பழந்தமிழ் இலக்கியங்களில்
கதிரவன்
தமிழ் நிலவுடனும், கதிருடனும், விண்ணுடனும், மேகத்துடனும், கடலுடனும், பிறந்ததாகவும், அத் தமிழ்மொழியைப் பேசும் தமிழர் உலகின் பழமையான திங்கள், கதிரவன், வானம் நட்சத்திரம், கடல், மேகங்கள் இவை
போன்று பழமை வாய்ந்தவர்கள் என்றும் புலப்படுத்திப் பேசுகின்றனர்.
”திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த
தமிழோடும் பிறந்தோம் நாங்கள்”
(பாரதிதாசன் கவிதைகள்- முதல் தொகுதி)
என்கிறார்.
கதிரவன்
என்ற சொல் முதன்முதலாக மணிமேகலைக் காப்பியஙத்தில் இடம் பெற்றிருந்தாலும், ஞாயிறு, உருகெழு மண்டிலம், உருப்பு அவிர்
மண்டிலம், செழுங்கதிர் மண்டிலம், காய்ந்து செலல் கனலி, காய்கதிர், அகன்சுடர், விரைசெலல் திகிரி முதலான கதிரவனைக் குறிப்பிடும் சொற்கள் பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் இளங்கதிர், ஒரு தனிக் திகிரி, உலகு விளங்கு
அவிரொளி, வெய்யவன், காய்கதிர்ச்
செல்வன், பரிதியஞ் செல்வன், வெஞ்சுடர் இகலி, பருதி, விரிகதிர்க்
கடவுள், நிறை கதிர்க்
கடவுள், நெடுந்தேர்
இரவி, ஏழ்பரித் தேரோன் முதலான சொற்கள் பிற்கால இலக்கியங்களில் கதிரவனைச் சுட்டும்
பெயர்களாக நிலவுகின்றன.
சங்க இலக்கியங்களில் கதிரவன்
கிழக்கே
தோன்றி மேற்கே மறைபவன் கதிரவன் எனும் உண்மையினைப் பல இலக்கியங்கள் பகர்கின்றன. கதிரவன் கடலிடைத்
தோன்றிப் ‘பலர் புகழ்
ஞாயி’றாகவும், ‘உலகு தொழத்தோன்றி
வயங்கு கதிர் விரித்த உருகெழு மண்டில’ மாகவும் ஒளிர்வதை திருமுருகாற்றுப்படையும், குறிஞ்சிப்
பாட்டும் குறிப்பிடுகின்றன. கதிரவன் மறையும் இம்மலை என்று குறிஞ்சிப் பாட்டும் நற்றிணையும்
குறிப்பிடுகின்றன.
”எல்லை செல்ல ஏமூர்பு இறைஞ்சிப்
பலகதிர் மண்டிலம் கல்சேர்பு மறைய” (குறிஞ்சிப்
பாட்டு, 215-216)
”சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறை புறம் பின்றே” (நற்றிணை, 67)
இருளைப்
போக்கி ஒளியைத் தந்து இறப்பை நீக்கி அமிர்தத்தை உலகுக்கு அளிப்பவன் கதிரவன். கதிரவனின் கதிர்கள்
உலகில் மண்டி நிற்கும் இருளைப் போக்கவில்ல எனில் உலகில் எத்தொழிலும் நடக்காது. இதனை அகநானூறு,
”பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலனேர்பு விளங்கி” (அகநானூறு-298)
என்று குறிப்பிடுகின்றது. நாளைப் பகுப்பவன்
ஆதலின் பகலவன் என்ற பெயரும், பகற்பொழுதைத் தோற்றுவிக்கும் காரணத்தினால் பகல்செய்வோனாகவும்
கதிரவன் விளங்குகின்றான்.
”பல்கதிர் மண்டிலம் செய் தாற்றி” (நற்றிணை -69)
”பகற்செய்யும் செஞ்ஞாயிறு” (மதுரைக்காஞ்சி -7)
பயன்
கருதாது பாரினைப் பகல் செய்து ஒளியூட்டி நிற்கும் கதிரவனைக் கவிஞர்கள் பலர் உவமை வாயிலாக
வருணித்துச் சிறப்புச் சேர்த்துள்ளனர்.
