கீழ்க்கணக்கு
நூல்களில் ‘நோய்’
‘நோய்’ என்பது ‘நொ’ எனும் வேர் சொல்லாகும். இதற்கு அகராதி நொவ்வு,
நோதல் என்று பொருள் தருகிறது. ஒன்றைத் தாக்கி நொய்மை அதாவது சிறுமை அடையச் செய்வதனால்
‘நோய்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. நோய் என்பது தளர்ச்சி, மெலிவு, துன்பம்,
வருத்தம், வியாதி, அச்சம், குற்றம், துக்கம், நோவு என்னும் பல பொருள்களிலும் வழங்கப்படுகிறது.
‘பையுளும் சிறுமையும் நோயின் பொருள்’
(தொல்,சொல்.உரி.45) உடல் மற்றும் உள்ளத்தை வருத்துவது ‘பையுள்’ எனவும் துன்பத்துடன்
கூடிய உளநோயைச் ‘சிறுமை’ (பிணி) எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நோயென்பது
எல்லா இடங்களிலும் இருப்பது என்பதை,
”நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின்
வமூஉங் கிளவி எல்லாம்
நாட்டியல்
மரபின் நெஞ்சுகொளின் அல்லது
காட்ட
லாகப் பொருள் என்ப” (தொல், பொருள்,51)
இப்பாடல் வழி
அறியலாம். மனிதனுடைய உடலையும் உள்ளத்தையும் தாக்குவதே நோய் என்று அறிய முடிகிறது. நோயினை
ஆற்றல் நோய், அவலநோய், அருநோய், இன்னாநோய், உள்நோய், கரந்தநோய், காழும்நோய், தனியாநோய்,
துன்பநோய், துஞ்சாநோய், தொடர்நோய், பசப்பு நோய், பாயல்நோய், விளியாநோய், வெப்பநோய்
என்று சங்க இலக்கியத்தில் நோய் எனும் சொல் பல பொருள்களில் வழங்கப்படுகிறது.
மக்களுக்கு நோயற்ற வாழ்வை அளிப்பதே சங்க
கால மன்னர்களின் கடமையாக இருந்துள்ளனர். ‘நோயிகழ்ந்து ஓரிஇய யாணர் நன்னாடு’ (பதிற்று.2)
என இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சிறப்பை குமட்டூர் கண்ணனாரின் பாடல் மூலம் அறியலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ‘நோய்’ எனும்
சொல் துன்பம் எனும் பொருளிலேயே பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. நோயின் இயல்பையும்
துன்பமிகுதியையும் குறிக்க பசி, எவ்வம், தன், அல்லல், தண்டா, உய்வில், உறு, மாலை,
உயிர், செயிர், கள்ள, அக, உற்ற, உள் என்னும் அடைமொழிகளுடன் வந்துள்ளன. மனிதர்களுக்கு
உண்டாகும் நோய்களுக்கு அவரவர்களே காரணமாக இருக்கின்றனர்.
·
உடல் நலனில்
அக்கறை இன்மை
·
மிகுதியான உணவு
உண்ணுதல்
·
சோம்பல்
·
தீய பழக்க வழக்கங்கள்
·
உடற்பயிற்சியின்மை
போன்றவற்றால்
நோய்கள் உண்டாகக் காண்கின்றோம். இவை எல்லாம் மனிதர் தமக்குத் தாமே நோய் செய்து கொள்ளும்
வழிகளாகும்.
”நோய்யெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை
வேண்டு பவர்” (குறள் – 320)
பிறருக்குத்
துன்பம் செய்தவர்க்கே துன்பம் வரும். ஆகவே, தான் துன்பப்படக்கூடாது எனக் கருதுபவர்
பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார் என்பது இக்குறளின் கருத்தாகும். ஆனால் ஆழ்நது பார்த்தால்
பல நுட்பமான பொருள்களைக் காணமுடியும். மருந்து தேவைப்படுவது, நோய் என்ற தீமைத் தோன்றியப்
பின்னர்தான். அதனால் நோய் வந்தபின் போக்குவதை விட வராமல் தடுப்பதே நல்லநெறி எனப்படும்.
