”விருந்தும் மருந்தும் மூணே நாள்”
ஆதிகாலந்தொட்டு மக்களிடையே உயர்ந்தோங்கி
யிருந்த பண்பு விருந்தோம்புதல், அவ்வாறு விருந்தளிப்பதும், தாம் பிறர் இல்லங்களில்
சென்று விருந்துண்பதும் இன்றும் தொடர்ந்து வரும் பழக்கம்தான். விருந்து என்பது எவ்வாறு
இருக்க வேண்டும்? விருந்திடுபவர், அவர்தம் இல்லற மேன்மை, உபசரிப்பின் தன்மை இவற்றைப்
பல இலக்கியங்கள் நமக்கு எடுத்தியம்புகின்றன.
”விருந்தும் மருந்தும் மூணே நாள்”
என்ற பழமொழியின் வழி விருந்தும் மருந்தும் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை ஒப்புமையோடு
இப்பழமொழி விளக்குகின்றது. விருந்தும், மருந்தும் மூணே நாள்!
விருந்து
நம் உற்றார், உறவினர் அல்லாத நண்பர்கள் எவரேனும்
தொலை, தூர ஊரிலிருந்து வந்தால் அதுவும் அந்நாட்களில் போக்குவரத்து வசதியும், தகவல்
தொடர்வு சாதனங்களும் அதிகமில்லாத காலங்களில் வந்தவர்கள் வந்தவுடன் அன்றே ஊர் திரும்புவது
இயலாத ஒன்று! எனவே விருந்தினராக வருபவர்கள் அவர்கள் வந்த வேலை முடிந்து சொந்த ஊர் திரும்பும்
வரை முகங்கருத்திடாமல், கூழாக இருந்தாலும் புன்னகை தவழும் முகத்தோடு அளித்தல் சாலச்
சிறந்தது என்பர். இப்படி விருந்தளித்தால் நம் இல்லத்திலேயே தங்கி விட்டால் என் செய்வது
என ஒரு ஐயம் எழும். எதைச் செய்தாலும் நாசுக்காக, நளினமாக செய்வது நம் முன்னோர்களின்
பண்பு! ஆகையால் அவரின் நிலையையும், நமது நிலையையும் புரிய வைக்க வேண்டும். அதை விருந்தளிக்கும்
விதத்திலேயே புரிய வைக்க வேண்டும்.
அதற்காக தான் விருந்தும் மருந்தும் மூன்று
நாள். ஏனெனில் அதற்குள் இரண்டும் சரியான இலக்கை
அடைய வேண்டும். வந்த விருந்தாளிக்கு உணவு போடும் முறை. ‘வெள்ளி முதல் மந்தாரை வரை’
என்று வழக்கத்தில் இருந்தது. அதாவது விருந்தினர் வந்த முதல் நாள் ராஜ உபசாரம் பலவித
பதார்த்தங்கள், முப்பழம் இவற்றோடு அன்னத்தை வெள்ளித் தட்டில் பரிமாறுவார்களாம். இரண்டாம்
நாள் உபசரிப்பின் வேறுபாட்டை! பிறகு மூன்றாவது நாள் மந்தாரை இலையில் பரிமாறப்படும்
உணவு. இப்படி மூன்று நாள் மூன்று விதமான உபசாரணைகளைக் கண்ட விருந்தாளி விருந்தளிப்போர்
இல்லம் மற்றும் மனோநிலையைக் கண்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டி ஊர் செல்ல ஆயத்தம் செய்துவிடுவர்.
எனவே தான் விருந்து மூன்று நாள் என உணர்த்திய பாங்கு நம்மை வியக்க வைக்கிறது.
மருந்து
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’
என்பர். நோயின்றி நலமாக வாழ வாழ்க்கை முறை, நம் உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சுகாதாரம்
இவையே ஆதாரமாகும்! அக்கால மக்கள் நோய் வந்தாலும் உடனே மருத்துவரையோ, மருத்துவமனையையோ
நாடிச் செல்வதில்லை. வீட்டிலேயே உள்ள மூலிகைப் பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலி,
மஞ்சள், மிளகு, துளசி இவற்றால் கஷாயம் அல்லது பொடி செய்து சிறு சிறு உடல் உபாதை
தோன்றியவுடன் பக்குவமாக செய்து மருந்தாகப் பயன்படுத்துவர். மூன்று வேளை, மூன்று நாள்
என்ற கணக்கில் பாட்டி வைத்தியமாகச் செய்வர். நோயும் குணமடைந்து விடும். அவ்வாறு மூன்று
நாள் மூன்று வேளை தரப்படும் மருந்தில் குணமாகவில்லை எனில் வேறு உபாயம் தேட வேண்டும்.
நான்காம் நாள் சிகிச்சை தேவை என்பதைச் சொல்லும் விதமே மருந்தும் மூன்று நாள்!
ஏன் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்றனர்
என்று... விருந்து அளவை மிஞ்சினால் மருந்து தேவைப்படும் என்ற நோக்கில் இப்பழமொழி வந்திருக்கலாம்
என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
பார்வை நூல்
1. ஹேமா ராமானுஜம் – பழமொழி கட்டுரைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2005.
Comments
Post a Comment