”அகலிரு விசும்பிற்கு ஓடம் போலப்
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிறு” (குறிஞ்சிப்பாட்டு-101-2)
காப்பியங்களில்
கதிரவன்
குணவாயில்
கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் ‘உதயகிரி’ யில் கதிரவன் தோன்றுவதை,
”உதயமால் வரை உச்சித் தோன்றி
உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி” (சிலம்பு-5:5-6)
என்று குறிப்பிடுவதோடு, அக்கதிரவன்
மறையுமிடமும் மலையென்றே குறிப்பிடுகின்றார்.
”மல்லல் மாஞால மிருளூட்டி மாமலை மேற்
செல்வன் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்ப”
(சிலம்பு-19:30-32)
”ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்று தம் நூலின் தொடக்கத்தில் பாடிய இளங்கோவடிகள்,
”மலர்பொதி யவிழ்ந்த உலகுதொழு மண்டிலம்
வேந்துதலை பனிப்ப வேந்துவாம் செழிபயன்
ஓங்குயர் கூடலூர் துயிலெழுப்ப” (சிலம்பு-14:4-9)
என்று உலகோர் கதிரவனைத்
தொழுது நின்ற காட்சியினையும் கதிரவன் மதுரை மாநகர மக்களை வைகறையில் துயிலெழுப்பிய காட்சியினையும்
ஒருங்கே புலப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
கதிரவன்
கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியதாகத் திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
”கடலணி திலகம் போலக்
கதிர்திரை முளைத்த தன்றே” (சீவக; சுரமஞ்சரி; 2053)
மணிமேகலைக்
காப்பியம் தந்த சீத்தலைச் சாத்தனார் கதிரவனை உயிர் வழங்கு பெருநெறிக்கு உவமை காட்டுவார். கதிரவன் இருப்பதை
உணரலாம். ஆனால் அவனைக்
கண்ணெடுத்து நீண்ட நேரம் கண்களாற் காணல் இயலாது. அது போல உயிரின் தன்மையும் அமைந்து கிடக்கிறது. உயிரின் காட்சி, செலவு போன்றவற்றை
உணர இயலுமே தவிர எடுத்துக் காட்ட இயலாது. கதிரவனைக் கண்ணால் கண்டு கூறல் அரிதாக இலங்குவது போல உயிர்
வழங்கு பெருநெறியும் காட்டலாகாப் பொருளாக இரங்குகின்றது.
”தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென உணர்தல் அல்ல தியாவதும்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம்பட்டது” (மணிமேலை;63-65)
பக்தி இலக்கியங்களில்
கதிரவன்
திருநாவுக்கரசர்
பெருமானின் பிறப்பினைச் சுட்ட வந்த சேக்கிழார் பெருமான், கலை தழைக்கவும் தவநெறியாளர் சிறக்க வாழவும், உலகவிருள் போக்கும்
கதிர்போல் மருணீக்கியார் பிறந்தார் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
”அலகில் கலைத்துறை தழைப்ப
அருந்தவத்தோர் நெறி வாழ
உலகில் வரும் இருள்நீக்கி
ஒளிவிளக்கு கதிர் போல
மலரு மருணீக்கியார்
வந்தவ தாரஞ் செய்தார்” (பெரிய; திருநாவுக்கரசர்-18)
காலையில் கீழ்த்திசையில் கதிரவன் தோன்றுவது,
உலகில் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். இவ்வாறு உலகில் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சியினைக்
கவிஞர், நம்பியாரூரரின் திருமணக் காட்சியைக் காண்பான் போலக் காமுற்ற மனத்துடன் கதிரவன்
உதயஞ் செய்தான் என்று குறிப்பிட்டிருப்பது தற்குறிப்பேற்ற அணியின் வகையில் அடங்கும்.
”மாமறை விதிவழாமன் மணத்துறைக்
கடன்களாற்றித்
தூமறை மூதூர்க் கங்குன் மங்கலந்
துவன்றி யார்ப்பத்
தேமரு தொடையன் மார்பன் திருமணக்
கோலங் காணக்
காமரு மனத்தான் போலக் கதிரவன்
உதயஞ் செய்தான்” (பெரிய: தடுத்தாட்-13)
கையேயி தான் முன்னாளிற் பெற்ற வரங்களில்
இரண்டிலொன்றால் சீதை கேள்வன் இராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்குத் தசரதனிடம் ஒப்புதல்
பெற்றாள். அயோத்திவாழ் மக்கள் அவதியுற்றனர். அஃறிணையுயிர்கள் வாட்டமுற்றன. இச்செயலால்
கோபமுற்ற கதிரவன் கைகேயியின் மாட்டுப் பெருஞ்சினங் கொண்டு கீழ்த்திசையில் சிவந்து எழுந்தான்
என்கிறார் கம்பர்.
