மனம்
மனித மனம் மிகவும் விசித்தரமான போக்கினைக்
கொண்டது. அதனால்தான் மனிதன் விலங்குகளிலிருந்து மாறுபட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையோடு
செயலாற்றுகின்றான். ‘நினைவாற்றல்’ (Memory power) என்பது மனிதனுக்குக் கிடைத்த பெரும்பேறாகும்.
நினைவாற்றலின் துணைகொண்டே மனிதமனம் இயங்குகின்றது. ‘மனம்’ எது என்பதை வரையறுப்பதில்
அறிஞர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலர் ‘மூளை’ என்பதே மனம் என்கின்றனர்.
சிலர் ஆத்மா வே மனம் என்கின்றனர். ஆன்மா என்பதும் ஆத்மா என்பதும் ஒரே பொருளைத்தான்
தருகின்றது. ”ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு உண்டென்ற கருத்து வேதங்களின் வெளிப்படையாகக்
காணப்படவில்லை. ஆனால் உடல் அழியும் ஆன்மா அழிவதில்லை. ஒருவன் இறந்தாலும் அவனுடைய ஆன்மா, அவன் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்ப
மோட்சத்திற்கோ நரகத்திற்கோ செல்லும் என்ற கருத்துக்கள்” ஆன்மாவைப் பற்றி நிலவுகின்றன.
மனித மனத்தை உளவியலார் நனவு மனம், நனவிலி
மனம் என இரண்டாகப் பிரிப்பர். மனிதனின் செயற்பாடுகளுள் பெரும்பான்மையும் நனவிலி மனத்தால்
இயக்கப்படுகின்றன. நரம்புதளர்ச்சி நோயைக் குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட
பிராய்டு, நனவிலி மனம் பற்றிய பல புதிய உண்மைகளைக் கண்டறிந்தார். அவற்றுள் ஒன்றே ஹிப்னாட்டிசம்
என்பதாகும். இது ஓர் அறிதுயில் முறையாகும். இம்முறையில் நோயாளியைத் தூங்கச் செய்யும்
போது அவனது அகமனச் செயற்பாடுகள் பலவற்றைக் கண்டறிய முடியும் என்றார் பிராய்டு.
மனம் ஒரு குரங்கு (Mind is a monkey). அது
ஒரு கற்பனைக் குதிரைப் போன்றது. அது தன் விருப்பம் போல எண்ணங்களையும் ஆசைகளையும் நினைத்துக்
கொண்டே இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகள் மனிதனின் அடிமனத்தில் சென்று தேங்குகின்றன.
அடிமனத்திலுள்ளவைகளை ஒருவன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருக்க முடியாது.
அது அவனை அறியாமலேயே சில சமயங்களில் வேற்று வடிவத்தில் வெளிவர முயலுகின்றன. அவை ஈட்
(ID) என்னும் தூண்டுதலினால் (Induvidual Desire) வெவ்வேறு வடிவங்களில் தம்மை
வெளிக்காட்டத் துடிக்கின்றன. சில நேரங்களில் கவிதைகளாகவும், கனவுகளாகவும், சிறுகதை
வடிவிலும் அவை வெளிப்படுகின்றன. பொய், கேலிப் பேச்சு போன்ற செயற்பாடுகளாகவும் அவை சமயத்தில்
அமையும்.
மனத்தை மேல்மனம், நடுமனம், அடிமனம், என்றும் மேலும் வகைப்படுத்தலாம். இவற்றுள்
அடிமனம் என்பதே பிராய்டு குறிப்பிடும் நனவிலி மனம் ஆகும், அடிமனத்தை `id’ என்னும் தூண்டல் `Ego’ என்னும் ஆணவம் (தான், மமதை), `Super Ego’ என்றும் மனச்சான்று
(Conscience) ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையன.
`id’ என்பது குழந்தை மனம் போன்றது. அது விரும்பியதை எல்லாம்
அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. ஈட்டின் விருப்பங்களை ஈகோ பூர்த்தி செய்கிறது.
ஆனால் `Super Ego’ வின் அனுமதி பெற்றுத்தான்
எதையும் செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளது. மனிதன் பலவீனமான மனப் போக்கைக் கொண்டவன்.
நாட்டின் பல்வேறு குற்றவாளிகளையும் மனநோயாளிகளையும் பார்க்கும்போது, அவர்கள் அவ்வாறு
மாறியதற்குக் காரணம், அவர்களது அடிமனத்திலுள்ள ‘ஈட்’ என்னும் தூண்டலுக்கும் `Ego’ என்னும்
ஆணவத்திற்கும் (தான்) இடையே ஏற்பட்ட போராட்டமும் அதன் முடிவில் ஈட்டிற்குக் கிடைத்த
வெற்றியாகும்.
பார்வை நூல்
1.
கருப்பத்தேவன்.உ.முனைவர்
– தமிழும் பிற துறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை
-600 050, பதிப்பு ஜீலை 2019.
Comments
Post a Comment