புலம் பெயர் புள்
நம்
நாட்டிற்கு வெளி நாட்டிலிருந்து சில பறவைகள் வருகின்றன. பறவைகள் வெளிநாட்டிலிருந்து குளிர் காலத்தில் நம் நாட்டிற்கு
வருகின்றன. வெயில் காலத்தில்
திரும்பிச் சென்று விடுகின்றன. நீர்ப் பறவைகளில் சில விருந்தினராக வருவதாகச் சங்க நூல்கள்
கூறியுள்ளன. அவற்றை ‘வம்பப்புள்’ என்றும் அழைத்துள்ளனர்.
”பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப்
புன்னையங் கானற் புறந்தை முன்றுறை
வம்ப நாரை யின்னொலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண்புலர்” (அகம்.100)
பொறையாற்றில் கடற்கரை முற்றத்திலிருந்து
புன்னைக் கானலில் வம்பநாரை இனமாக இருந்து ஒலித்ததாக அகநானூறு கூறியுள்ளது. விருந்து என்ற
சொல் புதுமை என்ற பொருளைக் குறிக்கும். வம்பு என்ற சொல் நிலையின்மையைக் குறிக்கும் என்று தொல்காப்பியம்
கூறுகின்றது. புதியதாக வந்த
பறவை உள்நாட்டிலிருந்தும் வரலாம். வெளிநாட்டிலிருந்தும் வரலாம். வந்த பறவை நிலையின்றிச் சென்றால் அது வம்பப் பறவையாகும். காட்டு வாத்து
போன்ற கிளுவை, சிறவி ஆகிய
பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கு வரும் சிலவகை வாத்து போன்ற
பறவைகள் இமயமலைக்கு வெயில் காலத்தில் போகின்றன.
கிளுவை, சிறவி ஆகியவை
சைபீரியா முதலிய நாடுகளுக்கு வெயில் காலத்தில் செல்லுகின்றன. கடற்காக்கையும்
வெளிநாடு செல்லும் பறவையாகும். இத்தகைய பறவைகள் வெளிநாடு செல்வதைச் சங்க காலத்திலே தெரிந்திருந்தனர்
என்று இலக்கியங்கள் வழி அறியலாம். இவற்றைப் புலம்பெயர்புள் என்று சங்க காலத்தில் அழைத்தனர்.
சங்க
காலத்தில் புதுப்புள் வருவதனையும் பழம்புள் போவதனையும் கவனித்து வந்தனர்.
”புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை” (புறம்.20)
வெளிநாடுகளிலிருந்து புதுப்புள்
வந்தாலும் உள்நாட்டிலிருந்து பழைய புள் வெளிநாடு போயினும் அரசருக்குக் கேடு வருமென்று
நினைத்தனர். நாட்டில் தங்கியிருக்கும்
பறவையை ‘வதிகுருகு’ என்று குறுந்தொகை 5 - ஆம் பாடல் கூறுகின்றது. வதியும் பறவை (Resident Birds) புலம் பெயர் பறவை
(Migratory Birds) என்ற கலைச் சொற்களைச் சங்க நூல் மரபுப்படி, படைத்துக் கொள்ளலாம்.
சிலப்பதிகாரத்திலும்
சீவக சிந்தாமணியிலும் ‘ஒசனித்தல்’ என்றொரு சொல் பயில்கின்றது. இந்தச் சொல் வேறு எந்தத் தமிழ் நூல்களிலோ, திராவிட மொழிகளிலோ வழங்கியதாகத் தெரியவில்லை. இந்தச் சொல்லை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இச்சொல் அரியதோர்
அறிவியல் கலைச் சொல்லாகவே
(Scientific terminology) காணப்படுகிறது.
”என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஓசனிக் கின்ற வுறுவெயிற் கடைநாள்”
–(சிலம்பு, ஊர்காண் காதை,121-125)
ஓசனித்தல் – வெக்கையாற்
றலையெடுத்தல்; கடைநாள் – வேனிற் பின்னால்
கழிகிற நாளிலே; சிந்தாமணி ‘ஓசனிக்கின்ற
அன்னம்’ என்றார் என்று
சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் விளக்கம் கூறியுள்ளார். அடியார்க்கு நல்லார், ‘கடை நாள் – பருவத்தின் கடைநாள், ஓசனித்தல் போதற்கு ஒருபட்டு முயறல்; ஓரோர் தேயத்திற்கு
ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம் படர வென்றார்’ என்று விளக்கம் கூறியுள்ளார். ஒவ்வொரு தேசத்திற்கு ஒவ்வொரு காலம் மாறி நிகழும் என்று கூறியதால்
இங்குக் கோடையாயிருக்கும் போது வெளிநாட்டில் குளிர்காலமாயிருக்கும் என்பதை அக்காலத்தில்
தெரிந்திருந்தனர். அரும்பத உரையாசிரியர் குறிப்பிட்ட சிந்தாமணிப் பாட்டில் அன்னம்
ஓசனிக்கின்றதாகக் கூறப்பட்டுள்ளது.
”உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற
வன்னம்
படர்கதிர்த்
திங்க ளாகப் பரந்துவான் பூத்த தென்னா
அடர்பிணி
யவிழு மரம்ப லலைகடற் கானற் சேர்ப்பன்
குடைகெழு வேந்தற் கிப்பா லுற்றது கூற லுற்றேன்”
-சிந்தாமணி
– முத்தியிலம்பகம்.54
”முரிகின்ற
திரை முத்தைச் சிந்துகையாலே அதற்கு வெருவிச் சிறையடித்துக் கொள்கின்ற அன்னம்” என்று
நச்சினார்க்கினியர் இப்பாட்டின் முதல் வரிக்குப் பொருள் கூறியுள்ளார். அரும்பத உரையாசிரியரும்
அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகாரத்தில் கூரிய அரிய சிறந்த உரையை மறந்து ‘ஓசனிக்கின்ற
அன்னம்’ என்ற தொடர்க்கு நச்சினார்க்கினியர் பொதுவாகப் பொருள் கூறியுள்ளார். ஆனால்,
ஓசனிக்கின்ற அன்னம் என்பதற்கு வெக்கையால் தலையெடுக்கின்ற அன்னம், பருவத்தின் கடைநாள்
போதற்கு ஒருப்பட்டு முயலும் அன்னம் என்று வெயிலைக் குறிக்கும். கடுமையான வெயிலால் வரும்
வேனல் கட்டியை வெக்கை என்று கூறுவது இன்றும் கொங்கு நாட்டு வழக்கமாகும்.
சிந்தாமணியில் ஓசனிக்கின்ற அன்னம் என்று
கூறப்பட்டிருப்பதிலிருந்து அன்னப்பறவை வெளிநாட்டிற்கு வலசைப் போகும் என்று தெரிகின்றது.
அன்னம் என்ற பெயர் ஒருவகை பறக்கும் காட்டு வாத்துகளுக்கு இனப் பெயராகத் தமிழில் வழங்குகின்றது.
பெரும்பாலான காட்டுவாத்து இனங்கள் வெளிநாட்டிலிருந்து வலசையாகத் தமிழ்நாட்டிற்கு வருகின்றன,
போகின்றன. நற்றிணை 356 – ஆம் பாடலிலும், புறநானூறு 67 – ஆம் பாடலிலும் அன்னங்கள் தென்னாட்டிலிருந்து
வடநாட்டில் இமயமலைக்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இமயமலையைத் தாண்டிச்
சென்று சைபீரியா நாட்டில் தங்கும் பறவைகளும் உள்ளன.
புலம் பெயர்ந்து வரும் பறவைகளை இன்றும் வேடந்தாங்களிலும்,
கோடிக்கரையிலும் காணலாம். தமிழ்நாட்டுக கடற்கரைக்கும் கோடிக்கரைக்கும் இருபதுக்கும்
மேற்பட்ட வெளிநாட்டுப் பறவை இனங்கள் வருவதாக பம்பாய் இயற்கை வரலாற்றுக்கழக ஆராய்ச்சியாளர்
கண்டுபிடித்துள்ளனர்.
கடற்காக்கை இனங்களும், காட்டு வாத்து இனங்களும்
உள்ளான் இனங்களும் வெகு தொலைவிலிருந்து வலசையாகத் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. சைபீரியாவிலிருந்து
4800 கிலோமீட்டர் கடந்து இமயமலையையும் தாண்டித் தமிழ் நாட்டிற்குச் சில காட்டு வாத்து
இனங்கள் வருவதை ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து வரும் பறவைகளை
வலையில் பிடித்து காலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வளையங்களைப் பொருத்தி விடுகின்றனர்.
