப் பெய்தனர். இவ்வகையிலே
அவனைத் தண்டித்தனர். என்று தெரிவிக்கின்றது.
இங்கு ‘நீறுதலைப் பெய்தல்’ என்னும் தண்டனை
குற்றம் செய்தவன் தலையில் சாம்பலைக் கரைத்து ஊற்றுதல் என்று பொருள் கொள்வதைப் போலவே
சாம்பல் உண்டாகக் காரணமாக இருக்கும் சாணத்தைக் கரைத்து ஊற்றுதல் என்று பொருள் கொள்ளவும்
இடம் உள்ளது.
நீதியின் முன்
அனைவரும் சமம்
குற்றம்
புரிந்தவர் இருவரில் ஒருவர் செல்வர் மற்றவர் வறியவர் என்ற நிலை இருந்தாலும், மன்னன் செல்வரையும், நல்கூர்ந்தாரையும்
வறியவர் ஒன்றெனவே கருதவேண்டும். அவர்தம் செயல்களை மட்டுமே கருத்தில் கொண்டு அதன்வழியே அவர்களுக்கு
முறை செய்தல் வேண்டும். இந்தச் செம்மை சால் நீதிக் கருத்தினைப் பழந்தமிழ் நூலான பழமொழி
வலியுறுத்துகின்றது.
”முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் – முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுக மாறு” (பழமொழி
206)
இப்பாடலில் நீதிபதியைத்
ஒரு தாய்க்கு உருவகித்துக் கூறிகிறது. நிதிபதி தாய் எனின், அவன் முன்பு வழக்கினைக் கொண்டுவரும் அனைவரும் அவளது மக்கள்
ஆவர். தம் மக்கள்
இருவரில் பிரித்துப் பார்க்கும் பாகுபாட்டு எண்ணம் எந்தத் தாய்க்கும் எழுவது இல்லை. தாய் எல்லோரையும்
ஒன்றெனவே கருதுவாள். அதைப்போலவே வழக்கிட வருவோர் அனைவரையும் நீதிபதி ஒன்றெனக்
கருதவேண்டும் என்பதைப் பழமொழி வலியுறுத்துகின்றது.
இப்பாடல்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் அடிப்படை நெறியை இலக்கிய நயத்துடன் எடுத்துரைக்கின்றது.
குற்றமனமும்
குற்றச் செயலும்
ஒரு
மனிதன் குற்றம் செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. தனிமனிதன் இயல்பு, குடும்பச் சூழல், சமுதாயச் சூழல், நாட்டுச் சூழல் எனச் சூழல்களும் குற்றங்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக உள்ளன. எனவே தண்டனை
வழங்குவதற்கு அக்குற்றம் செய்யப்பட்ட சூழலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஒருவரது
செயலைக் குற்றச் செயல் என்று தீர்மானிப்பதற்கு அவரது மனநிலையே முக்கியப் பங்கு வகிக்கின்றது. குற்றமனமில்லாச்
செயல், குற்றம் எனக்
கொள்ளப்படுவது இல்லை. இது ஆங்கிலச் சட்டநெறியின் சால்பினை எடுத்துரைக்கும் சட்டக்
கோட்பாடு ஆகும் இக்கருத்தை,
”ACTUS NON FACIT REUM
NISI MENS SIT REA”
என்னும் இலத்தீன் முதுமொழி
விளக்குகின்றது. இந்த முதுமொழியை,
குற்றமில்லாச் செயல்
குற்றமென ஆவதில்லை
என்று மொழி பெயர்க்கலாம். இதன் பொருள், மற்றவர்க்குத்
தீமை செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்யப்படும் கொடுஞ்செயலே குற்றச் செயலாகக்
கருதப்படும் என்பதாகும். இவ்வாறு குற்ற நோக்கத்தோடு செய்யப்படும் செயலால் விளையும்
தீமைக்கு உயர்ந்த அளவிலான தண்டனை வழங்கப்படுகின்றது.
பிறருக்கு
மனத்தளவில் துன்பம் செய்யக் கருதாமல் இருக்கவேண்டும் என்னும் கருத்தைத் திருக்குறளும்
வலியுறுத்துகின்றது. செயலை மட்டும் பார்க்காமல் செயலைத் தூண்டிய மனத்தில் ‘குற்ற உணர்வும்’ , குற்றம் செய்யும்
நோக்கமும் இருந்ததா என்பதை ஆராய்தல் வேண்டும். இதனை,
”எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை”
என்னும் குறள் ”மனத்தோடு உளவாகின்ற
இன்னாத செயல்களை எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். ஈண்டு மனத்தான்
ஆகாதவழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம்” என்று குறிப்பிடுகின்றனர். எனவே இங்கு குற்றமனத்துடன் செய்யாத செயலைப் பாவம் (குற்றச்செயல்) இல்லை என்று
உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குற்றமனத்துடன்
செய்யப்படாத செயலைப் பழந்தமிழரும் குற்றச் செயலாகக் கருதவில்லை என்பதற்கு பெண் கொலை
புரிந்த நன்னன் வரலாறு சான்றாக அமைகின்றது.
