அறிவுடையார்
இயல்பு
‘எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடி கற்றோரை வருக’ என்பர் என்பது கற்றோருக்குக் கூறி சிறப்புரையாகும். கற்றவர்கள்
என்னுங்கால் கல்வி, அனுபவம், கேள்வி, தன் உணர்வு ஆகியனவற்றை அறிந்தவர்கள் என்று
கொள்ளுதல் சால்புடைத்தாகும். எல்லோருக்கும் இத்தகைய ஆற்றல் இருக்குமா எனில் ஐயமேயாகும்.
‘கல்வி கரையில’ என்பது முன்னோர் வாக்கு.
கல்விச் செல்வம் அவரவர்க்கு இயல்பாக வுள்ள அறிவினை மேலும் வளர்த்தற்குத் துணை புரிவதேயாகும்.
அறிவு பண்படுமென்றால் அதற்குக் கல்வியே கருவியாகும்.
கண்போன்று நெறி காட்டுவது கல்வியே. அத்தகைய
கல்வி கற்றோரை எந்தச் சூழ்நிலையும் மாறுபட்ட வழிக்கு இழுத்துச் செல்லாது. மாறுபாடும்
அவர்களிடம் ஒட்டி உறவாடாது. தாமரை இலைத் தண்ணீர் போன்று தன் நிலை திரியாதிருப்பதே கற்றவருக்கு
உரிய பண்பாகும்.
”வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை
யாதும் திரியாதாம்; ஆங்கே
இனம்
தீது எனினும் இயல்புடையார் கேண்மை
மனம்
தீதாம் பக்கம் அரிது” (நாலடியார் – 244)
எனும் நாலடியார்
பாடலில் வாழைக்காயைக் கனிய வைத்தற்காக வேப்ப மரத்தின் இலைகளினால் மூடி, காற்றுப் புகாமல்
வைத்தாலும் அக்காய் கனிந்த பின் இனிப்புச் சுவை மாறாமல் மூடிய இலைகளின் கைப்புச் சுவையை
அடையாது.
நண்ணியது வேம்பாயினும் அதன் இயல்பு வாழைக்
கனிக்கு எம்மாற்றமும் இயைவது இல்லை. காக்கையின் கூட்டில் குயிலின் முட்டை இருப்பினும்
குஞ்சு வெளிவந்தபின் அதன் குரல் காக்கையின் குரலாக இருப்பதில்லை. குயிலின் குரலே அதற்கு
இருக்கும். இடத்தால் மாறுபட்டாலும் இயல்பால் மாறுபடுதல் இல்லை.
தாழ்ந்த இனத்தாரிடையே கலந்து உறவாடினாலும்
தன் சிறப்பில் குறைபடாத நிலை அறிவுடையார்க்கே அமைந்த அரிய செயலாகும்.
இனம், சாதி, மதம் என்பவற்றில் பிறந்தார்
ஆயினும் கற்றார் என்றால் அவரை அவற்றால் சிறுமை செய்வது நடவாது. சங்கு சுட்டாலும் வெண்மை
தரும் என்ற முதுமொழியும் இங்கு சிந்திக்கத் தக்கதாகும்.
Comments
Post a Comment