இந்த வளையங்கள் பின்னர் சைபீரியா முதலிய வெளிநாடுகளில்
கிடைக்கப் பெற்று வந்துள்ளன. கோடிக்கரை சங்க காலத்திலிருந்தே உள்நாட்டுப் பறவைகளும்,
வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகளும் தங்கி வாழ்ந்த இடமாயிருந்திருக்கும். கோடிக்கரையில்
இன்றும் இராமர்பாதம் என்று ஓர் இடத்தைக் காட்டுவர். அதில் இராமருடைய சுவட்டை கல்லில்
காட்டுவர்.
”வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும்
பௌவ மிரங்கு முன்றுறை
வெல்போர்
இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ்
ஆலம் போல
ஒலியவிந்
தன்றிவ் வழுங்கல் ஊரே” - அகம் .70
கோடிக்கரையில்
அருமறைக்கு இராமன் பல விழுதுகளையுடைய ஆலமரங்களில் இருந்த பறவைகளை ஒலியவித்தான் என்று
அகநானூறு 70 ஆம் பாட்டுக் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆலமரத்தில் பல பறவைகள்
இருந்து மிகுந்த ஓசை செய்ததால் அவற்றை வெல்போர் இராமன் இரைச்சலிடாதபடி செய்தான் என்று
கூறப்பட்டுள்ளது. இதற்கு பொருத்தமான விளக்கம் கூறலாம். ஆலமரத்தில் இருந்த பறவைகள் புலம்பெயர்
பறவைகளாக இருந்திருக்கலாம். அவை ஒருநாள் புலம் பெயர்ந்து சென்றிருக்கலாம். இந்த நிகழ்ச்சியையே
இராமன் பறவைகள் ஓசையை அவித்ததாக்க் கற்பனை செய்து கூறியிருக்கலாம்.
இன்று வேடந்தாங்கலில் உள்ள ஏரியில் பல பறவைகள்
வந்து தங்குகின்றன. உயர்ந்த கரைகளை உடைய இந்த ஏரியில் நீர் ஆண்டு முழுவதும் இருப்பதாலும்,
வேட்டையாடாவண்ணம் பாதுகாக்கப்படுவதாலும் பறவைகளுக்கு வேடந்தாங்கல் புகலிடம் ஆக உள்ளது.
இத்தகையதொரு பறவைகள் புகலிடத்தைப் பற்றி அகநானூறு 42 ஆம் பாடலில்,
”நாடுவறம் கூர நாஞ்சில் துஞ்சக்
கோடை
நீடிய பைதறு காலைக்
குன்றுகண் டன்ன கோட்ட யாவையும்
சென்றுசேக்
கல்லாப் புள்ள உள்ளில்
என்றூழ்
வியன்குளம் நிறைய வீசிப்
பெரும்பெயல்
பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர்
உவந்த உவகை எல்லாம்
என்னுட்
பெய்தந் தற்றே சேணிடை” - அகம் .42
நாடு வறட்சியுற்றதால்
உழவு மறந்து, கோடை நீடித்த போது குன்றுபோல இருந்த கரையுடன் கூடிய அகன்ற குளத்தில் ‘சென்று
சேக்கல்லாப் புள்ள உள்ளில்’ நிறைய மழை பொழிந்து பல்லோரும் உவந்தனர் என்று கபிலர்
கூறியுள்ளார்.
குன்று போல உயர்ந்த கரையுடன் கூடிய குளத்தின்
உள்ளில் புட்கள் சென்று சேருவது வழக்கமாயிருந்தது. மழை பெய்யாது வறட்சியுள்ளதால் குளத்தில்
சென்று சேர்ந்து தங்கும் புட்கள் இல்லை. கபிலர் கூறிய இந்த குளம் வேடந்தாங்கல் போன்ற
பறவைகள் புகலிடம் என்று கருதவேண்டும். ‘சென்று சேக்கல்லாப் புள்ளையுடைய உள்ளில்’ என்பவற்றில்
சேக்கை என்ற சொல் சங்க நூல்களில் பறவைகள் விலங்குகள் தங்கும் இடத்தைக் குறித்து வழங்கியுள்ளதைக்
காணலாம். வேடந்தாங்கல் ஏரியில் பறவைகள் சேக்கும் உள்ளில் மரங்கள் நிறைந்து உள்ளன. அதனால்
அப்பகுதி பறவைகள் புகலிடமாக உள்ளது.
பார்வை நூல்
1.
சாமி. திரு.பி.எல்,
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், சென்னை – 18, மே 2019.
Comments
Post a Comment