நன்னன்
என்னும் சங்ககால மன்னன் இருந்தான். ஒருநாள் அவன் நாட்டுக் காவல் மரக்கனி (மாங்கனி) நீரில் மிதந்து
வந்தது. மிதந்து வந்தது
காவல் மரக்கனி என்று அறியாத கருவுற்ற பெண் ஒருத்தி, அதை எடுத்து உண்டாள். இதைக் கண்ட காவலர்கள் அப்பெண்ணை அரசினின் முன்நிறுத்தினர். அவன் அப்பெண்ணிற்குக்
கொலைத் தண்டனை வழங்கிவிட்டான்.
காவல்
மரக்கனியை உண்பது அரசக் குற்றமாகும். அவ்வரசனை அவமதிக்கும் நோக்கத்தோடு அச்செயலைச் செய்யும் போதுதான்
அது குற்றமாகும். ஆனால் மிதந்து வந்தது காவல் மரக்கனி என்பதை அறியாமலும், அரசனை அவமதிக்க
வேண்டும் என்ற குற்ற நோக்கம் இன்றியும் செய்யப்பட்ட செயலுக்காக, அப்பெண்ணிற்குக்
கொலைத் தண்டனை வழங்கியது தவறு என்பதைச் சுட்டிக்காட்டவே அம்மன்னனைச் சங்க இலக்கியங்கள், ‘பெண்
கொலைபுரிந்த நன்னன்’ என்று பழித்துக்
கூறுகின்றன.
மேலும், சாத்தனார் என்னும்
சங்கப்புலவர், இளம் கண்டீரக்கோவைக்
காணச் சென்றார். அப்போது இளவிச்சிக்
கோவும் அங்கு வந்திருந்தான். இருவரும் புலவரை இனிது வரவேற்றனர். ஆனால், அப்புலவர் இளம்
கண்டீரக்கோவைத் தழுவிக் கொண்டார். இளவிச்சுக்கோவைத் தழுவவில்லை. அதற்குப் புலவர், ”நின் முன்னோருள் ஒருவன்
பெண்கொலை புரிந்த நன்னன் ஆவான்” என்று மறுமொழி
விடுத்தார்.
இந்நிகழ்ச்சி
நன்னன் வழங்கிய தண்டனைக்குச் சான்றோரிடையே எதிர்ப்பும் வெறுப்பும் இருந்து வந்தமையைப்
புலப்படுத்துகிறது. மேலும் குற்றமனமில்லாமல் செய்த செயலுக்குத் தண்டனை வழங்கிய
தமிழ் மன்னனைத் தமிழ் இலக்கியம் இன்று வரையில் பழித்துக் கூறுவதையும் கருத்தில் கொள்ள
வேண்டும்.
நிறைவாக,
தண்டனை
முறையின் அடிப்படை நோக்கம் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதாகும். குற்றம் செய்தவர்கள்
தண்டிக்கப்படும் போது,
·
முதல் நிலையில், அக்குற்றவாளிகள்
மீண்டும் அக்குற்றத்தைச் செய்தல் கூடாது.
”தக்காங்கு நாடி
தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து”
‘தலைசெல்லா வண்ணத்தால்’ என்னும் தொடர்
தண்டிக்கப்படுவர் மீண்டும் அக்குற்றத்தைச்
செய்யாமல் தடுக்கும் வகையில் அவருக்குத் தண்டனை அமைதல்
வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
·
இரண்டாம் நிலையில், ஒரு குற்றவாளி
தண்டிக்கப்படுவதைக் கண்டு சமுதாயத்தில் மற்றவர்களும் அக்குற்றத்தைச் செய்தல் கூடாது.
”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்ட
தனோடு நேர்”
என்னும் குறளில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்படும்போது அது சமுதாயத்தில்
பிறருக்கும் குற்றம் செய்வதற்கு அச்சத்தை உருவாக்க வேண்டும் என்றும் கருத்தை வெளிப்படுத்துகின்றது.
குற்றம் செய்தவர்கள் பயிருக்குத் தீங்கு செய்யும் களைக்கு ஒப்பிடப்
படுகின்றார்கள். பயிரும் களையும்
சேர்ந்து வளர்ந்தால் பயிரின் வளர்ச்சி குன்றும். குற்றவாளிகள் பெருகினால் நாட்டில் பொதுமக்களின் நலன் கெட்டு
விடும். எனவே களை போன்ற
குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
Comments
Post a Comment