பிள்ளைகள்
தரும் இன்பம் பேரின்பம்
பாடியவர் –
பாண்டியன் அறிவுடை நம்பி
புறநானூறு, பாடல் எண்-
188
          செல்வம் நிறைந்து இருந்தாலும், கூடி உண்ணக்
கோடி சுற்றம் இருந்தாலும், பெற்றோர்க்குக் குழந்தைகள் தரும் இன்பம் குறைவில்லாப் பேரின்பம்
என்பதை விளக்கும் அழகிய பாடல்.
        படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
        உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்
        குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
        இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
        நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
        மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
        பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே
        
        பல செல்வ வளங்களைப் பெற்றிருந்தாலும், பலருடனே கூடி இருந்து உண்ணுகிற சுற்றம்
நட்பு ஆகிய பல செல்வங்கள் இருந்தாலும், தத்தித் தவழ்ந்து, தடுமாறி நடந்து, தனது அழகிய
சிறிய கையை நீட்டி, உண்கலத்தில் உள்ள உணவைத் தொட்டு எடுத்து, வாயில் போட்டும், கையால்
துழாவியும், நெய்யாலான அந்தச் சோற்றை அள்ளித் தன் உடலெல்லாம் வாரி இறைத்துக் கொண்டு
விளையாடும், பெற்றவர்களை அன்பால் மயங்கச் செய்யும் பிள்ளைகள் இல்லாதவர்களுக்குப் பிறவி
பெற்ற பயன் இல்லை. அவர்கள் வாழும் நாள் வீண் நாளே.
        
Comments
Post a Comment