விக்கிரக வணக்கம்
”கடவுள் எங்கும் நிறைந்தவர். அவருக்கு ஓர் உருவமும் இல்லை. உருவம் உள்ளவர் கடவுள்
ஆகமாட்டார். ஆண்டவனுக்கு உருவம் வைத்து வணங்குவதை விட அறியாமை வேறொன்றுமில்லை”. என்று
சில மதவாதிகள் கூறுகின்றனர். மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உள்ள அறிஞர்களும் இதை
ஒப்புக்கொள்கின்றனர்.
சித்தர்கள் என்ற பெயருடைய தமிழர்களும் உருவ வணக்கத்தை வெறுத்தனர். சித்தர்கள்
என்றால் அறிஞர்கள் என்று பொருள். கல்லாலும், செம்பாலும், உருவம் செய்து வைத்துக் கடவுளை
வணங்குவதிலே பொருளில்லை என்று என்று கூறியுள்ளனர்.
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்
எங்கள் கண்ணுதலே?
தமிழ் நாட்டிலும் உருவ வணக்கமுறை இருந்ததைத்
தொல்காப்பியத்தால் அறியலாம். போலிலே வீரச் செயல் புரிந்து மறைந்து போன வீரர்களுக்குக்
கல்நட்டு வணங்கும் வழக்கம் தமிழ்நாட்டிலே இருந்தது. வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்ட
கல்லில் அவ்வீரர்கள் குடி கொண்டிருப்பதாகவே கருதினர். அந்தக் கற்களுக்குப் படையலிட்டு
வணங்கி வழிபாடு செய்தனர். விழாவெடுத்துக் கொண்டாடினர். இது தமிழர்களின் பழமையாக வழக்கம்.
இந்த வழக்கமே தமிழ்நாட்டில் விக்கிரக வணக்கத்தை வளர்த்தது.
இக்காலத்திலும் உருவம் செதுக்கப்படாத வெறுங்கற்கள்
கடவுளர்களின் பிரதிநிதிகளாகக் காட்சியளிப்பதைக் காணலாம். தமிழ் நாட்டில் பல பகுதிகளிலே
வெறும் கற்களை நட்டு, அவைகளுக்குக் காடன், மாடன், வீரன், சூரன் என்று பெயர் வைத்து
வணங்கும் வழக்கத்தை இன்றும் பார்க்கிறோம். இது தமிழர்களின் பரம்பரை வழக்கம். இறந்த
வீரர்களுக்குக் கல் நாட்டி வணங்கும் முறையைத் தொல்காப்பியம் விளக்கமாகக் கூறுகின்றது.
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை, வாழ்த்தல் என்று
இருமூன்று மரபின் கல்லொடு புணர” (தொ.பொ.புற.5)
காட்சி – கல்லைத் தேர்ந்தெடுத்தல்,
கால்கோள் – அந்தக் கல்லை நடுவதற்கான ஆரம்ப விழாச் செய்தல், நீர்ப்படை
– அந்தக் கல்லைத் தண்ணீரிலே போட்டுச் சுத்தம் செய்தல், நடுகல் – பிறகு அந்தக்
கல்லை நடுதல், சீர்த்தகு சிறப்பில் பெரும்படை – மிகச் சிறப்பாகப் படைவீரர்கள்
அந்தக் கல்லுக்கு மரியாதை செலுத்துதல், வாழ்த்தல் – எல்லோரும் கூடி அந்தக் கல்லிலே
இறந்த வீரனுடைய ஆவி குடி கொண்டிருப்பதாக எண்ணி வாழ்த்து வணங்குதல்.
தமிழர்கள் வெகு காலமாக வெறுங் கல்லை நட்டுத்
தெய்வமாக வணங்கினார்கள். சிற்பத் தொழிலிலே தேர்ந்த பின் மாண்வர்களின் உருவங்களை மரத்திலும்
கல்லிலும் செதுக்கக் கற்றுக் கொண்டனர். அந்த உருவங்களை வைத்துத் தெய்வமாக வழிபாடு செய்தனர்.
முதலில் மரத்தடியில் இவ்வுருவங்களை வைத்து வணங்கினார்கள். பிறகு அவைகளுக்குக் கோயில்கள்
கட்டத் தொடங்கினர். உலகங் கண்டு வியக்கும்படி தமிழர்கள் சிற்பக் கலையிலே சிறப்படைந்த்தற்கு
இந்த கல் நாட்டும் வழக்கம் காரணமாயிருந்தது.
வீரர்களுக்குக் கல்நாட்டிக் கொண்டாடிய இந்த
பழக்கத்திலிருந்து தான் பத்தினிப் பெண்டிர்க்குக் கல் நட்டு வழிபாடு செய்யும் முறை
பிறந்தது. அறிஞர்களுக்கும் துறவிகளுக்கும் கல்நாட்டி வணங்கும் வழக்கமும் பிறந்தது.
இன்று தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம் எண்ணற்ற பல கற்சிலைகள் காணப்படுகின்றன.
வீரர்களுக்குக் கல் நாட்டும் வழக்கம் காரணமாக தமிழர்களின் சிற்பக் கலை சிறந்து வளர்ந்துள்ளது.
பார்வை நூல்
1.
சிதம்பரனார்.சாமி,
மக்கள் வாழ்வும் ஒழுக்கமும், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 600 005.
Comments
Post a Comment