”பாப முற்றிய பேதை செய்த பகைத்திறத்தினில்
வெய்யவன்
கோப முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் குரை குன்றிலே”
-(கம்ப: அயோ: கைகேயி
சூழ்வினைப்படலம்:61)
இக்கால இலக்கியங்களில்
கதிரவன்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் மகாகவி
பாரதியார்,
”புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத்
தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து
விந்தை
செய்யும் சோதி”
யினைக் காலைக்
கதிரழகின் கற்பனைகள் பாடுகின்றேன்‘ என்று கூறிப் பின்வருமாறு கதிரவனைப் புனைந்துரைத்துள்ளார்.
”தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதிகவர்ந்து சுடர்மயமாய் விந்தையினை
ஓதிப்புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினிதென் றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணையளக்குமொளி மேம்படும் ஓர் இன்பமன்றோ?
மூலத்தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும்
மேலவருமஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞானமிசை யொப்புளதோ”
-குயிற்பாட்டு
மேலும் அவர்,
”பாரடியோ! வானத்திற் புதுமையெல்லாம்
........ .........
......
உவகையுற நவநவமாத் தோன்றுங்காட்சி
யாரடியிங் கிவைபோலப் புவியின்மீதே
யெண்ணிரிய பொருள்கொடுத்து இயற்றவல்லார்
சீரடியாற் பகவேத முனிவர் சேரக் காண்பாய்”
(பாஞ்சாலி சபதம்)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காணுகின்ற பொருளெல்லாம்
அழகைக் கண்டு, அதைச் சுவை பயக்க, கவிதை மணம் மணக்க விண்டவரும் ஆவர். ”அழகுப் பொருள்
என்றும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும்” (A thing of beauty is a joy for ever)
என்பர். அம்முறையில் அவர் காணும் அழகுப் பொருளில் கதிர் ஒன்றாகும். அழகின் சிரிப்பில்
ஞாயிறு இடம் பெறுகிறது. ”ஒளிப்பொருள் நீ, நீ ஞாலத்தொரு பொருள்” என்று அஞ்ஞாயிற்றைச்
சிலிர்த்தெழும் சிங்கமாய்ப் பிறிதோரிடத்தில் நோக்குகின்றார்.
”பொங்கியும் பொலிந்தும் நீண்ட
புதுப்பிடர்மயிர் சிலிர்க்கும் சிங்கமே”
மேலும் அவர்
வானத் தகளியின் பெருவிளக்கோ என்றும், ”உன்கதிர் இருட்பலாவை உரித்து ஒளிச் சுவை யூட்டிற்றே”
என்றும், ”மலையெலாம் சோலை எல்லாம் தனைக்கின்றாய் சுடர்ப்பொன்னீரால்” என்றும்
கதிரவனைப் பாடியுள்ளார். சமுதாயவுணர்வுடன் பாடும் கவிஞர் அவர் என்பதனால்,
”பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
பயிரிட்ட உழவன் நீ
கூழுக்கு வேரும் நீயே!
குளிருக்குப் போர்வை நீயே”
என்றும் பாடியிருக்கக்
காண்கிறோம்.
நிறைவாக,
தமிழ் இலக்கியங்களில் கதிரவன் அன்றுதொட்டு
இன்று வரை தமிழ்க் கவிஞர்களால் சிறப்பிடம் தரப்பெற்று ஓர் உயரிய கற்பனையில் இடம்பெற்று
நிற்கிறான் எனலாம். பலர் புகழ் ஞாயிறாக, பலர்தொழு ஞாயிறாக விளங்கும் கதிரவன் இயற்கையில்
புதுக்கோலங்காட்டி வழங்கும் விந்தைமிகு காட்சிகள் பலப்பலவாகும். அக்காட்சிகளில் திளைத்து
மனம் இன்புறுவதே மகிழ்ச்சியும், அமைதியும் பெறுவதற்குரிய ஆறாகும்; அருமை வழியாகும்.
பார்வை நூல்
1.
சங்க இலக்கியம்
சில பார்வைகள், சி.சுப்பிரமணியன், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை -600
108.
Comments
Post a Comment