பஞ்ச கவ்வியம்
பசு கொடுக்கின்ற பால், தயிர், நெய், கோசலம்,
கோமலம் ஆகிய ஐந்தின் கலவையே பஞ்ச கவ்வியம். இதனைத் தமிழில் ‘ஆனைந்து’ என்றும்
‘ஆனஞ்சு’ என்றும் கூறுவர். ”ஆனைந்தும் ஆட்டி அமரர் கணந்தொழ” என்பது திருமந்திரம்
(1832). ஆகவே, இது காலத்தால் மிக்க பழமை வாய்ந்தது.
பால், தயிர், நெய் ஆகிய மூன்றும் அபிடேகத்திற்கும்,
படையலுக்கும் ஏற்றன. விளக்கேற்ற நெய் தேவை.
காளி முதலிய உக்கிரமான தெய்வங்களின் உக்கிரத்தைத்
தணிக்கவும், விநாயகர், அனுமன் முதலிய தெய்வங்களை அலங்கரிக்கவும் தூய வெண்ணெயால் காப்பிடுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தைப் புனிதப்படுத்தவும்,
நுண்ணிய கிருமிகளை ஒழித்துச் சுத்தப்படுத்தவும் கோசலம் பயன்படுகிறது. கோயிலின் முற்றத்தை
நாளும் கோமலத்தால் (சாணத்தால்) மெழுக வேண்டும்.
திருநீற்றின் மூலம் சாணமே. ஆகவே, திருநீற்றுக்குக்
கோமல சூரணம் என்ற பெயரும் உண்டு.
”நீல கண்டர் செய்யசடை
நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதாரம் செய்யும்
மூர்த்தம் என்றால் முடிவென்னோ”
(சண்டேசுவர
நாயனார் புராணம் 21)
சேக்கிழார் சுவாமிகள் திருநீற்றின் மூலம்
சாணம் என்றும், அது அவதாரம் செய்யும் மூர்த்தம் பசு என்றும் அருளினார். ”அவதாரம்”,
”மூர்த்தம்” என்ற இரண்டு சொற்களும் உச்ச நிலைப் புனைவுகளாம். பசுவின் மேன்மையைக் குறிக்கும்.
பஞ்ச கவ்விய அபிடேகம் சிவனுக்கு மிகவும்
உகந்தது. மகா சிவராத்திரியன்று நடைபெறுகின்ற நான்கு யாமப் பூசைகளில் முதல் யாமப் பூசையில்
முதல் அபிடேகப் பொருளாக விளங்குவது பஞ்ச கவ்வியமே.
பஞ்ச கவ்வியம்
கோதனத்தில் ஐந்து- பசுவின் மடியில் பால்,
தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்து அரிய பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றை அப்பர்
சுவாமிகள் கோதனத்தில் ஐந்து என்பர். (திருக்கடுவாய்க்கரைப் புத்தூர்ப் பதிகம், பாடல்
3) இவை பஞ்ச கவ்வியமாகும்.
பார்வை நூல்
1.
டாக்டர் டி.செல்வராஜ்
- இலக்கியங்களில் வழிபாடுகள், அமராவதி பதிப்பகம், சென்னை – 600 004.
Comments
Post a Comment