தமிழர் சடங்குகள்
கற்பு மணத்திற்கென்று உண்டாக்கப்பட்ட சடங்குகள்
எவை? அவை இன்றைய திருமணங்களில் நடைபெறும் சடங்குகள் போன்றவைகளா? அல்லது வேறு வகையா?
இன்றைய திருமணச் சடங்குகள் வேத முறைப்படி நடைபெறுவன என்பர். தீயின் முன் வடமொழி மந்திரங்களுடன்
நடைபெறுவன இன்றைய சடங்குகள்.
பண்டைத் தமிழர் திருமணச் சடங்குகள் வேதத்தைப்
பின்பற்றியன அல்ல. தீ வளர்த்து அதன் முன்னர்த்
திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை. திருமணச் சடங்குகளைச்
செய்து வைத்தற்கென்று குருமார்களோ புரோகிதர்களோ இருந்தார்கள் என்று எண்ணவும் இடமில்லை.
தமிழர்களுடைய சடங்குகளில் அக்கினிக்கு இடமில்லை. தொல்காப்பியத்திற்குப் பின்னே தோன்றிய
சங்க இலக்கியங்களில் கூட அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் சிறுபான்மையாகத்தான்
காணப்படுகின்றன.
தமிழர்களிடம் நடைபெறும் சடங்குகள் எல்லாம்
பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுவனவே. இன்றும் பருவம் வந்த பெண்களுக்கு நடத்தப்படும்
சடங்கு, கருவுற்ற மகளிர்க்கு நடத்தப்படும் வளைகாப்பு போன்றவை பெண்களாலேயே நடத்தப்படுகின்றன.
இவைகளில் ஆண்கள் தொடர்பில்லை. இச்சடங்குகளில் புரோகிதமும் இல்லை. இவைகளைப் போலவே திருமணச்
சடங்குகளும் நடைபெற்றன. தமிழர் திருமணச் சடங்கு முறைகளைப் பற்றி அகநானூற்றில் இரண்டு
பாடல்களில் கூறப்பட்டுள்ளன. 86 , 136 –ஆகிய இரண்டு பாடல்களிலும் இவைகளைக் காணலாம்.
நல்ல நாளிலே குளிர்ச்சியான திருமணப் பந்தலிலே
புதுமணல் பரப்பப்பட்டது. பந்தலிலே பூமாலைகள் புனைந்து தொங்கவிடப்பட்டன. இரவு கழிந்து
காலை நேரம் எழுந்தது. மணப்பந்தலிலே வரிசை வரிசையாக விளக்குகள் ஒளிவீசிக் கொண்டிருந்தன.
வயது நிரம்பிய பெண்கள் தங்கள் தலைகளிலே நீர்க் குடங்களைச் சுமந்து நின்றனர். பிள்ளை
பெற்ற பெண்கள் நால்வர் அந்த நீர்க் குடங்களை வாங்கி மணமகளை நீராட்டினர். நீராட்டும்போது
”இவள் கற்பு நெறியிலே தவறாமல் வாழ்க! தன் கணவனுடன் அன்புக்குரிய மனைவியாகுக” என்று
வாழ்த்துக் கூறினர். பின்னர் பெற்றோர் ”நீ சிறந்த இல்லக் கிழத்தியாகுக” என வாழ்த்தி
அவளை மணமகன் கையிலே மகிழ்ச்சியுடன் கொடுத்தனர்.
திருமண வீட்டிலே பெரிய சோற்றுக் குவியல்
இருந்த்து. திருமணம் முடிந்தபின் அனைவரும் அச்சோற்றுக் குவியலை உண்டு உள்ளம் களித்தனர்.
இது அகநானூற்றில் 86 – வது பாடலில் காணப்படுகிறது. இத்தகைய திருமணச் சடங்கின் போது
வாத்தியங்கள் முழங்கின. தெய்வத்தை வணங்கிப் பெண்ணுக்கு மலர் மாலையும், நல்லாடையும்,
நகைகளும் அணிவித்து அழகு செய்தனர் என்ற செய்தி 136 – ஆவது பாடலில் காணப்படுகின்றது.
தொல்காப்பிய காலத் தமிழர் திருமண முறை ஒரு
தனிமுறையாகும். இன்றுள்ள சடங்கு முறையும், புரோகிதர் முறையும் பண்டைத் தமிழர் கொண்டவையல்ல.
இந்த உண்மையைத் தொல்காப்பியம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
பார்வை நூல்
1.
சிதம்பரனார்.தமிழறிஞர்.சாமி,
மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் (தொல்காப்பியர் காலம்), நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை-
600 005,மார்ச் 2011.
Comments
Post a Comment