Skip to main content

குறுந்தொகையில் அறிவியல் சிந்தனைகள்

 

குறுந்தொகையில் அறிவியல் சிந்தனைகள்

 

     ஜார்ஜ் ஆர்வெல் ‘எது அறிவியல்’ என்ற கட்டுரையில், பொதுவாக தாவரவியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களையும், சோதனைச்சாலை தொடர்புடைய துறைகளையும் அறிவியலென நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கண்டறிந்த உண்மைகளை அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்து, என்றும் சரிபார்க்கக் கூடிய முடிவுகளைத் தருவதே அறிவியல் என ஜார்ஜ் ஆர்வெல்  அறிவியலை வரையறுத்துள்ளார். சமுதாயத்திற்குத் திமை விளைவிக்கும் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியனவற்றைத் தயாரித்த விஞ்ஞானிகளை, விஞ்ஞானிகள் என ஏற்க இயலாது. சமுதாயத்திற்கு ஆக்கம் செய்யும் அறிவியல் கண்டுபிடிப்புக்களே வரவேற்கத்தக்கன. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கொலைவெறிச் செயலுக்குத் துணைநின்ற ஜெர்மன் விஞ்ஞானிகளை ஜார்ஜ் ஆர்வெல் கடுமையாக விமரிசித்து எழுதியுள்ளார். அறிவியலும் சமூக உணர்வும் இணைந்தால்தான் அறிவியலின் பயனை மக்கள் நுகர முடியும்.

   அறிவியல் சிந்தனைகளைத் தமிழகத்திலும் இந்தியாவிலும் புதிய கண்டுபிடிக்களாகவும் கருவிகளாகவும் மாற்றும் தொடர் உழைப்பும் தியாகமும் வேகமும் இல்லாமல் போனதால்தான் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக  நேரிட்டது. சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்திருப்பது சங்கச் சான்றோர்களின் புவியியல் அறிவுக்குச் சான்றாகும். குறுந்தொகைப் பாடல்களில் சங்ககாலத்தில் காணப்பட்ட பயிரினங்களும் உயிரினங்களும் பல இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. அறிவியல் அறிஞர் இவற்றின் உண்மைகளையும் இன்மைகளையும் சுட்டிக்காட்டி அறிவியல் வளர்ச்சிக்குத் துணைநிற்கலாம்.

          குறுந்தொகைப் பாடல்களில் பலா, கொன்றை, கோங்கு, குருந்தமரம், ஓமை மரம், புன்னை, புன்கு, வேங்கை, இற்றி, வெட்சி, வாழை, முதலான மரங்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன. குன்றி, ஈங்கை, அவரை போன்ற கொடிகளும், அன்றில், கூகை, கிளி, குருவி, நாரை, பருந்து, மயில் போன்ற பறவைகளும் குறிக்கப்பெற்றுள்ளன. அணில், ஆடு, ஆமான், எருமை, குரங்கு, குதிரை, செந்நாய், நாய், மான், முதலை, புலி, யானை ஆகிய விலங்குகளும் குறிக்கப்பெற்றுள்ளன. விலங்குகள் மற்றும் பறவைகளின் பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்களும் குறுந்தொகைப் பாடல்களில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. ‘வெருகு’ என்னும் காட்டுப்பூனை வேலிகளில் வாழும். மாலை நேரத்தில் இரைதேடிச் செல்லும். இதன் பல் முல்லை அரும்பிற்கு உவமையாகக் குறுந்தொகைப் பாடல்களில் உவமிக்கப்பட்டுள்ளது. இதன் குட்டி, பிள்ளை என்றழைக்கப்படுகின்றது. கூகை என்ற கோட்டான் அல்லது பேராந்தையின் குரலைக் கேட்டுப் பெண்கள் அஞ்சுவர் எனக் கூறப்பெற்றுள்ளது. இதனை,

          ”குன்றக் கூகை குழறினும் முன்றிற்

           பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந்து உகளினும்

          அஞ்சுமன் அளித்து என் நெஞ்கம்” (குறுந்,153)

என்னும் குறுந்தொகைப் பாடல் அடிகளால் அறியமுடிகின்றது. இதைப் படிக்கும்போது சோ.தர்மனின் ‘கூகை’ என்னும் நாவல் நினைவிற்கு வருகின்றது.

          ”குவளை நாறும் குவையிருஞ் கூந்தல்

           ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்

           குண்டுநீர்த் தாமரைக் கொக்கின் அன்ன” (குறுந்.300)

என்னும் குறுந்தொகைப் பாடலில் குவளை, ஆம்பல், தாமரை மலர்கள் குறிக்கப்படுகின்றன. இப்பாடலில் வரும் ‘தேம்பொதி துவர்வாய்’ என்ற தொடர் இனிமை பொதிந்த செவ்வாய் குறித்துப் பேசுகின்றது. இது காதல் வயப்பட்டோர் உடலியல் உண்மையை அறிக்கின்றது. காமம் பற்றிய குறுந்தொகைப் பாடலின் கருத்து உடலியல் பற்றியதாகும். யானை, குளகு எனப்படும் தழையைத் தின்றபின் மதம் பிடிக்கும். அதேபோல் ஓர் அழகிய பெண்ணைப் (தலைவி) பார்த்தவுடன் ஓர் இளைஞனுக்கு (தலைவன்) அவள் மீது காமம் தோன்றுவது இயற்கை. இக்காமம் இயல்பானது. இது இழிவான விடயமன்று. இது அணங்கும் நோயுமல்ல.

          ”காமம் காமம் என்ப; காமம்

          அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்

          முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்

          மூதா தைவந் தாங்கு

          விருந்தே காமம் பெருந்தோ ளோயே” (குறுந்.204)

இது உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த அறிவியல் உண்மையாகும். சங்க காலத்தில் சூடுதாங்கும் குடுவை (Hot Flask) இருந்ததை ஓரிற் பிச்சையார் பாடிய குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது.

          ”அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

           சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே” (குறுந்.277)

இதில் வரும் ‘சேமச் செப்பு’ என்பதற்குத் தமிழண்ணல், ‘முற்காலத்தில் பெரிய மூங்கில் குழாய்களில் இருபுறமும் கணவுள்ளத்தில் துளையிட்டுத் தூய்மைப்படுத்தி வெந்நீரை ஊற்றி வைத்தால் சூடுகுறையாமல் இருந்துள்ளது. அது சேமம், பாதுகாவலான செப்பு, ‘குப்பி’ எனப்பட்டது. இன்று பிளாஸ்க் (flask) என்பதைப் போல் அன்றும் முயன்றுள்ளதை இது காட்டுகின்றது’ எனக் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. (ந.சிதம்பரம், படைப்புகளும் பார்வைகளும், ப.80). உடலியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், மருந்தியல் போன்ற அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பல குறுந்தொகையில் காணப்படுகின்றன.

  இலக்கியம் மனித வாழ்க்கையின் பல கூறுகளோடும் தொடர்பு கொண்டிருப்பதைப் போலவே அறிவியலும் மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளோடும் பிரிக்க இயலாத உறவினைக் கொண்டிருக்கின்றது. மனித உணர்வு சார்ந்த கருத்து வெளிப்பாட்டு நெறியிலமைந்த இலக்கியம், அறிவு சார்ந்த அறிவியலினால் தவிர்க்க இயலாத வகையில் பாதிக்கப்படுகின்றது. இதனால் தோன்றிதே விஞ்ஞானப் புனைகதைகளாகும்.

பார்வை நூல்

1.   உ. கருப்பத்தேவன் - தமிழும் பிறதுறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை -600 050, சூலை, 2019.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...