காப்பியங்களில் கோயில்கள்
சங்க
காலத்தில் முதன்முதலில் சுடுமண்ணால் கோயில்கள் கட்டப்பட்டன.
”தாமரைப் பொகுட்டில் காண்வரத் தோன்றி
சுடுமண் ஓங்கிய” (பெரும்பாண்.404-405)
சிவன் கோவிலை முக்கண் செல்வன்
நகர் என்கின்றது புறநானூறு. மரம் செங்கல், சுண்ணாம்பு, ஆகிய பொருட்களால் சங்க காலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் ஒன்று
அக்காலத்தில் சிதைவுற்றதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
”இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
எழுதணி கடவுள் போகலின் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை” (அகம்.167)
இதில் ‘இட்டிகை’ என்பது செங்கல்
கட்டடமாகும். கல்லும் இட்டிகையும்
பெய்து குற்றுஞ் செய்யப் பெற்ற நிலம் (சேனாவரையர், தொல்.சொல்.நூற்.10) என்று சேனாவரையரும் செங்கல் என்ற பொருளில் இட்டிகை என்னும்
சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். கோயில் இட்டிகையால் கட்டப்பட்டது. சுவரின் மேலிருந்த
விட்டம் இடிந்து வீழ்ந்தது. அதனால் விட்டத்தின் மேற்பகுதியில் மரத்தால் கட்டப்பட்ட மாடக்கோவிலில்
வாழ்ந்த மணிப்புறாக்கள் வேறிடம் பறந்தன. கோயில் பூசைகள் நின்றன. இதனால் சங்க காலத்தில் கோயிலின் கீழ்த்தளம் செங்கலால் கட்டப்பட்டதையும், மேலே மரத்தால்
மாடக்கோயில் கட்டப்பட்டதையும் அறிகின்றோம்.
காப்பியங்களில்
கோயில்கள்
சிலப்பதிகாரத்தில்,
”பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”
எனப் பல்வேறு தெய்வங்களுக்குக்
கோவில் கட்டப்பட்டது குறிக்கப்படுகின்றது. மணிமேகலையில்,
”குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்”
இருந்ததாகச் சுட்டப்படுகின்றது.
கடைச்
சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்த கோச்செங்கணான் என்னும் சோழமன்னன் திருமாலுக்கும்
சிவனுக்கும் எழுபது கோயில் களைக் கட்டினான். இதனை கி.பி. 8- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார்,
”இருக்கிலங்கு திருமொழியால் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன்”
எனப் பாராட்டியுள்ளார். திருமங்கையாழ்வாருக்கு
முற்பட்டவராகிய நாவுக்கரசர் செங்கணான் கட்டிய கோயில்கள் 78 என்று சுட்டி, கோயிலின் வகைகளை,
”பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோரு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழல்கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கேறி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே”
என்ற தேவாரப் பாடலில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பெருங்கோயில்
செய்குன்றுகளின்
மேல் அமைக்கப்பட்ட கோயிலாகும். யானைகள் ஏறமுடியாத வகையில் உயரமாக்க் கட்டப்பட்டதால் இது
பெருங்கோயில் எனப் பெயர்பெற்றது. படுத்துத் தூங்கும் யானைபோல் காட்சியளித்தால் இது தூங்கானை
மாடம் என்றழைக்கப்பட்டது. சோழர் காலத்தில் இரண்டு நிலை, மூன்று நிலை மாடங்கள் கட்டப்பட்டன. கி.பி.மூன்றாம் நூற்றாண்டில்
கோச்செங்கணான் கட்டிய கோயில்களும் மாடக்கோயில் வகையும் ஒன்றே. சோழநாட்டில்
வைகல் என்னும் ஊரில் இருந்தகோயில் செங்கணான் கட்டிய மாடக்கோயில் என்கின்றார் திருஞானசம்பந்தர்.
திருநாங்கூர்
மணிமாடக் கோயிலையும், திருநறையூர் மாடக் கோயிலையும் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகின்றார். இக்கோயில்கள்
செங்கற்களால் கட்டப் பெற்றவை.
கரக்கோயில்
நாவுக்கரசர், திருக்கடம்பூர்
கோயில் சிவனைத் தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் என்கின்றார். ‘கரம்’ என்பதற்குச் ‘சக்கரம்’ என்பது பொருளாகும். சக்கரங்கள்
இருபக்கத்திலும் இருப்பதைப் போன்று கட்டப்பட்ட கோயில்கள் கரக்கோயில் ஆகும். நாவுக்கரசர்
குறிப்பிடும் கரக்கோயில் காட்டு மன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள மேலைக்கடம்பூர் கோயில்
என்கின்றார் டி.வி.சதாசிவபண்டாரத்தார்.
