ஏழிசை
இசைக்குரிய அடிப்படை அலகு சுரமெனப்படும்.
இதனைத் தமிழ் நூலார் கோவை என்பர். இவற்றை யாழிற்கு இயன்ற முறையில் நரம்பு என்னும் தந்திரி
என்றும், குழலுக்கு இயன்ற முறையில் கோல் என்றும் வழங்குவர். ஒலியெல்லாம் ஒலியனாகாது
போல ஒலியெல்லாம் சுரமாகாது. ஓர் ஒலி, பின்னணியில் ஒலித்தளமாய் இயங்கும் அடிப்படை ஒலியோடு
இணைந்தியங்கும் போதே சுரம் அல்லது கோவை எனப்பெயர் பெறும். அடிப்படை ஒலி ‘குரல்’ எனப்பெறும்.
”பிழையா மரபின் ஈரேழ் கோவையை
உழைமுதற் கைக்கிளை இறுவாய் கட்டி” (சிலம்பு,
8:31-32)
என்பர் இளங்கோவடிகள்.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன தமிழ்க்குரிய ஏழிசைக் கோவைகள்
ஆகும். இவ்வாறு குரல் முதலாகச் சொல்லு மரபு சங்க இலக்கியத்தில் உண்டு என்பதை உய்த்துணரலாம்.
”பாடுதுறை முற்றிய பயனதெரி கேள்விக்
கூடுகொள் இன்னியம் குரல்குரல் ஆக
நூனெறி மரபிற் பண்ணி” (சிறுபாண்,226-228)
”குரல்புணர் சீர்க்கொளை வல்பாண் மகனும்மே”
(புறம்,11:15)
”வளைவாய்ப் பேடை வருதிறம் பயிலும்
இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்” (அகம்,33:6-7)
”விருந்தின் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும்”(நற்,172:7-8)
”வீழுநர்க கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல்
ஏழுந்தன் பயன்கெட இடைநின்ற நரம்புறூஉம்” (கலி,8:9-10)
இவ்வேழ் நரம்புகளுள்
குரல், இளி தவிர்த்த ஏனைய ஐந்தும் இரண்டிரண்டு வகை பெற இவ்வேழும் பன்னிரண்டு நிலத்தின்
கண்ணின்று இயங்கும். இவ்வேழ் கோவைக்கும் உரிய ஒலியெழுத்துக்களாகத் தமிழர் ஆ, ஈ, ஊ,
ஏ,ஓ, ஔ என்னும் நெடில் ஏழையும் கொண்டனர் என்பது திவாகரத்தால் அறியப் பெறும். சட்சம்
ரிடபம் முதலான வடசொற்கள் புகுந்தகாலத்து இசை சரிகபமதநி என்று உருப்பெற்றன.
”சரிகம பதநி என்றேழ் எழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் தெரிவரிய
ஏழிசையுந் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை” (சிலம்பு, 3:26-30)
என்பது அடியார்க்கு
நல்லார் உரை மேற்கோளாகும்.
பார்வை நூல்
1. சங்க இலக்கியத்தில் கலையும் கலைக் கோட்பாடும், கு.வே. பாலசுப்ரமணியன்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600 098, ஜீலை 2016.
Comments
Post a Comment