சங்கு
தமிழக மக்கள் வழக்கில் குழலுக்கு முற்பட்டு
இருந்த ஊது கருவி சங்கு. இது இயற்கை தந்த இசைக்கருவி. சங்க இலக்கியத்தில் வளை
என்று அழைக்கப்பட்டது. சங்கின் ஒலி சங்க நாதம் என்று அழைக்கப்படும். சங்கொலி
மெய்யுணர்வைத் தூண்டும் வல்லமையுடையது. சங்கினைப் பண்டைத் தமிழர் குறியீடாகவும் இறைவழிபாட்டிலும்
இணைத்துக் கண்டனர். மங்கல/அமங்கல நாட்களில் ஊதப் பெற்றது. சங்கில் வலம்புரி சங்கு புனிதமாகப்
போற்றப்படுகிறது. சங்கினைக் கலைஞர்கள் தம் ஆடரங்கு, பாடரங்கு, இசையரங்குகளில் பயன்படுத்தியுள்ளனர்.
சங்கு திருமாலிற்குரிய சின்னமாகப் போற்றப்படுகிறது. சங்கு/கோடு/வளை வலம்புரி என்று
சங்க இலக்கியங்களில் பதியப் பெற்றுள்ளது.
பண்டைத் தமிழ் மக்கள் இறைவழிபாட்டிவ் முருகனை
வணங்கும் வழிபாட்டில் சங்கு பயன்படுத்தப் பெற்றமையைத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது.
”அந்தரப் பல்லியங்கறங்கத் திண்காழ்
வயி
ரெழுந்திசைப்ப வால்வளை ஞரல (தி.முருக:119-120)
என்ற பாடல்
வழி அறிய முடிகிறது.
சங்க காலச் சமயச் சடங்கில் சங்கு திருமாலுக்குரிய
அடையாளமாகவும் குறிக்கப் பெற்றுள்ளது என்பதை,
“வலம்புரி வய நேமியவை (பரி:15:59)
என்ற பாடல்
அடியின் மூலம் அறிய முடிகிறது. மேலும் அவனது வாய்மொழி சங்கு/வேத/இடிமுழக்கத்திற்கு
ஒப்பாகவும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதனை,
”வலம்புரி வாய்மொழி அதிர்வு வான் முழக்குச்
செல்
அவை
நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி” (பரி13:44-45)
என்ற பரிபாடல்
வழி அறிய முடிகிறது.
காலை, மாலை என பொழுதுகளை அறிவிக்கும் கருவியாகப்
பயன் பெற்றுள்ளது.
”இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவுப்
புறங்கண்ட காலைத் தோன்றி” (புறம்:397:5-6)
மேலும் பாசறையில் துயிலும் அரசன் எழும்போது
முரசும் சங்கும் ஒலித்ததை அறிய முடிகிறது. பாணர்கள் சங்கின் ஒலியைப் போல் பாடினர் என்பதை,
”விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி
வான் கோடு நரலும் இலங்கு நீர்த்” (நற்:172:7-8)
என்பதன் மூலம்
இசைக்கருவியாகக் கலை நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியங்களில்
நிகழ்த்து கலை, கலைஞர்கள் – க. காந்திதாஸ், A.M. Publications, No.11, kannandasan
Salai, T.Nagar, Chennai-600 017.
Comments
Post a Comment