ஞாழற்கோயில்
‘ஞாழல்’ என்பதற்குக்
குங்கும மரம், புலிநகக் கொன்றை
என்னும் பொருள்கள் உண்டு. ஞாழல் மரத்தினால் அமைந்த கோயில் ஞாழக்கோயில் ஆகும். மயிலை சீனி.வேங்கடசாமி
இதனை மறுக்கின்றார். அவர் இதைக் கோயில் வகைகளுள் ஒன்று எனக்கூறி, திருப்பாதிரிப்
புலியூர்க் கோயிலைச் சான்று காட்டுகின்றார்.
கோகுடிக்கோயில்
இக்கோயில்
கொகுடி என்னும் மரத்தால் கட்டப்பட்டது என்பதை மயிலை.சீனி.வேங்கடசாமி மறுக்கின்றார். ஆயினும் அவர் இதற்குத் திட்டவட்டமான வரையறையைத் தரவில்லை.
இளங்கோயில்
பழைய
கோயில்களைப் புதுப்பிக்கும்போது, கோயிலில் இருந்த தெய்வத்தைக் கோயிலின் அருகே வைத்து வழிபாடு
செய்வர். இதற்கு இளங்கோயில்
என்று பெயர். வடமொழியில்
இதனைப் பாலாலயம் என்பர். மீயச்சூர்க் கோயில்களும் மாமல்லையிலுள்ள திரௌபதி இரதமும்
இவ்வகையின.
மணிக்கோயில்
இக்கோயிலின்
அமைப்புப் பற்றித் தெளிவான விளக்கங்கள் மற்றும் வரையறைகள் ஏதும் இல்லை.
ஆலக்கோயில்
ஆலின்
கீழ் இருந்து முனிவர்களுக்கு ஞானம் அருளிய இறைவனை, தட்சிணாமூர்த்தியின் கோயிலை குறிக்கும் என்பர். அல்லது ஆலமரத்தின்
அடிமரத்திலுள்ள கோயில்கள் ஆலக்கோயில்கள் என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆலக்கோயில்
என்பதை ஆனைக்கோயில் என்பதன் மரூஉ எனக் கொள்வாரும் உள்ளனர்.
ஆனைக்கோயில்
என்பதற்கு வடமொழியில் கஜபிருஷ்ட விமானக் கோயில் அல்லது ஹஸ்திபிருஷ்ட விமானக்கோயில்
என்று பெயர். பிருஷ்டம் என்பதற்கு
அமர்வதற்குரிய பின்பகுதி என்று பொருள். கஜபிருஷ்டம் என்பது யானையின் பின்பகுதியைக் குறிக்கும். யானையின் பின்பகுதியைப்
போல் தோற்றமுடைய விமானத்தைக் கொண்ட கோயில் ஆலக்கோயிலாகும். விமானத்தின் கூரை யானையின் முதுகு போன்றது எனச் சிலர் கூறுகின்றனர்.
மரம், செங்கல், கற்கோயில்கள்
சங்க
காலம் வரை செங்கற்களைக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டன. செங்கற்களைப் பயன்படுத்தாமல் முழுவதும் மரங்களை பயன்படுத்திக்
கோயில்கள் அமைக்கப்பட்டதும் உண்டு. சேரநாட்டில் பழங்காலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்ட கோயில்கள்
இருந்தன. அந்த மரக்கட்டடங்கள் மழை, வெயில் ஆகிய தட்பவெப்ப நிலைகளைத்
தாங்க முடியாமல் விரைந்து அழிந்தன. எளிதில் தீப்பிடித்து எரிந்தன. மரக்கூரை (கோயில்களில்
மேற்பகுதி) மழை மற்றும் வெயிலினால் தாக்கப்பட்டு எளிதில் அழியக்கூடியது. ஆதலால் மரக்கோயில்களின்
மேற்கூரையைச் செம்புத் தகட்டினால் வேய்ந்திருந்தார்கள். செப்புத்தகடு வேய்ந்த கூரை
சில காலம் நீடித்தது. பழங்காலத்தில் மன்னர்கள் கோயில் விமானங்களுக்குச் செப்புத் தகடுகளையும்
பொன்தகடுகளையும் வேய்ந்ததைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
மரக்கட்டடங்கள் விரைந்து பழுதடைந்தால் பிற்காலத்தில்
சுடுமண்ணாகிய செங்கற்களினால் கோயில் கட்டடங்களைக் கட்டினர். ஆயினும் அவைகளும் நெடுங்காலம்
நீடிக்காமல் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் பழுதடைந்து அழிந்தன.
