கற்க!
அதன் வழி நிற்க!
ஒருவருக்குக் கல்வி சிறப்பாகக் கொடுத்தால் கல்வியோடு மற்றப் பண்புகளான மரியாதை, கீழ்படிதல்,
பணிவு போன்ற அனைத்துப் பண்புகளும் வந்து சேரும். வீரத்தைப் போற்றும் புறநானூற்றில்
கல்வியின் மேம்பாடு குறித்து ஒரு மன்னனே பாடியுள்ளார்.
புறநானூறு பாடல் எண் – 183
பாடியவர்- பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின்
மேன்மையைப் பற்றி பாடியது.
கற்றல்
நன்றே! கற்றல் நன்றே!
உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை
முனியாது கற்றல் நன்றே!
பிறப்புஓர்
அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால்
தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த
பல்லோர் உள்ளும்,
மூத்தோன் வருக
என்னாது அவருள்
அறிவுடையோன்
ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த
நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால்
ஒருவனும் அவன்கட் படுமே.
பொருள்: கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் போது உதவிகள் செய்தும்,
வேண்டும் பொருள்களைத் தந்தும் பின்னாளில், இப்படி இருந்த நிலை எண்ணி வருந்தாமலும்,
வெறுப்படையாமலும் கற்பது நன்றாகும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல பிள்ளைகளுள், கல்விச்
சிறப்பால் உயர்ந்தவனைத் தாய் மனம் விரும்பும். கல்லாத பிள்ளையை எண்ணித் தாயுள்ளம் கூட
வேறுபடக் கூடும். வீட்டில் மட்டுமல்ல, வெளியில் பொது இடங்களில் கூட ஒரு குடும்பத்தில்
உள்ளவர்களில் மூத்த பிள்ளையை வருக என்று அழைத்துச் சிறப்புச் செய்யாமல், அந்தக் குடும்பத்தில்
உள்ள கற்றறிந்த பிள்ளையையே அரசனும் விரும்புவான். அந்தப் பிள்ளை சொல்வதையே அரசனும்
கேட்பான். இதுமட்டுமா? வேறு வேறு வகையாக உள்ள நான்கு குல மக்களுக்குள்ளும், கீழ்ச்
சாதிக்காரன் ஒருவன் கற்றறிவு உடையவனாய் இருந்தால், மேல் சாதியான அவனிடம் சென்று பணிந்து
கற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவான். எனவே இத்தகைய சிறப்புடைய கல்வியை எப்படியேனும்
கற்றுத் தெளிதல் அவசியம்.
Comments
Post a Comment