மனிதரின் உடம்பில் வளி (காற்று), பித்தம்,
கோழை (சளி-கபம்) போன்றவை அளவோடு உடலில் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்று கூடினாலும்
குறைந்தாலும் நோய் உண்டாகும் என்பது மருத்துவ நூலோர் கூற்று. இதனை வள்ளுவர்,
”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா
எண்ணிய மூன்று” (குறள்-941)
எனச் சுட்டுகிறார்.
‘வளி’ என்பது ‘வாதம்’ என்று அழைக்கப்படுகிறது. வாதம் என்பது நோயல்ல.
ஆனால் அதன் சமநிலை உடலில் மாறுபடும்போது நோயைத் தோற்றுவிக்கும் என்று மருத்துவப் பெயர்
கொண்ட நூல்கள் (திரி-44,79, ஏலாதி – 8) கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் நோய்ப் பெயர்களும்
வகைப்படுத்தபட்டுள்ளன.
”சிக்கர் சிதடர் சீதலைபோல் வாயுடையார்
துக்கர்
துருநாமர் தூக்குங்கால் தொக்கு
வருநோய்கள்
முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும்
இன்றி வாழ்வர்” (சிறுபஞ்ச,74)
எனும் பாடல்
களப்பிரர் காலத்தில் இருந்த நோய்களை தெரியப்படுத்துகிறது. தலை நோயுடையார், பித்தர்,
வாய்ப்புற்று உடையவர், சய நோயுடையவர், மூலநோயுடையவர் ஆகியோர் தம் நோய் துன்பங்களை
முற்பிறவியில் நீக்கியார் யாரோ அவருக்கு இப்பிறவியில் நோய் எதுவும் வாராது என்று விளக்கப்பட்டுள்ளது.
·
சிக்கர் (தலைநோயுடையவர்) - Headache
·
சிகடர் (பித்துடையார்) -
Lunatic
·
சிதலை போல்
வாயுடையார் - Throat Ulcer
·
துக்கர் -
Tuverculosis
·
துருநாமர் -Piles
·
தொத்து நோயுடையார்
- Infectious Diseases
என்பன போன்ற
நோய்களின் பெயர்கள், இன்றும் இந்நோய்கள் வழக்கத்தில் உள்ளன என்பதை அறியமுடிகிறது. இதே
போல மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்வதை ‘உயிர்நோய்’ எனவும், தனக்கு மற்ற உயிரால்
வரும் துன்பத்தை ‘உறுநோய்’ எனவும் சினத்தால் வருவது ‘செயிர் நோய்’ எனவும் வழங்கப்படுகிறது.
·
கருஞ்சிரங்கு
நோய் (Black itch)
·
வெள்தொழு நோய்
(Whilte Ieprosy)
·
கல்நோய் (Vesicle calculus)
·
பெருஞ்சிரங்கு
நோய் (Scabies)
·
பேர் வயிற்றுத்
தீ நொய் (Elephant Hunger)
இவற்றை உடையவர்க்கு
அவர்களது ‘பெறுதற்கரிய துன்பத்தைத் தணித்து அவர்களுக்கு உணவைக் கொடுத்து அந்நோய்களை
நீக்கியவர்கள் மன்னவராய் யாவராலும் போற்றப்பட்டு உலகாண்டு வாழ்வார்’ (ஏலாதி.14) என்ற
செய்தியின் மூலமும் நோய் பெயர்களை அறியமுடிகின்றது.
இவ்வாறாக கீழ்க்கணக்கு நூல்களில் நோய் என்பது
துன்பம் என்ற நோக்கில் அறம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அக்காலத்தில் நிலவிய நோய்
பெயர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்நோய்க்கான மருத்துவ முறைகள் வழக்கில் இருந்தமையும்
அறிந்து கொள்ள முடிகிறது.
பார்வை நூல்
1.
சீ.கோகிலா –
பதினெண் கீழ்க்கணிக்கு நூல்களில் அறிவியல் சிந்தனைகள், ரோஸ் ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை
-62, முதற் பதிப்பு செப்,2019.
Comments
Post a Comment