நன்றே தருக! இன்றே தருக!
புறநானூறு பா.எண்-169
பாடியவர் – காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்
பிட்டங் கொற்றனைக் காவிரிப்பூம்
பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது. புலவரின் வறுமை அவரின் பொறுமைக்கே உலை வைக்கிறது.
நும்படை செல்லும்
காலை அவர்படை
எடுத்தெறி
தானை முன்னரை எனாஅ
அவர்படை வரூஉம்காலை
நும்படைக்
கூழை தாங்கிய
அகல் யாற்றுக்
குன்று விலங்கு
சிறையின் நின்றனை எனாஅ
அரிதால் பெருமநின்
செவ்வி என்றும்
பெரிதால் அத்தைஎன்
கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி
பரிசில் வெல்வேல்
இளம்பல் கோசர்
விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த
அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம்
போலப்
பொருநர்க்கு
உரையாநின் வலன்வா ழியவே
நீ படை நடத்திப் போரிடச் செல்லும் போது,
பகைவர் எறியும் வேல் முதலான போர்க் கருவிகளுக்கு முன்னாக நீ நிற்பாய். அவர்கள், பகை
அரசர்கள் படை எடுக்கும் போதோ, நீ உன்னுடைய படைக்குத் தலைமை ஏற்று, அகன்ற ஆற்றின் நடுவே
ஒரு குன்று நின்று தடுப்பது போலப் பகைவர் படையைத் தடுத்து நிறுத்தச் சென்று விடுகிறாய்.
ஆகையால், உன்னைக் கண்டு பேசுவது என்பதே இயலாத ஒன்றாகப் போய்விட்டது. என்னுடைய கூட்டத்தார்
படும் பசித்துன்பமோ சொல்லி முடியாதது. எனவே எனக்குரிய பரிசை இன்றே தந்து என்னை அனுப்பி
வைப்பாயாக. வெற்றி வேலெறியும் இளம்கோசர் படைப் பயிற்சி செய்யும் போது, மாறி மாறி எறியும்
பெரிய இலை உடைய வலிய மரத்தூண் போலப், பகைவர்க்கு அஞ்சாது நிற்கும் உன் வெற்றியும்,
வலிமையும் மேலும் வெற்று பெற்று வாழ்க.(கையைப் பிடித்து இழுக்காத குறையாக, இப்போதே
தருவதைத் தந்து என்னைப் போக விடு என்று கெஞ்சாத குறையாகப் பாடுகிறார். பாவம், புலவரின்
வறுமை அவரின் பொறுமையை இழக்க வைக்கிறது.)
Comments
Post a Comment