மரக்கட்டடங்களாக இருந்த சில கோயில்கள் பிற்காலத்தில்
கற்றளிகளாக மாற்றப்பட்டன. சிதம்பரம் கோயிலின் பழைய கட்டடங்களும் அங்குள்ள ஊர்த்துவ
தாண்டவமூர்த்தி கோயிலும் ஆதிகாலத்தில் மரக்கட்டடங்களாக இருந்தவை. பிற்காலத்தில் அவை
கருங்கற்களினால் கற்றளியாகக் கட்டப்பட்டன. திருக்குற்றாலத்துச் சித்திரசபைக் கோயில்
முன்பு மரத்தினால் கட்டப்பட்டது.
பாறைக் கோயில்கள்
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில்
மகேந்திவர்ம பல்லவன் என்னும் பல்லவ மன்னனே முதன்முதலில் தமிழ்நாட்டில் பாறைக் கற்களைக்
குடைந்து குகைக் கோயில்களை அமைத்தான். இதனை அவனது மண்டகப்பட்டுக் குகையிலுள்ள கல்வெட்டு
தெரிவிக்கின்றது. செங்கல், சுண்ணம், மரம் உலோகம் முதலான கலவை இல்லாமல் பிரம, ஈசுவர,
விஷ்ணுகளுக்கு விசித்திர சித்தன் என்னும் பல்லவ மன்னன் அமைத்தான் என்பதையும் இக்கல்வெட்டு
தெரிவிக்கின்றது. விசித்திரசித்தன் என்பது முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயராகும்.
இவனைத் தொடர்ந்து வந்த பல்லவ மன்னர்கள் பலரும் குடைவரைக் கோயில்களைக் கட்டியுள்ளனர்.
சென்னையை அடுத்த பல்லாவரத்திலும், காஞ்சிக்கு அருகிலுள்ள பல்லவபுரத்திலும் மற்றும்
மகாபலிபுரம், சாளுவன் குப்பம், மாமண்டூர், சித்தனவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) முதலான
இடங்களிலும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன.
மகாபலிபுரத்தில் பஞ்சபாண்டவர் இரதங்கள் என்று
சொல்லப்படும் அமைப்புக்களில் அர்ச்சுனன் இரதம், தருமராஜ இரதம், நகுல சகாதேவர் இரதம்
ஆகிய இரதங்கள் அமைந்துள்ளன. இவற்றில் அர்ச்சுனன் இரதம் என்பது இரண்டுநிலை மாடக் கோயிலாகும்.
தருமராஜ இரதம் மூன்று நிலை மாடக் கோயிலாகும். நகுல சகாதேவர் இரதம் மூன்று நிலையுள்ள
ஆனைக்கோயிலாகும். இவை மரத்தினால் செய்யப்பட்ட கோயில்களின் வடிவமைப்பையே பெற்றுள்ளன.
மரச்சிற்பத்தின் கூறுகள் அனைத்தையும் இவற்றில் காணலாம்.
கற்றளிகள்
கல் + தளி = கற்றளி. ‘தளி’ என்பதற்குக் கோயில்
என்று பொருள். செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப் போலக் கருங்கற்களை
அடுக்கிக் கட்டும் கோயில்களுக்குக் கற்றளி என்று பெயர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில்
இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் கற்றளிக் கோயில்கள் கட்டும் முறை தோன்றியது.
இவனுக்கு இராஜசிம்மன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. காஞ்சிபுரம் கையிலாசநாதர் கோயிலுக்கு
இராஜசிம்மேச்சுரம் என்று பெயர். இக்கோயிலைக் கட்டியவன். பளனமரம் என்னும் ஊரிலுள்ள கற்றளியும்
இவரால் கட்டப்பட்டது. இக்கற்றளிகள் 1200 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் பாதுகாப்பான
நிலையில் உள்ளன.
பார்வை நூல்
1.
கருப்பத்தேவன்.முனைவர்.உ,
தமிழும் பிற துறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவஸ் (பி) லிட்.,, சென்னை – 600 050, சூலை
2019.
Comments
Post a Comment