எண்வகை
மணம்
வடமொழி நூல்களிலே மணம் எண்வகைப்படும் என்று
சொல்லப்படுகின்றது. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், அசுரம், இராக்கதம்,
பைசாசம் என்பன.
பிரமம் – பெண் கொடுப்பதற்கு ஒத்த
கோத்திரமுடையவன்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரம்மச்சரிய விரதங்காத்தவன்; இவனுக்குப்
பருவமடைந்த பன்னிரண்டு வயதுடைய பெண்ணை, இரண்டாவது பூப்பெய்துவதற்கு முன் அணிகலன்களைப்
பூட்டித் தானமாகக் கொடுப்பது.
பிரசாபத்திய மணம் – மாப்பிள்ளை வீட்டார்
கொடுக்கும் பரிசத்தைப் போலப் பெண் வீட்டார் இரண்டு பங்கு பரிசும் கொடுத்து மணம் செய்விப்பது.
ஆரிட மணம் – காளையையும், பசுவையும்
பொன் கொம்பும், பொன் குளம்பும் உடையனவாகச் செய்து அவற்றின் இடையிலே பெண்ணுக்கு நகைகள்
பூட்டி நிறுத்தித் தக்கான் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பது.
தெய்வ மணம் – பெரிய யாகங்களைச் செய்கின்றவர்களில்
ஒருவனுக்கு அந்த யாகத்தின் முன்னே பெண்ணைத் தக்கணையாகக் கொடுப்பது.
அசுர மணம் – கொல்லும் கொடுங்காளையைப்
பிடித்து அடக்குதல், திரிகின்ற பன்றியை அம்பெய்து கொல்லுதல், வில்லை நாணேற்றுதல் முதலிய
வீரச் செயல்களைச் செய்து பெண்ணைக் கொள்ளுவது, சுயம்வர மணமும் இவைகளில் அடங்கும்.
இராக்கத மணம் – பலவந்தமாகப் பெண்ணைத்
தூக்கிக் கொண்டு போய் மணம் புரிந்து கொள்ளுவது.
பைசாச மணம் – மூத்தவர்களையும், கள்ளுண்டு
மயங்கினர்களையும், தூங்குகின்றவர்களையும் இழிந்தவர்களையும் மணந்து கொள்ளுவது பைசாச
மணம்.
கந்தருவ மணம் – கந்தவர்களிலே ஆண்
பெண் இருவர் ஒருவரை ஒருவர் கண்டபோது காதல் கொண்டு இணைவர். அது போல ஒரு ஆணும் பெண்ணும்
எதிர்ப்படும் போது காதல் கொண்டு மணமக்களாவது.
இந்த எட்டு வகை மணங்களிலே தமிழரின் களவு
மணம் கந்தருவ மணத்தைப் போன்றது என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.
”காமக் கூட்டம் காணுங் காலை
மறை ஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (தொல்.பொ.க.1)
”காமக்கூட்டம் எத்தகையது என்று காணும்
போது வேதத்தில் ஓர் புறத்திலே கூறப்படும் எண்வகை மணங்களிலேயே சிறந்த நல்ல யாழைத் துணையாகக்
கொண்ட கந்தருவர்களின் வழக்கத்தைப் போன்றதாகும்”.
வேதத்திலே கூறப்படும் மணமுறைகளைத்தான் தமிழர்கள்
பின்பற்றினார்கள் என்று சொல்வதற்கு இடமில்லை. பின்பற்றி இருப்பார்களானால் களவு மணத்தைக்
கந்தருவ மணத்திற்கு ஒப்பிட்டு உரைத்திருப்பதைப் போல, ஏனைய ஏழு திருமணங்களை ஒத்த திருமணங்கள்
இவை இவையென்று தொல்காப்பியர் கூறியிருப்பார். இவ்வாறு அவர் எங்கும் சொல்லவில்லை.
எனவே ஐந்திணை ஒழுக்கமாகிய களவு – கற்பு திருமணமும்,
கைக்கிளை மணம், பெருந்திணை வாழ்வு இம் மூன்றும்
தமிழர் வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த நாட்டில்
குடிபுகுந்தவை அல்ல; எந்த சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன் வாங்கியமையல்ல; எந்த
மொழிகளிலிருந்தும் தமிழ் மக்கள் கற்று கொண்டவைகளும் அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே
தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும்
உண்மை.
பார்வை நூல்
1.
சிதம்பரனார்.தமிழறிஞர்.சாமி,
மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் (தொல்காப்பியர் காலம்), நாம் தமிழர் பதிப்பகம்,சென்னை-
600 005,மார்ச் 2011.
Comments
Post a Comment