ஆடித் திருவிழா
தமிழகத்தில் காவிரிக்குப் பொன்னி நதி என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. இக்காவிரியில் இருந்து பற்பல ஆறுகளாகக் கொள்ளிடம், வெண்ணாறு,
வடவாறு, திருமலைராஜன், முடிகொண்டான், வெட்டாறு, வீரசோழன் என்று இவை அனைத்தும் காவிரியின்
காவிரியின் முக்கிய கிளை நதிகள். இக்கிளை நதிகளின் உதவியால் செந்நெல் விளைந்து பொன்
கொழிக்கச் செய்வதால் மூல நதியான காவிரிக்குப் பொன்னி என்றும் அழைத்தனர்.
இலக்கியங்களில்
காவிரி
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,
”சோழர்தம் குலக்கொடி”
”தண்டமிழ்ப் பவை....”
”தண்ணறுங் காவிரி
தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நன்னீர் ...”
என்று கூறுகிறார்.
”தெய்வத் திருநதி” என்று இதன் தெய்வீகத்
தன்மையைக் கம்பர் தெளிவுப்படுத்துகிறார். ”பொன்னி தீர்த்தம்” என்று அப்பர் அதன் புனிதத்
தன்மையைப் புலப்படுத்துகிறார்.
காவிரியின் எழில் கொஞ்சும் கரையில் ஏர் பிடிக்கும்
உழவர் இடும் ஓசையும், மதகின் வாய்வழியே ததும்பி ஓடும் தண்ணீரின் சலசலப்பு ஓசையும்,
வெள்ளத்திலே மகிழ்ந்தாடும் மாந்தர் ஓடும் ஓசையும் பின்னி பிணைந்து ஆரவாரமிடுவதை இளங்கோவடிகள்
எவ்வளவு இனிமையாகப் பாடியுள்ளார்.
காவிரியில் புதுவெள்ளம் வரும்பொழுது காதோலை,
கருகமணிகளை வாங்கி காவிரியில் போடுவார்கள். இவ்வாறு காவிரியில் மட்டுமல்லாது மதுரை
வைகை ஆற்றிலும் வெள்ளம் வரும்பொழுது விழா எடுத்து சிறப்பிப்பார்கள் என்று பரிபாடல்
கூறுகிறது.
புதுநீர் விழாவை தமிழர்கள் கொண்டாடுவர்.
புது வெள்ளத்தில் நீராடுதல், நீந்துதல், சுனைகளில் நீராடுதல், ஆழத்தில் மண்ணெடுத்தல்,
பனி நீராடுதல் முதலிய வழக்காறுகளைப் பழந்தமிழ் இலக்கியம் எடுத்தியம்புகிறது.
நமது தமிழர் நாகரிகம் நதிக்கரை நாகரிகம்.
மேனாட்டினரின் நாகரிகம் போல் கடற்கரை நாகரிகமன்று. இத்திருநாட்டில் தவம் செய்வதும்
நலம் செய்வதும் நதிக்கரையில் தான் செய்வார்கள்.
ஆடிமாதம் முதல் மூன்று நாட்களுக்கு நதிகளில்
நீராடுதல் கூடாது. முதல் மூன்று வெள்ளம் வரும் அபாயம் இருப்பதால் நீராடுவதைத் தவிர்த்து
விடுதல் நன்று.
கிராமங்களில் ஆடி மாதத்தில் படையல் போட்டு
வழிபடுவதை ஆடிப் பிச்சையிடுவது என்று இன்றும் கொண்டாடி வருகின்றனர். மேலும் கரக
ஆட்டம், சிலம்பம் பழகுவது, உடுக்கை அடிப்பது, தெருக் கூத்து என்று இவ்விழா நாளில்
காணலாம்.
சிலப்பதிகாரத்தில் காவிரி கடலில் கலக்குமிடத்தில்
புனல் விளையாட்டு விளையாடிய அழகைச் சிறப்பிக்கிறார்.
பார்வை நூல்
1.
பண்டிகை தரும்
பண்பாடு – திருமதி கோ.சாந்தகுமாரி, எழில் நிலா பதிப்பகம், சென்னை -4
Comments
Post a Comment